எதுவோ கொடுத்த தைரியத்தில் தொடங்கி விட்டேன். யோசித்த பிறகே புரிந்தது தொடங்க வேண்டும் என்ற எத்தனிப்பு மட்டுமே போதுமானதாக இருந்தது தொடங்குவதற்கு. எல்லோரும் சுற்றி வளைத்தனர் என்ன செய்யப் போகிறேன் என்பதைப் பார்க்க அவர்களின் கேள்விப் பார்வைகள் மெள்ள மெள்ள மீன் குஞ்சுகளாய் நெளியத் தொடங்க எல்லாவற்றையும் விழுங்கியபடி முன்னேறின எனது எத்தனிப்பு சுறாக்கள். – நிஷாந்தன்
எழும்பூரிலிருந்து ரயில் புறப்பட்டதும் எதிர் சீட் குழந்தை பாடத் தொடங்கினாள் `இரும்பிலே இருதயம் முளைக்குதோ’ செங்கல்பட்டு நெருங்கும்போது பாட்டு மாறத் தொடங்கியது `அரிமா அரிமா நானோ ஆயிரம் அரிமா’ என்று என் விருப்பமாகக் கேட்டேன் `ஏ பார் ஆப்பிள் ‘ பாடச்சொல்லி. ஒரு நிமிடம் யோசித்து விட்டு `அந்தப் பாட்டு மிஸ் வீட்டு அலமாரிக்குள் இருக்கிறது ‘என்றது குழந்தை குலுங்கி குலுங்கி சிரித்தது ரயில். – நிஷாந்தன்