அக்கினி குஞ்சொன்று கண்டேன்

அழகர்சாமி சக்திவேல்

கலிகாலத்துத் திருமணம் களைகட்டியிருந்தது…

குண்டத்தின் நடுவில் அக்கினித் தங்கமாய் நான்..

“ஸ்வாஹா..ஸ்வாஹா” அய்யர் என் மனைவியை அடிக்கடி அழைத்தார்.

நல் மாவிலைக் கரண்டிநெய்யால் நனைந்த என் மேனி…

அந்த புனித நெய்யின் வாசம்… எங்கோ எனக்குப் பழகிய வாசம்..

சிவனின் வித்தா? இல்லை சந்திரனின் வித்தா?

என் சிந்தனை சிதறியது…

புலப்படாத என் பழைய நினைவுகள்….

 

வழிவழியாய் வரும் ஸ்கந்தப் புராணத்து பழங்கதை…

சடையன் சங்கரியுடன் தனித்திருந்த காலம் அது..

அம்மை பார்வதியின் அழகு திருக்கோலம் கண்டு

அன்று அளவுக்கு அதிகமாய் அப்பனுக்கு ஆசை பிறந்தது..

சிவனின் சித்தம் கலங்கியது

அவர்கை செம்புடுக்கு டும் டும் எனத் துடித்து ஒலிஎழுப்பியது

அழிக்கும் தொழிலோனையே காமம் அழிக்கத் துடித்தது.

அடங்கு என அதட்டினார் பெருமான்.. மதனோ அடங்கியபாடில்லை…

ஓம்காரம் அசந்த அந்த ஒரே கணம்..

விதைகள் வீறிட்டு எழுந்தன… வித்து பீறிட்டுக் கிளம்பியது..

ஒரே ஒரு துளி வித்து உலகின்மேல் விழுந்தது…

விழுந்த ஒரு துளியிலேயே

பூமியின் ஒரு பாகம் பொசுங்கிப் போனது

தேவர்கள் அலறினர்…தேவேந்திரன் நாடினர்

 

அக்கினியான நான்தான் கடைசியில் அய்யனைச் சென்றடைந்தேன்.

அம்மை எனைக்கண்டு அகமிக மகிழ்ந்தாள்…

‘ஆக வேண்டியதைப் பார் அக்கினி’ என அன்பால் எனைப் பணித்தாள்

என் தேகம் வளைத்து ஈசன் தொடையிடைச் சென்றேன்.

ஆஹா..என்னதோர் அற்புதக்காட்சி..

பால் வழிந்தோடும் பசுபதியின் லிங்கம்..

வெண்ணெய் பூசிய விஸ்வநாதர் லிங்கம்…

நெய்யிலே குளித்த நமச்சிவாய லிங்கம்…

ஹர ஹர மகாதேவா…பக்தியில் குலுங்கியது என் உடல்…

 

உள்ளம் நடுங்க வாய் துடிக்க

பனிபோர்த்திய லிங்கத்தை என் நுனி நாக்கால் ஸ்பரிசித்தேன்..

நெய்யின் சுவை என் நாக்கை வருடியது..

அமுதச்சுவை மறுபடியும் என் அதரங்களை உரசியது..

“ஓம் நமச்சிவாயா”.. ஒரே உறிஞ்சுதான்…

ஓம்காரநாதனின் வித்து முழுதும் உள்ளடக்கிய என் வாய்…

பார்வதிக்கும் கிடைக்காத பாக்கியம் எனக்கு…

பிரச்சினை தீர்ந்தது எனப் பெருமிதம் என்னுள்…

எல்லாம் ஒரு கணமே…மறுகணம் அய்யகோ..

விஸ்வநாதனின் விந்துவெப்பம் வாயைத் தகித்தது.. வலியில் துடித்தது

அக்கினிக்கே அன்று ஓர் அக்கினிப்பிரவேசம்…

 

காப்பாற்றுங்கள் மகாதேவா…

ஒடுக்க முடியா வலியில் ஓடினேன் கங்கைக்கு..

பரம்பொருளின் விந்து முழுதும் பாகீரதியில் கரைத்தேன்.

இப்போது கங்கையும் எறிந்தாள்..கனலிலே துடித்தாள்..

கடைசியில் கனகசபையின் விந்து கன்னிகை அறுவரில் ஏறி

கார்த்திகேயன் பிறந்தான். ஸ்கந்தன் பூமியில் தவழ்ந்தான்.

 

இன்னொரு கதை…ஒரு முறை..

மூவுலகையும் ஆட்சி செய்யும் ஆசையில்..

சந்திரனின் விந்து குடித்து சக்தியைப் பெற்றேன் நான்…

சந்திரன் ஈசனில் அடங்கியவன்

ஈசனின் வித்து என்னில் அடங்கியது..

எனவே நெய்யிலே தெரிந்தது நிச்சயம் ஈசனின் வித்துதான்..

மகாதேவன் இந்த மணமக்களை மனதார வாழ்த்தட்டும்…

தென்னாடுடைய சிவனே போற்றி/.. என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி.

 

ஆக்கம் – அழகர்சாமி சக்திவேல்

 

Series Navigationஇனிப்புகள்…..பண்டைத் தமிழர் பண்பாடு – ஒரு புதிய நோக்கு