PEEPING TOMகளும்பூமிஜா(சீதா)ப் பிராட்டியும்

இரவுபகலாய் இடையறாப் பட்டிமன்றங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

ஐந்து நட்சத்திர விடுதிகளின் அகன்ற கூடங்களில் ஒன்றில்

ஆரண்யமாய் ஆங்காங்கே ‘பேப்பர் மஷாய்’ மரங்கள் நட்டுக் கட்டமைக்கப்பட்ட அரங்கொன்றில்

ஆன்றோரென அறியப்பட்டோர் அவைகளில்

அடுக்குமாடிக்கட்டிடத்தின் மொட்டைமாடிப் பந்தலில்

இலக்கியப் பெருமான்களுக்கிடையே

இணையவழிகளில் _

இன்னும்

ஆர்ட்டிக் அண்டார்ட்டிக் துருவப் பிரதேசங்களிலும்

புவியின் தென் அரைக்கோளப்பிரதேசங்களின்

பெங்குவின்களைப் பார்வையாளர்களாகக் கொண்டும்

‘சீதை இராவணனோடு உறவுகொண்டாளா?

கொண்டாள்!

கொண்டாளே !!

கைத்தட்டல் விண்ணைப் பிளந்தது

[அது பதிவு செய்யப்பட்ட கைத்தட்டல் என்பது

பாவம் நிறைய பேருக்குத் தெரியாது]

தன்மானத்திற்கு இழுக்கு என்றானபோது

காதலித்த ராமனையே உதறிவிட்டுச்சென்றவள்

கடத்தியவனையா வரிப்பாள்?

விஜய் Zee Sun இன்னும் நான் பார்க்காத சேனல்களின்

மெகாத்தொடர்களில்

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய்

மாமியார் நாத்தனார், முதலாளி தொழிலாளி

மூத்த அண்ணன் இளைய அண்ணன்

வில்லியும் நல்லவளும்

ஐந்து வயதுச் சிறுமியும்

அடுத்த நாள் பிறக்கப்போகும் குறைப்பிரசவக் குழந்தையும்

மாறி மாறிச் செய்யும்

வகைவகையான சத்தியங்கள்

சடங்குகள் குறிபார்த்தல், சகுனம் பார்த்தல்

இத்தியாதிகளுக்கிடையிலிருந்து ஒரு பூக்குழியைத்

தேர்ந்தெடுத்து

கோயில் வாசலில் பரத்தி

அதில் நடந்து தன் பத்தினித்தனத்தை

நிரூபிக்கச் சொல்லும்

மெத்தப் படித்தவர்கள் மிட்டா மிராசுதாரர்கள்

மெகாத்தொடர் மாண்பாளர்களை

மெல்ல ஒரு பார்வை பார்த்து

மேலே நடக்கிறாள் பூமிஜா.

மனம்நிறை மணாளனுக்கு நிரூபிக்கவோ

மக்களுக்குப் புரியவைக்கவோ

-ஒரு முறை நெருப்பில் இறங்கி

மீண்டாயிற்று…..

முறைவைத்து மனம்பிளந்து பார்த்தவர்களாய்

மறுபடி மறுபடி

கடத்தியவனை மருவியவளாய்க்

காட்ட முனையும் குணக்கேடர்களுக்காய்

அவள் வனத்தில் தீ மூட்டினால்

அது தன்னை மட்டுமல்லாமல்

அன்னை நெருப்பையே அவமதிப்பதாகும்.

அவள் அறிவாள்தானே?

அடுத்த விளம்பரதாரர் யார் மாட்டுவார் என்று

ஆலோசித்தபடி

அய்யனார் சிலையின் காலடியில்

வில்லனும் நல்லவனும் சேர்ந்து

மெகாத்தொடர் கதாபாத்திரங்களில் ஒருவரை

(குத்துமதிப்பாக அந்தத் தங்கையாக இருக்கலாம்

அல்லது தாத்தாவாக இருக்கலாம்)

கொலைசெய்வது குறித்து காரசாரமாக

கீழ்ஸ்தாயியில் வாக்குவாதம் நடத்திக்கொண்டிருக்கும்

அரைத்தமாவுக் காட்சிகளைக்

கச்சிதமாய் வழித்தெடுத்துமுடித்துவிட்டு

வெளியேறும்போது படக்குழுவினர்

கன்னத்தில் போட்டுக்கொண்டபடி

அல்லது கிண்டலாய்ச் சிரித்தபடி

‘பொறுப்புத்துறப்பு’ என்ற நொறுக்குத்தீனியை

சுவைக்கத்தொடங்கியதைக் கண்டு

துன்பம் வரும் வேளையிலே சிரிக்கப் பழகியவளாய்

புன்னகைக்கிறாள் பூமிஜா.

Series Navigationபூதிரௌபதியின் துகிலும் துரியோதனத் தூரிகைகளும்