தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

10 ஜனவரி 2021

கவிதைகள்

பத்மநாபபுரம் அரவிந்தன்

Spread the love

தொடர்பறுதல்

ஏகாந்த இரவொன்றில் வான்பார்த்து

மாடியில் படுத்தபோது தென்பட்ட

நட்சத்திரங்கள் ஒவ்வொன்றின் இடையேயும்

விரிந்துக் கிடக்கிறது ஏகப்பட்டத் தொலைவு

எனை விட்டுத்

தொடர்பறுந்துப் போனவர்கள் போல..

ஒன்றாய்ப் படித்து, சுற்றிய நண்பர்கள் …

நெருக்கமாய்ப் பழகிய தொடர் கடிதத் தோழிகள்

பக்கத்து வீடுகளில் குடியிருந்துப் போனவர்கள்

நெருக்கமாய் இருந்த தூரத்து உறவுகள்

இலக்கியம் பேசி உணர்ச்சி வசப் பட்டவர்கள் …

பலருடனும் இற்றறுந்துப் போயிற்று தொடர்பு..

முகநூலிலும், ஆர்குட்டிலும் தேடித் தேடி

அலுத்தப் பின்பும் அழிபடாமல்

மனதுள் விரிகிறது அவர்களுடனான

எனது நாட்கள் ..

புதிது புதிதாய்க் கிடைக்கும் தொடர்புகளும்

சிறிது நாளில் தொடர்பறுகிறது

கைபேசி அழைப்புகளும் பயனற்று போனபின்பு

எண்களை அழித்துவிட்டு .. எதிர் நோக்கிக் காத்திருக்க

ஒன்று மட்டும் புரிகிறது

தொடர்பறுதல் தொடர்ந்துகொண்டேயிருக்கும்

என் தொடர்பு

புவியறுக்கும் காலம் வரை..

உளத் தீ ..

சிறிதொரு தீப்பொறி மனதுள்

வைத்து, சொற்களால் ஊதிப்

பெருந் தழலாக்கினாய் நீ

உன் சொற்களின் சூடும்

வார்த்தைகளின் வெம்மையும்

பொசுக்கிப் போட்டதென் மனதைப் பலமுறை

ஆறாமல் போன ரணங்களில் தவித்ததென் மனம்

காரணம் புரியாமல்

குடிக்குள் புகுந்தென்னை சுருக்க முயன்றேன்
அதுவே காரணமாய் ஊர் முன்
நிலை நாட்டினாய் உன்னை..

எல்லோர் நிலைபாடும் என்னைக்

குறையூற்றி சிறுகச் சிறுகவாய்க் கொன்றொழித்துக்

கொண்டிருக்க உனக்கு மட்டுமேத்

தெரியும் எனக்குள் நீ வைத்தத் தீயே

என்னை எரித்துக் கொண்டிருப்பதும்

இப்பொழுதெல்லாம் தீயையே நான் ரசித்துக்

கொண்டிருப்பதும்..

Series Navigationவழிச் செலவுபாராட்ட வருகிறார்கள்

Leave a Comment

Archives