முன்னணியின் பின்னணிகள் – 15 சாமர்செட் மாம்

This entry is part 33 of 37 in the series 27 நவம்பர் 2011

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன்

பழைய நினைவுகளின் அலைப்புரட்டலோடு நான் அல்ராய் கியருக்காகக் காத்திருக்கிறேன். பிற்பாடு அந்த எட்வர்ட் திரிஃபீல்ட் தொட்ட சிகரம் என்ன, அப்போது அந்தக் காலத்தில் பெற்ற சிறுமை என்ன… என நினைக்கப் புன்னகை வந்தது. ஒருவேளை என்னைச் சுற்றியிருக்கிற மக்களும், நானுமே கூட அவரது அருமையைப் போற்றத் தெரியாதவர்களாக எளிய நிலையில் இருந்தோமோ என்னவோ. அப்போது நானே பள்ளிப்பருவத்து சிறுவன்தானே, எனக்கும் என்ன தெரியும்?
காலப்போக்கில் அவரது எழுத்துக்கள் அபாரமாய் உய்த்துணரப்பட்டு பெரும் கிரீடத்தை அவருக்கு அளித்துவிட்டன. ரொம்ப காலமாக, அவர் ஆங்கிலம் கொச்சையானது, தரக்கேடானது என்ற அபிப்ராயம் நிலவி வந்தது. ஒரு மொட்டைப் பென்சில் வெச்சி எழுதறாரோ? படு கொச்சையான வார்த்தைகள் கோர்த்த நடை. மணிப்பிரவாளம். பேச்சுமொழி எழுத்துமொழிக் கதம்பச் சோறு. எந்த மனுசனும் பேசுகிறாப் போன்றதான ஒரு உரையாடல் மொழி அல்ல அவரது வசனம்.
எழுத்துவாழ்வின் பின்னாட்களில் அவர் சொல்லச் சொல்ல யாராவது எழுதினார்கள்… அப்போது அவரது உரையாடல் அம்சங்கள் மேலும் லகுவாயின. தெளிவான நீரோட்டம் கிடைத்தது அதில். அப்போதுதான் இந்த விமர்சகர்கள் அவசரமாய் ஒரு காரியம் செய்தார்கள்… அவரது பழைய நாவல்களைத் திரும்ப வாசித்துவிட்டு, இந்தக் கருத்தோட்டத்துக்கு அவரது பழைய கொச்சைத் தெறிப்புகள் மேலும் அழகு, உணர்ச்சிகளைச் சேர்த்தன, கோர்த்தன என உணரத் தலைப்பட்டார்கள். அவரது எழுத்தின் சிறப்பான காலகட்டத்தில் லேசான விரசமும் ஆபாசமும் வரவேற்கப்பட்டன. விஸ்தார வர்ணனை கொண்ட அவரது எழுத்து அநேகமாக எல்லா திரட்டு நூல்களிலும் அவரது அடையாளமாக முத்திரை பெற்றன பிற்காலத்தில். சமுத்திரம் பற்றி, கென்ட் பகுதி காடுகளின் வசந்த ருது பற்றி, தேம்ஸ் பள்ளத்தாக்கின் சூரிய அஸ்தமனம் எல்லாம் அவர் எழுத்தின் பெரும் பிரசித்தி வாய்ந்தவை. இதைச் சொல்ல சங்கடமாய்த் தான் இருக்கிறது, என்னால் தான் அவைகளை சரளமாய் வாசிக்க, கொண்டாட முடியாமல் இருக்கிறது.
நான் சிறு பிராயத்தில் இருந்தபோது, அவர் புத்தகங்கள் விற்பனை சொல்லிக்கொள்கிறாப் போல இல்லை. அவற்றில் ஒன்றிரண்டு நூலகத்தில் தடை செய்யப்பட்டன. அவரை உசத்தியாப் பேசுவது ஒரு மோஸ்தராக காலப்போக்காக இருந்தது அப்போது. துணிச்சலான யதார்த்தமான எழுத்து. அப்பிடி எழுத யார் இருக்கா இந்த நாளில்?… என பாராட்டு பெற்றார் அவர்.
இலக்கியப் பழமைவாதிகளைச் சாடும்போது, அவரை அங்கீகரிக்கிற பாவனை தன்னைப்போல அமைந்துவிட்டது. யாரோ ஒரு விமரிசகன் தன் குணாம்ச அடிப்படையில் இவரது மாலுமிகளையும் சம்சாரிகளையும் ஒரு ஷேக்ஸ்பியர்த்தனத்துடன் அடையாளங் காட்டிப் போய்ச்சேர்ந்தான். விமரிசனப் பெருந்தலைகள் கூடிக் களிக்கையில், திரிஃபீல்ட் எழுத்தில் நமது பண்பாடு சார்ந்து காணப்படுகிற வறட்டுத்தனமான மேலடி அடித்த எள்ளல் பற்றி ஹா ஹுவென்று சிலாகித்து சிலிர்த்தார்கள். அதை அவர் விடாமல் தவறாமல், இது எடுபடும் என்று கையாண்டார்.
கடலில் போய்க்கொண்டிருக்கிற ஒரு கப்பலின் முன்தளத்துக்கு அவர் தம் எழுத்தில் அழைத்துச் சென்றுகொண்டிருக்கிறபோது தொபுக்கடீர் என வார்த்தை சமுத்திரத்தில் நான் வீழ்ந்து மூழ்கிப்போனேன். எதாவது மதுவிடுதியின் மது வழங்கும் சிறு கைதுவாரம் பற்றி அவர் எழுதினால் நான் தள்ளாடினேன். அவர்கள் தேவையில்லாமல் ஐந்தாறு பக்கத்துக்கு மாறி மாறி வாழ்க்கை பற்றி, அதன் ஒழுங்குகள், அமரத்துவம் பற்றியெல்லாம் அளந்தார்கள். தத்துவ விசாரம். ஆனால் நான் ஒத்துக்கற ஒரு விஷயம் என்னவென்றால், ஷேக்ஸ்பியரின் கோமாளிகள் உப்புசப்பற்றவர்கள். அதில் சமகாலப் பாத்திரங்களை யெல்லாம் கோடி காட்டுகிறாராம், எனக்கு அது ஒட்டவில்லை…
திரிஃபீல்ட்டின் சக்தி எங்கேயெனில், தான் நன்கறிந்த ஒரு வர்க்கத்தை அவர் சித்திரரூபப் படுத்துகிறார் என்பதே. விவசாயிகள். விவசாயக் கூலிகள். கடைக்காரர்கள். மதுவிடுதியாட்கள். கப்பல் தலைவர்கள். பிற அதிகாரிகள்,. சமையல்காரர்கள். கடல்கடந்து செல்லும் பராக்கிரம வியாபாரிகள். கதைகளில் அவர் இதற்கு மேல்மட்ட சமூகப் பாத்திரங்களையும் எழுத நேர்ந்தால், அவர்கள், திரிஃபீல்டின் நன்மதிப்புக்கு உட்பட்டவரே என்று தோன்றினாலும் கூட, எதோ சுருக்கம், நெளிசல் உள்ளவராய்த்தான் இருந்தார்கள். அவரது உயர்ந்த பெரியமனிதர்கள் ரொம்பப் பெரியாட்களாய் சித்தரிப்பு கண்டார்கள். உயர்குடிச் சீமாட்டிகளோவெனில் ரொம்ப அற்புதமானவர்கள், உன்னதமான கல்மிஷமற்ற படைப்புகளாக உருவானார்கள். அவர்கள் பேசுகிற பேச்சும் ரொம்ப உயர்ந்த பாஷையாக கௌரவப்பட்ட உரையாடலாக இருந்தது. செறிவான நீள நீள வாக்கியங்களை அவர்கள் மூச்சுத் திணறாமல் பேசினார்கள். சராசரி வாழ்க்கையை அவர்கள் வாழ்வதே இல்லை.
இப்போதும் இங்கே நான், இது அவரைப் பற்றிய என் சொந்தக் கருத்து என்று சொல்லிவிட விரும்புகிறேன். ஆனால் மொத்த லோகமும் தேர்ந்த விமரிசன வட்டமும் அந்தப் பாத்திரங்களை ஆங்கில பெண்ணினத்தை உயர்த்திப் பிடித்துக் கொடியேற்றி அவர் காட்டியதாக விதந்தோதி வழிபடுகிறது. என்ன உயிர்த்துடிப்பு, நேர்த்தி மிக்கவர்கள். உயர் ஆத்மாக்கள் அவர்கள். எப்பவும் திரிஃபீல்டின் பாத்திரங்களை ஷேக்ஸ்பியரின் நாயகிப் படைப்புகளோடு ஒரு கோஷ்டி ஒப்பிட்டு நோக்குகிறது.
நமக்குத் தெரியும் – பெண்கள் இந்த சமூகத்தில் எதன்மீதாவது சார்பு நிலை, சாய்வு நிலை கொண்டவர்கள் தாம். ஆனால் கதையில் அவர்களைக் குறிப்பிடுகையில், சுயம்புப் பாத்திரங்களாக அமைத்துக் கொள்வது கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனம்தான். லட்சார்ச்சனை தான். அப்படியான சித்தரிப்புகளை இந்தப் பெண்குலம் கைவிரித்து வரவேற்கிறது தான் ஆச்சர்யம்.
ஒரு யாரோடும் ஒட்டாத எழுத்தாளனை இந்த விமரிசகர்கள் உலகத்துக்கு கவனப்படுத்த வல்லவர்கள். இப்படி ஒரு எழவும் இல்லாத ஒருத்தரைத் தூக்கி நிறுத்துவதால் உலகம் கொஞ்சம் குழம்பித்தான் போகிறது. ஆனால் அது நிலைத்து வாழாது. அந்த விமரிசக ஊழல்களையும் தாண்டி இந்த எழுத்தாளர்கள் காணாதொழிவர். அப்படியே இன்னொன்றும் நினைக்கிறேன்… எட்வர்ட் திரிஃபீல்ட் பெற்ற இந்த உயரம், இத்தனை நாள் அந்த பீடம் சரியாதிருப்பதற்கு அவரது காக்காய் பிடிக்கிற உபாயங்கள் இல்லாமல் முடியாது என்பேன்.
இவர்களுக்கு புகழ்மீது ஒரு காதல். தமது எழுத்து அல்லது கலை ஆளுமை ரெண்டாந்தரமானது என்பதினாலேயே அவர்களுக்கு புகழ்மீது அந்த போதை ஏறுகிறது. புகழ் அரிப்பே அதை அவர்களையிட்டு காட்டிக்கொடுத்து விடுகிறது. அவர்கள் ஒண்ணை மறந்து விடுகிறார்கள். திரும்பத் திரும்ப அவர்கள் பெயர் விளம்பரப்படுத்தப்படுகிறது, அப்போது அவர்கள் இருக்கிற மற்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களுடன் தான் அடையாளப்படுகிறார்கள். புதிய எழுத்தாளர்களுடன் அல்ல. இப்படி, இந்த விமர்சகக் கூத்தாடிகளால் என்னாகிறது, ஒரு காலகட்டத்தில் அறியப்படாத ஒரு எழுத்தாளரின் ஆகச் சிறந்த படைப்பு முன்னுக்குக் கொண்டுவரப்படாமல், கொண்டாடப்படாமல் அமுக்கப்பட்டு அந்தப் படைப்பு கர்ப்பப்பைக்குள்ளேயே இறந்துபடுகிறது. அதை இந்த விளம்பர வெளிச்சம் கண்டுகொள்வதே இல்லை. பாமர சனங்கள் இந்தப் படைப்பு பற்றி கேள்விப்படுவதே கூட இல்லை.
விளம்பரம், மற்ற பிரபல புத்தகங்களின் விற்பனையை பாதிக்கும் தான். ஆனால் நீங்கள் கடைக்குப் போகும்போது இவற்றில் இருந்துதான் நீங்கள் நல்லது, உயர்ந்தது, தரமானது என்று தேட வேண்டியதாகி விடுகிறது.
இது மாதிரி எந்த நெருக்கடியிலும்… நம்ம எட்வர்ட் திரிஃபீல்ட், அவரது கொடி, ஏத்திய நிலையிலேயே இருந்தது. அவர் புத்தகங்கள் விற்றன.
அவரது நாவல்கள் எனக்கு அலுப்பூட்டின. மகா பெரிய வளவள. தலையணை நாவல்கள். அவற்றின் சம்பவங்கள் அதிதமானவை. அந்த மிகையில் ஒரு ஸ், இருந்தது. சிற்றறிவு வாசகர்களுக்கு அந்த மிளகுக்காரம் வேண்டியிருந்தது. எனக்கோ அவை பழைய சோறாய் ருசியற்றிருந்தன. ஆனால் என்ன எழுதுகிறாரோ அதில் அவர் நேர்மையாய் இயங்கினார், அதைப்பற்றிக் குறைசொல்ல ஒன்றுமில்லை.
அவரது சிறந்த புத்தகங்களில் வாழ்க்கை சார்ந்த ஒரு உணர்வுவீர்யம் இருக்கத்தான் செய்தது. அவரது எந்த எழுத்திலுமே உங்களால் அந்த எழுத்தாளரை, திரிஃபீல்டை நிழலாய் அடையாளங் காண முடிந்தது. ஆரம்ப காலங்களில் அவரது யதார்த்தச் சித்தரிப்புகளுக்காக சனங்கள் அவரை விமரிசித்தார்கள், அல்லது பாராட்டினார்கள். அப்போது அப்படியான விவாதங்களை அவர்சார்ந்த விமரிசகர்கள் கிளர்த்திப் பரப்பினார்கள். அதன் நிஜம் போற்றப்பட்டது. அல்லது அதன் கடுமை எதிர்ப்பு கண்டது.
ஆனால் இந்த யதார்த்த வர்ணனை விவாதம் மெல்ல உள்ளிறங்கிக் கொண்டது காலாவட்டத்தில். ஆனால் இந்நாட்களில் அவர் பெற்ற பேர், அதனடிப்படையில் நூலகத்தில் அவரது புத்தகத்தை கையில் எடுத்த வாசகன் அந்த எழுத்தின் கரடு முரடை சகித்துக்கொள்ள முன்வந்தான். என்ன இருக்கிறது, என்று பார்க்கிற ஆவல் அவனை முந்தித் தள்ளி பொறுமைகாக்க வைக்கிறது. ஒருகாலத்தில் இதே வாசகன் இந்த சரளமற்ற நடையின் சரளைப்பாதையில் வெறுப்பாகி யிருப்பான்.
ஆக இந்த பண்பட்ட வாசகன், தி டைம்ஸ் வெளியிட்ட இலக்கிய மலர், அவர் செத்துப்போனபோது வெளியிடப் பட்டது அது… அதை நினைவு கூர்வான். வாழ்வின் அழகியல் கூறுகளை எர்வர்ட் திரிஃபீல்ட் தம் நாவல்களில் எப்படியெல்லாம் பிரமாதமாய்க் கையாண்டிருக்கிறார் என்று கட்டுரை எழுதப்பட்டதை யெல்லாம் யோசித்தபடியே அவன் கையில் எடுத்த நாவலை வாசிப்பான். அது வர்ணனைக்காலம்தான். அவரை வாசிக்கிற எவரும் அந்த வார்த்தை வெள்ளப் பெருக்கை பிரமிக்காமல் முடியாது. ஜெரமி டெய்லரின் அற்புதமான நடை ஆண்ட காலமெல்லாம் நம் மனசில் அதை வாசிக்கையில் நிழலாடும். பழமை சார்ந்த, பண்பாடு சார்ந்த ஒரு மயக்கமான மதிப்பு, புனிதம் நம்மிடம் இருக்கத்தான் செய்கிறது. ஓல்ட் இஸ் கோல்ட். அப்படியான ஒரு மாறுபட்ட நடை நமக்கு வாசிக்கக் கிடைக்கிறது. அந்த நடையின் அலங்காரம் மிகையாக நமக்குத் தெரியவில்லை. அதன் கூழாங்கல் வழவழப்பு நமக்குப் பிடிக்கிறது. கடந்த காலப் பொக்கிஷமாக நாம் அதைப் பார்க்கிறபோதே அதற்கு ஒரு அழகு, மிளிர்வு வந்துவிடுகிறது.
எட்வர்ட் திரிஃபீல்ட் மெலிதான நகைச்சுவைபட எழுதுகிறார், என்று யாராவது சொன்னால், எழுதிச் செல்கையிலேயே வார்த்தைத் தீவிரத்தைக் குறைத்து மென்மையாச் சொல்ல அவர் முன்வருகிறார்,,, என்றெல்லாம் பேசினால், அது சரியல்ல. பிணத்துக்கு மாலைபோட்டு விட்டுப் பேசும் சொற்பொழிவே அது. நல்லது மாத்திரம் பேசி அடக்கம் செய், என்கிற சம்பிரதாயப் பேச்சு… நல்லா யோசிச்சிப் பார்த்தால், அழகியல் கூறுகள் கவிதைக்கு இட்டுச் செல்லுமேயன்றி, அதில் புன்னகை, நகைச்சுவை எங்கே வந்து தொலைத்தது?
என்னிடம் திரிஃபீல்ட் பற்றி ராய் கியர் பேசிக்கொண்டிருக்கையில் சொன்னார். அவர் எழுத்தில் என்ன குறை சொன்னாலும், அவருடைய சௌந்தர்ய உபாசனையில் எல்லாம் அடிபட்டுப் போயிருதுய்யா, என்றார். இத்தனை நேரம் நாம் பேசிக்கொண்டிருந்த சமாச்சாரம் இதன் அடிப்படையில் தான். ராயின் அந்த வார்த்தைதான் என்னை இத்தனை சங்கடப்படுத்தி கிளர்த்தி விட்டிருக்கிறது…
30 வருஷம் முன்னாடி, இலக்கிய உலகில், கடவுள் தான் மிகப் பெரிய ஆளுமை. இலக்கியங்கள் கடவுளைச் சொல்லி, தொட்டு, சுற்றி இயங்கின. கடவுள் நம்பிக்கை நல்ல விஷயம்தான். பத்திரிகை எழுத்திலும் அடிக்கடி வாக்கியங்களில் கடவுள் அடிபட்டுக் கொண்டிருந்தார். பிறகு எப்படியோ அவர் வெளியேறி விட்டார். (இப்ப பத்திரிகையில் அதிகம் ஆக்கிரமித்திருப்பது கிரிக்கெட்டும், பீரும்தான்.) இப்போது கடவுளை விட, கர்ப்பகிரகத்தை விட, அதிகம் குளியலறை கழிவறை சமாச்சாரங்கள், ஆபாச அநாச்சாரங்கள் ஆக்கிரமித்து விட்டன…
திரிஃபீல்ட் நடைபாதையெங்கும் அழுத்தமாய்க் குளம்புகளைப் பதித்துப் போனார். கவிஞர்கள் எல்லாரும் அவர் எழுத்தில் லண்டன் சராசரிகளின் தடங்களைக் கண்டார்கள். ஆ, சர்ரே பகுதியின் இலக்கியம் புழங்கும் நாரிமணிகளோவெனில், யந்திரமயமாகி வரும் உலகின் சிரோன்மணி சிந்தாமணிகள் அவர்கள், அவரது இறுக்கமான அணைப்பில் தங்களை அர்ப்பணிக்கவும் சித்தமாயினர். அவர் எழுத்தை வாசித்தபின் அவர்களுள் மாபெரும் மாற்றம் நிகழ்ந்தாற் போலிருந்தது.
இப்பாது ஆபாசமும் காலாவதியாகி விட்டது. அழகியல் வந்திருக்கிறது. எதிலும் அழகைப் பார்க்கிற கண்கள் சனங்களுக்கு வந்திருக்கிறது என்றே தோன்றுகிறது. ஒரு சொல் சுழட்டலில், ஒரு மீனின் உடம்புக்குள்ளே, ஒரு நாயிடத்தில், ஒரு நாளில் அல்லது ஒரு ஓவியத்தில், ஒரு செயல் நளினத்தில் அல்லது உடை நேர்த்தியில்… எங்கெங்குமாய் விரவிக் கிடக்கிறது அழகு.
அணிசேர்ந்து நடைபழகி வரும் இளம் பெண்கள், அவர்களில் ஒவ்வொருத்தியுமே அருமையாய் அற்புதமாய் ஒரு நாவல் வடித்தவளாக்கும்… சொல்லில் செயலில் சிந்தனையில் என்று அவர்கள் அதைப்பற்றி ஒரு நிமிர்வுடன் அலட்டியாகிறது. தலைபின்னால் ஒளிவட்ட பிரமைகளும், தங்கள் பகுதியில் நினைவு வாயில் வரை கூட அவர்களிடம் தகுதி கொண்டாடப்படுகிறது. ஆழமான விவாதங்கள் முதல், கவர்ச்சிகரமான விளம்பரங்கள் வரை அவர்கள் அடிபடுகிறார்கள். அத்தோடு இந்த இளைய வாலிபன்கள், அவர்களில் பலர் அப்போதுதான் ஆக்ஸ்ஃபோர்டில் இருந்து இறக்குமதி குதித்திருப்பார்கள். இன்னும் ஆக்ஸ்ஃபோர்டு கிரணங்களுடன் வளைய வருகிற பாவனை கொண்டாடித் திரிகிறார்கள். வாராந்தரிகளில் கலை என்றால் என்ன, இலக்கியம், வாழ்க்கை, பிரபஞ்சம் என்றாலென்ன, நாம் அதைப்பற்றி என்ன மாதிரியெல்லாம் யோசித்துப் பார்க்க வேண்டும் என்று அவர்கள் பாடம் எழுதிக் குவிக்கிறார்கள். இறுக்கமான பத்திகளில், வார்த்தைகளை அவர்கள் முகூர்த்த வாழ்த்தாய் பூ தெளிக்கிறார்கள். அதற்கு பின் விவாதங்கள் வேறு, என்பதுதான் சோகம். அதற்காக அவர்கள் மெனக்கெடவும் செய்கிறார்களே, இதெல்லாம் காலக்கூத்தன்றி வேறென்ன?
இலக்கு என்பதற்கு பல வடிவங்கள் உண்டு, அதில் அழகியல் என்பது ஒன்று. ஆனால் அழகியல் பற்றிய இவர்களின் அலறல், யந்திரங்கள் ஆட்சிசெய்ய வந்துவிட்ட இந்த உலகில் வெறும் அவல ஊளையன்றி வேறென்ன? நியதிகள் அற்ற சோம்பேறி நாளின் வெட்கக்கேடான மற்றொரு முகமே இந்த அழகியல் ஆராதனை என்பேன். பழக்க தோஷம் தான் அது, வேறெப்படி அதைச் சொல்வது? வாழ்க்கையின் பாடுகளை வேறு விதமாக எதிர்கொள்கிற அடுத்த தலைமுறை இந்த அழகியல் கவிதையாக்கல்களில் இருந்து விலகி, நிஜத்தை எதிர்கொள்ள, இது இப்படித்தான் என ஒப்புக்கொள்ளத் தயாராகி விடும் என்பேன்.
மத்தவர்களைப் பற்றி அறியேன். அழகு அழகு என்று ரசித்துக்கொண்டு அதிலேயே திளைத்துத் திரிய என்னால் ஆகாது. என்னைப் பொறுத்தமட்டில் கீட்ஸைப்போல வேறெந்தக் கவிஞனும் இப்படியொரு தவறான அறைகூவலை விடுத்தது இல்லை. அவரது எந்திமியானின் முதல் வரியே அபத்தம். (A thing of beauty is a joy forever – என்ற வரியைச் சொல்கிறார்.) ஒரு வஸ்துவின் அழகு விருட்டென என் மனதை அதையிட்டு பறக்கச் செய்கிறது. ஆனால் அது சில கணங்கள் மாத்திரமே நீடிக்க வல்லது. ஒரு காட்சியை, ஓவியத்தை மணிக்கணக்காக உட்கார்ந்து கண்கொட்டாமல் எவனாவது ரசித்துக்கொண்டிருப்பான் என்பதே நம்ப முடியாத விஷயம்.
அழகு என்பது ஒரு பரவச அனுபவம். ரொம்ப எளிமையானது அது, பசியைப் போல அது. அதைப்பற்றி விளக்க, சொல்லவே எதுவுமே இல்லை. ஒரு ரோஜாவிற்கு வாசனை போல அழகு என்கிற சமாச்சாரம். அதை நீங்கள் நுகரலாம், அவ்வளவுதான். அத்தோடு முடிந்தது காரியம். அதனால்தான் அழகியல் சார்ந்த விமரிசனங்கள் அலுப்பு தட்டுகின்றன. அழகியலை வியக்காத விமரிசனங்கள் சுவாரஸ்யமாய் அமைகின்றன. தீஷியனின் ஓவியம் ‘கிறிஸ்துவின் கல்லறைச் சடங்கு’ பற்றியோ, அல்லது பிறிதொரு அழகியல் ஓவியம் பற்றியோ, அதைத் தாண்டிப் பார்க்கச் சொல்லி விமரிசகர்கள் வேண்டுகிறார்கள். அந்த ஓவியம் என்ன சொல்லவேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்? அந்த ஓவியம் அழகியலைத் தாண்டி, வரலாற்றைச் சொல்ல வேண்டும். ஒரு வாழ்க்கைக் கூறை அது எடுத்துரைக்க வேண்டும்… என்னதான் அதால் சொல்ல முடியாது. அழகியல் மாத்திரம் அதில் எப்படிப் போதும்?
சனங்கள்தான் அழகுக்கு மேலும் பண்புகளைக் கூட்டி அதைப் பார்க்கிறார்கள்… உருக்கம், நெகிழ்ச்சி, மனித ரசனை, மென்மை, காதல்… இப்படி அதனோடு சேர்த்துக் கொள்கிறார்கள். ஏன்? ஏனென்றால் வெறும் அழகு ரொம்ப நேரம் ரசனைக்குத் தாக்குப்பிடிக்க முடியாது.
அழகு என்பது முழுமை. கச்சிதத் தன்மை. மனித இயல்பைப் போல அது. அது நம் கவனத்தில் ரொம்ப நேரம் கோலோச்ச முடியாது. கணிதவியலாளர்கள் எல்லாவற்றுக்கும் நிரூபணம் கேட்கிறார்கள். அழகியலைப் பொருத்து அவன் கேட்பது அத்தனை முட்டாள்தனமானது அல்ல, பிற விஷயங்களைப் போல இப்போது அவனை நாம் கேலியடிக்க முடியாது.
பேஸ்டம் பகுதியில் அமைந்திருக்கும் தோரிக் ஆலயம், ஒரு குவளை குளிர்ந்த பீரை விட அழகில் உயர்ந்தது என்று யாரும் நிரூபிக்க முடியாது. அப்படி அவர்கள் நினைக்கவும் சொல்லவும், புனிதம் பவித்ரம் என்று வேறு பல சமாச்சாரங்களை ஒட்டவைத்தே அவர்கள் விளக்க வேண்டியிருக்கிறது. இவற்றுக்கும் அழகுக்கும் என்ன சம்பந்தம்? எந்த ஸ்நானப் பிராந்தியும், பிராப்தியும் கிடையாது. அழகு என்பதே குறுகிய சந்து போன்ற பாதை தான். அது ஒரு மலையின் சிகரத்தின் உச்சி, அதைத் தாண்டி எதுவும் இல்லை. அதற்கும் மேலே எங்கும் போவதற்கு இல்லை.
… ஆகவேதான் திஷியன் ஓவியத்தை விட, எல் கிரேக்கோ ஓவியம் அதிக ரசனைக்குரியதாய், பேச மேலதிக விஷயங்கள் கொண்டதாய் நமக்கு எடுபடுகிறது. ஷேக்ஸ்பியரின் முழுமை பெறாத படைப்பே சாதனையாகக் கொள்வது போல, பிரஞ்சு சிந்தனாவாதி ரேசினின் முற்றி விளைந்த படைபபுகளைக் கொண்டாட முடியாமல் போகிறது.
இந்த அழகு என்பதைப் பற்றி ரொம்ப அதிகம் எழுதியாகி விட்டது. ஆகவேதான் நானும் கொஞ்சம் அதிகம் அதைப்பற்றி இங்கே பிரஸ்தாபிக்கவும் நேர்ந்தது. மனசின் ரசனைமிக்க உள்ளுணர்வை அழகு திருப்திப்படுத்துகிறது. ஆனால் யாருக்கு வேண்டும் இந்த ‘திருப்தி’? அசமந்தங்களுக்குதான் அந்த வார்த்தை செல்லும், திருப்தி என்கிற வார்த்தை. இல்லாவிட்டாலும் அவர்களுக்குக் குறை இல்லை. போதும் என்ற மனம் படைத்தவர்கள் அவர்கள். இதை ஒத்துக்கொள்ளலாம் தப்பு இல்லை என்கிறேன் – அழகு என்பதே அலுப்பான சோம்பேறிகளின் சமாச்சாரம் தான்.
தொடரும்
storysankar@gmail.com

Series Navigationபாரிஸ் மாநகரில் வி. ரி. இளங்கோவனின் ‘மண் மறவா மனிதர்கள்” நூல் வெளியீட்டு விழா..!பஞ்சதந்திரம் தொடர் 19 ஆமையும் வாத்துக்களும்
author

எஸ். ஷங்கரநாராயணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *