அக்னிப்பிரவேசம்-30 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்

This entry is part 27 of 33 in the series 14 ஏப்ரல் 2013

அக்னிப்பிரவேசம்-30

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்

 yandamoori@hotmail.com

தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன்

tkgowri@gmail.com

 

yandamuri veerendranathஒரு காலத்தில் முதலமைச்சராக இருந்து தற்பொழுது எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருக்கும் சிதம்பர சுவாமிக்கு ஒரே மகன். அவன் பெயர் சாங்கபாணி. தந்தை முதலமைச்சராக இருந்த போது, பாணி ஏறக்குறைய நாட்டை ஆண்டு வந்தான். பிறகு கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்காமல், எதிர்கட்சித் தலைவர் பதவியில் திருப்தி அடைய வேண்டிவந்தது. முதலமைச்சர் அளவுக்கு அதிகாரம் இல்லா விட்டாலும், காரியங்களைச் சாத்தித்துக்கொள்ளும் அளவுக்கு சாமர்த்தியம் இருந்தது சிதம்பர சுவாமிக்கு. முதலமைச்சராக இருந்த போது கோடிக் கணக்கில் பணத்தை விழுங்கி, அந்தப் பணத்தால் பல பேக்டரிக்களை நிறுவியிருந்தான். அவற்றை மகன்தான் பார்த்து வந்தான்.

சாரங்கபாணி சோக்குபேர்வழி சுற்றிலும் எப்போதும் நாலைந்து பேர் நண்பர்கள் இருக்காமல் முடியாது. மாலை வந்துவிட்டால் பிராந்தியும், விஸ்கியும் ஆறாய் ஓடவேண்டியதுதான். வியாபாரத்தையும், கேளிக்கையையும் கலந்து, வாழ்கையை அலட்சியமாக அனுபவிக்கும் ஆசாமி சாரங்கபாணி.

ஒரு சமயம் பேக்டரி லைசென்ஸ் விஷயமாய் ஒரு குமாஸ்தாவைப் பிடிக்க வேண்டியிருந்தது. அவன் யார் என்று விசாரித்து “மாலையில் பார்ட்டிக்கு அழைத்துக்கொண்டு வா” என்று மேனேஜரிடம் சொன்னான். இப்படிப்பட்ட விஷயத்தில் லஞ்சத்தை விட பார்ட்டிகள் தான் நன்றாக வேலை செய்யும் என்பது பாணியின் நம்பிக்கை.

லைசென்ஸ் வழங்கும் ஆபீசில் அந்த வேலையைப் பண்ண வேண்டிய குமாஸ்தா யாரென்று விசாரித்தார் மேனேஜர்.

அவன் பாஸ்கர் ராமமூர்த்தி!

பாஸ்கர் ராமமூர்த்தி அன்று மாலை கெஸ்ட் ஹவுசுக்கு அழைக்கப்பட்டான். அவனுக்கு அது ஒரு அபூர்வமான அனுபவம். ஏ.சி. செய்யப்பட்ட படுக்கை அறைகள், மெத்தென்று கார்பெட், கண்ணாடிக் கதவுகள், விலை உயர்ந்த விஸ்கி, வித விதமான உணவு வகைகள்..

அதற்குப் பிறகு நான்கே நாட்களில் பாணிக்கு அந்த லைசன்ஸ் கிடைத்துவிட்டது. பாஸ்கர் ராமமூர்த்தி கூடவே இருந்து, எல்லா பிரிவுகளுக்கும் சென்று பைல் சீக்கிரமாய் நகரும்படி செய்தான். லைசென்ஸ் கிடைத்த அன்று பாணியை விட அவன்தான் மகிழ்ச்சி அடைந்தான்.

அன்றைக்குப் பாணி அவனைத் திரும்பவும் பார்ட்டிக்கு அழைத்தான். இந்த தடவை ராமமூர்த்தி தானே உரிமை எடுத்துக்கொண்டு எல்லோருக்கும் கிளாஸ் டம்ப்ளர்களில் ஊற்றி தானே சுயமாய்த் தந்தான். நடுவில் உணவு பதார்த்தங்கள் தீர்ந்துவிட்ட போது திரும்பவும் ஹோட்டலிலிருந்து வாங்கிக்கொண்டு வந்து கொடுத்தான். பீடாக்களை மறந்துவிட்ட போது திரும்பவும் போனான்.

இப்படிப்பட்டவர்கள் சாதாரணம்.

பணக்காரர்களோ, பிரமுகர்களோ நண்பர்களுக்கு பார்ட்டி வழங்கும் போது ராமமூர்த்தியைப் போன்றவர்கள் அந்தக் கூட்டத்தில் சேர்ந்துக் கொள்வார்கள். இவர்கள் வேலைக்காரர்கள் இல்லை. நண்பர்கள் என்றே குறிப்பிடப் படுவார்கள். ஆனால் வேலைகள் செய்து கொண்டிருப்பார்கள்.

“ராமமூர்த்தி! இந்த கிளாசில் கொஞ்சம் ஊற்று.”

“ராமமூர்த்தி! அந்த சோடாவை ஓபன் பண்ணு., ப்ளீஸ்”

“மூர்த்தி! இன்றைக்கு பரிமாறும் பொறுப்பு உன்னோடதுதான். எல்லோரும் ஃபுல் போதையில் இருக்கிறோம்.”

இப்படிப்பட்ட வேலைகள் மிக மரியாதையாய் இவர்கள் தலையில் கட்டப்பட்டு விடும். இவர்களும் அந்த வேலைகளை புன்முறுவலோடு ஏற்றுக்கொண்டு செய்வார்கள்.

நாலைந்து மாதங்களில் பாஸ்கர் ராமமூர்த்தி பாணிக்கு நெருங்கிய நண்பன் ஆகிவிட்டான்.

ஒருநாள் சாரங்கபாணியின் காரில் முன் சீட்டில் ராமமூர்த்தி உட்கார்ந்து போய்க் கொண்டிருப்பதைப் பாவனா வழியில் பார்த்தாள். அன்றைக்கு அதைப்பற்றி அவ்வளவாகப் போருட்புத்தவில்லை. பல நாட்களுக்குப் பிறகு அதுவே அவள் வாழ்க்கையில் ஒரு முக்கியமான மாற்றத்திற்குக் காரணமாகிவிட்டது.

*****

சாஹிதி பி.எஸ்.ஸி. பரீட்சையில் சாதாரண மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றாள். அவள் புத்திச்காலித்தனமும், நினைவாற்றலும் போதைப் பழக்கத்தினால் மழுங்கடிக்கப் பட்டுவிட்டன. எம்.எஸ்ஸி.யில் சீட் கிடைக்கவில்லை. எம்.ஏ.வில் சேர்ந்தாள். அந்தக் கல்லூரியில் சேர்ந்தது கூட வீட்டிலிருந்து வெளியே வந்துவற்காக ஏற்படுத்திக்கொண்ட ஒரு சாக்கு. அவ்வளவுதான். ஸ்டூடன்டுகளுக்குத்தான் போதைப்பொருட்கள் சுலபமாக கிடைக்கும் என்று அனுபவம் கற்றுக்கொடுத்தது. அவளை வகுப்பில் எப்போதுமே பார்க்க முடியாது. எந்த மரத்தின் அடியிலோ உட்கார்ந்து இருப்பாள். மணிக்கணக்காய் யோசித்துக்கொண்டே இருப்பாள். அந்த யோசனைகளுக்கு ஒரு உருவம் இருக்காது. அவ்வாறு மூளையைக் கொதிப்படையச் செய்துகொண்டு வீட்டிற்குத் திரும்பி வருவாள். களைத்துப் போன உடலுக்குத் தூக்கம் தேவையாய் இருக்கும். போதை பொருளை உட்கொண்டு உறக்கத்தில் ஆழ்ந்துவிடுவாள். அவள் கண்களுக்குக் கீழே உருவாகியிருந்த கருவளையம், இளைத்துப் போய்க் கொண்டிருந்த உடல் அவள் தாய்க்கு எந்த சந்தேகத்தையும் ஏற்படுத்தவில்லை. அவளுக்கு தற்சமயம் சனிதசை நடந்துக் கொண்டிருப்பதாய் பரமஹம்சா சொல்லியிருந்தான்..

“எக்ஸ்க்யூஸ் மி!” ஒரு பெண்ணின் குரலைக் கேட்டு நிமிர்ந்தாள் சாஹிதி. ரொம்ப அழகாய் இருந்தாள் அந்தப் பெண். திரும்பத் திரும்ப பார்க்கத் தூண்டும் அழகு. வெயிலில் அலைந்ததில் சற்று வாடியிருந்தாள். ஆனாலும் அதுகூட ஒரு கவர்ச்சியாகவே இருந்தது.

“யூனிவர்சிட்டி ஆபீஸ் எங்கே இருக்கு என்று தெரியவில்லை. அரைமணி நேரமாய் சுற்றிக் கொண்டிருக்கிறேன். அங்கே மாணவர்களைக் கேட்ட போது மிஸ்கைட்  பண்ணிவிட்டார்கள். கொஞ்சம் வழி சொல்ல முடியுமா?’

“யூனிவர்சிட்டி ஆபீசுக்கு எந்த வேலையாய் போறீங்க?”

“நான் பி.ஏ. பார்ட் ஒன் பரீட்சை எழுதப் போகிறேன். அதற்கு பீசு கட்டுவதற்கு இன்றுதான் கடைசி நாள்.”

“அப்படியா! இரண்டு நிமிஷம் இருங்கள். எங்கள் கார் வந்துவிடு. அழைத்துக்கொண்டு போகிறேன்.

“உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்? வழி சொல்லுங்கள். நானே போய்க்கொள்கிறேன்.”…

“நடந்து போகணும் என்றாள் ரொம்ப தூரம். உங்களுக்கு டைம் கூட அதிகம் இல்லை. கொஞ்சம் இருங்கள். ஆனாலும் இவ்வளவு வெயிலில் வந்திருக்கீங்க. யாரையாவது அனுப்பியிருக்கணும்.”

“அனுப்புவதற்கு யாரும் இல்லை. ஆனாலும் திரும்பத் திரும்ப வர வேண்டியிருக்கும். ஒரு தடவை தெரிந்துகொண்டால் நல்லது இல்லையா?”

“உண்மைதான். அதோ கார் வந்துவிட்டது. வாங்க” என்று சாஹிதி எழுந்துகொண்டாள்.  பத்தே நிமிஷத்தில் அப்ளிகேஷன் கைக்கு வந்தது.

அவள் தடுத்தும் கேளாமல் ஹாஸ்டலுக்கு அருகில் டிராப் செய்வதாய் சாஹிதி அவளை காரில் ஏற்றிக்கொண்டாள்.

“முதலில் எங்கள் வீடு வரும். நான் இறங்கிக் கொள்கிறேன். டிரைவர் உங்களை இறக்கி விடுவான். பைதி பை, என் பெயர் சாஹிதி. உங்கள் பெயர்?”

“பாவனா!”

******

பாவனாவைப் பார்த்தும் அவன் திக்பிரமை அடைந்துவிட்டான். ஆளை அசத்தும் அழகு அவளுடையது.

ஆனால் உடனே சுதாரித்துக்கொண்டான். “யாரும்மா இந்தப் பெண்?” என்று நிர்மலமாய் கேட்டான் பரம்ஹம்சா.

“பாவனா!”

“உள்ளே அழைத்துகொண்டு வாம்மா. காபி கொடுக்காமலேயே அனுப்புகிறாயா?”

‘நோ!’ என்று சொல்ல நினைத்தாள் சாஹிதி. அதற்குள் கதவைத் திறந்துவிட்டான். பாவனா சங்கடத்துட்ன் காரை விட்டிறங்கி, அவர்களுடன் கூடவே உள்ளே போனாள்.

“போய் காபி கொண்டு வாம்மா” என்று சாஹிதியை உள்ளே அனுப்பினான். நிர்மலா கோவிலுக்குப் போயிருந்தாள்.

“எங்க சாஹிதியை உனக்கு எப்படி தெரியும்?”

“இப்பொழுதுதான் எனக்கு அறிமுகம் ஆனாள்” என்று சாஹிதி தனக்கு செய்த உதவியைப் பற்றிச் சொன்னாள். பரமஹம்சா ஒரு நிமிஷம் கண்களை மூடி கடவுளைத் தியானித்துவிட்டுக் கண்களைத் திறந்தான்.

“நீ பஸ்ட் கிளாசில் பாஸ் ஆவாய்” என்றான்.

பாவனாவின் கண்கள் வியப்பால் விரிந்தன. “உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று கேட்டாள்.

“கடவுளிடம் பிராத்தனை செய்தேன்.”

“உங்களுக்கு ஜோதிடம் தெரியுமா?”

அவன் சிரித்தான். ‘தெரியுமாவா? நான் ஜோதிடதையே மாற்றி அமைப்பவன். உண்மையில் உனக்கு செகன்ட் கிலாஸ்தான் வர வேண்டியது. ஆனால்  கடவுளிடம் பிராத்தனை செய்தேன்.”

“உங்களுக்கு என் நன்றியை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை.”

“நீ எங்கே இருக்கிறாய்?”

“ஹாஸ்டலில்.”

“உன் தாய் தந்தையர்?”

அவள் பதில் சொல்லவில்லை. அவனே மேலும் சொன்னான். “உனக்கு சீக்கிரத்திலேயே திருமணம் நடக்கும். நல்ல வரன் வரும். உன்னைப் பார்த்தால் ஏதோ புரியாத அன்பு ஏற்படுகிறது. உன் சார்பில் நான் பூஜை செய்து விடுகிறேன்.”

அவளுக்குச் சிரிப்பு வந்தது. விஷயம் புரிந்துவிட்டது. அவனைப் பார்த்தாள். அவன் பார்வையிலேயே வசீகரண சக்தி இருந்தது. யாராக இருந்தாலும் ஆட்டி படைத்துவிட வல்லது. அவள் முறுவலை அவன் வேறு விதமாக புரிந்துகொண்டான்.

“நாளைக்கு உன் ஹாஸ்டலுக்கு வருகிறேன். பூஜைக்கு வேண்டியவற்றை நீயேதான் வாங்க வேண்டும். உங்க ஹாஸ்டல் எங்கே?”

பாவனாவுக்கு அவன் விஷயம் முற்றிலும் புரிந்து போய் விட்டது. இப்படிப்பட்டவர்கள் என்றுமே வெளிப்பட்டு விட மாட்டார்கள். பெண்கள் அவசரப்பட்டு “உங்க உத்தேசம்தான் என்ன? இப்படிப் பெண்களுடன் பேசுவதும், அட்ரெஸ் கேட்பது சரியா?’ என்று கேட்டால், உடனே பிளேட்டை மாற்றிக்கொண்டு “நான் என்ன சொன்னேன்? நீதான் மனதில் ஏதேதோ எண்ணங்களை வைத்துக்கொண்டு ஏதேதோ ஊகித்துக் கொள்கிறாய்”  என்று டபாயிப்பார்கள்.

இரண்டு வருடங்களுக்கு முன்பாக இருந்தால் பூஜை சாமான்களை வாங்கி வைத்திருப்பாள்தான். ஆனாள் இப்போது… சிரிப்புதான் வந்தது.

“ஹாஸ்டல் இல்லைங்க. ஹாஸ்பிடல்! உங்க காதில் தவறாக விழுந்திருக்கிறது. நான் இருப்பது ஆஸ்பத்திரியில். கேன்சராய் இருக்குமோ என்று சந்தேகம். உங்க பூஜை மூலமாய் குணப்படுத்தினால் எப்பொழுதும் நன்றியோடு இருப்பேன்.” முறுவலுடன் சொன்னாள். சாஹிதி கொண்டுவந்த காபியைக் குடித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினாள்.

பரமஹம்சா அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். பாவனாவின் அழகு அவனை நெருப்பாய்த் தகித்துக் கொண்டிருந்தது.

*****

பிற்பகல் மணி ஒன்றடித்தது. மூன்று மணிவரையிலும் ஷோரூமை மூடிவிடுவார்கள். என்றும் போலவே பாவனா ஐந்து நிமிடங்களில் சாப்பாட்டை முடித்துக்கொண்டு, புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தாள். பி.ஏ. முதல் பார்ட் நல்ல மார்க்குடன் பாஸ் செய்ததும் அவளுக்கு தைரியம் வந்தது. பைனல் பரீட்சைகள் நெருங்கிக் கொண்டிருந்தன.

ஆனால் அன்றைக்கு மூட் சரியாக இருக்கவில்லை. காராணம் முதல்நாள் நடந்த சம்பவம்!

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையன்றும் மார்கெட்டுக்குப் போய் ஹாஸ்டலுக்குத் தேவையான காய்கறியை வாங்கி வரும் பணியை பாவனா மேற்கொண்டிருந்தாள். அன்றைக்கும் அதுபோலவே சிநேகிதியோடு போனாள்.

பக்கத்துக் கடையிலிருந்து பளுவான காய்கறிப் பையை சுமக்க முடியாமல் சுமந்தபடி வந்து கொண்டிருந்தாள் ஒருத்தி. சிநேகிதி அவளைப் பார்த்துவிட்டு  “பாவம்! அந்தப் பையை சுமக்க முடியாமல் சிரமப்படுகிறாள். இந்தக் கூட்டத்திலிருந்து எப்படித்தான் வெளியேறப் போகிறாளோ” என்று கமென்ட் அடித்தாள். பாவனா இரக்கத்துடன் அவளைத் திரும்பிப் பார்த்தாள். அவள் முகத்தில் நிறம் மாறிவிட்டது.

“சுந்தரி!” என்று அருகில் போனாள்.

“பாவனா! நீதானா? சௌக்கியமா?” சுந்தரி மகிழ்ச்சி பொங்கக் கேட்டாள்.

“நான்தான். அதுசரி. என்ன இப்படி ஆகிவிட்டாயே? உடம்பு சரியாக இல்லையா?” எலும்புக்கூடாய் இருந்த சுந்தரியைப் பார்த்து, கவலையோடு கேட்டாள் பாவனா.

சுந்தரி பலவீனமாய் சிரித்துவிட்டு “நன்றாய்தான் இருக்கிறேன்” என்றாள்.

“ஞாயிற்றுக்கிழமைகூட உங்க அண்ணன் அண்ணியால் காய்கறிகளை தாமே வாங்கிக்கொள்ள முடியவில்லையா?”

“ஞாயிற்றுக்கிழமை ஒரே ஒருநாள்தானே அவர்களுக்கு லீவு.”

“அப்போ வாரத்தில் உனக்கு என்றைக்கு லீவு?” சட்டென்று கேட்டாள். சுந்தரி பதில் பேசவில்லை.

“நான் உங்கள் வீட்டுக்கு வந்தால் உனக்கு ஏதாவது ஆட்சேபணையா?

“என்ன பாவனா? கண்டிப்பாய் வா.”

சிநேகிதியிடம் சொல்லிவிட்டு, சுந்தரியோடு சேர்ந்து புறப்பட்டாள்.

“என்னவாச்சு சுந்தரி? உடம்பு சரியாக இல்லையா?” வழியில் கேட்டாள்.

“ராத்திரி வேளையில் இருமல் வருகிறது. ஓய்ச்சலாய் இருக்கு.”

“டாக்டரிடமாவது உன்னை அழைத்துக்கொண்டு போனார்களா?”

“பக்கத்துத் தெருவில் அரசாங்க மருத்தவர் கிளினிக்கில் காண்பித்தேன். அதுசரி, உன்னைப் பற்றி நிறைய கேள்விப்பட்டேன். என்ன நடந்தது பாவானா?”

“அதைப்பற்றி அப்புறமாய் பேசுவோம். முதலில் உன் சங்கதி என்ன? சுந்தரி! உன் உடம்பில் தெம்பு இருக்கும் வரையில் உங்க அண்ணன் உனக்குக் கல்யாணம் பண்ணமாட்டான். அந்த விஷயம் தெரியுமா உனக்கு?”

“…….”

‘கொஞ்சம் சாப்பாட்டை இரையாய்க் காட்டிவிட்டு, இருபத்தி நான்கு மணிநேரமும் வீட்டில் வேலை செய்வதற்கு வேலைக்காரியைச் சம்பாதித்துக் கொண்டுவிட்டான் உன் அண்ணன். எட்டு வருஷமாய் கல்யாணம் பண்ணி வைக்காமல் மாடாய் வேலை வாங்கிவிட்டான். இவ்வளவு நாள் நடந்தது முடிந்த கதையாக இருக்கட்டும். இனிமேல் இப்படி நடக்கக் கூடாது. வா” என்று அவள் கையில் இருந்த பையை தானே வாங்கிக்கொண்டு படியேறி, வீட்டிற்குள் நுழைந்து தொபீறி என்று போட்டாள். மூர்த்தி சொகுசாய் கட்டில்மீது படுத்தபடி குழந்தைகளுக்குக் கதைச் சொல்லிக் கொண்டிருந்தான். சுந்தரியின் அண்ணி அவனுக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்துகொண்டு வெற்றிலைக்கு சுண்ணாம்புத் தடவியபடி ஊர் வம்பு பேசிக்கொண்டிருந்தாள்.

“சுந்தரி! உன் துணிமணி ஏதாவது இருந்தால் எடுத்துக்கொண்டு வெளியே வா” என்றாள் பாவனா அவர்கள் காதில் விழும் விதமாய்.

உள்ளேயிருந்து அவள் அண்ணி, ஒன்றும் புரியாமல் வெளியே வந்தாள். “எங்கே போகப் போகிறாள்? நீ யாரு? முதலில் அதைச் சொல்லு” என்றாள் கோபமாய்.

”சுந்தரியின் நலம்விரும்பி. போதிக் கழுதையாய் வேலை செய்வதிலிருந்து அவளைத் தப்பிக்க வைத்து என்னுடன் அழைத்துக் கொண்டு போக வந்திருப்பவள்”

“என்னங்க? அப்படிப் பார்த்துக் கொண்டு இருக்கீங்களே? இவள் யாரு என்னன்னு பாருங்கள், வெளியே துரத்துங்கள்” என்று ஏற\\கன்வன்மேல் எரிந்து விழுந்தாள். மூர்த்தி பாவனாவை விழி பிதுங்க அப்படியே பார்த்துக் கொண்டிருந்தான்.

“உன் புருஷனுக்கு அவ்வளவு தைரியமும், நேர்மையும் இருந்திருந்தால் சுந்தரியின் நிலைமை இப்படி இருந்திருக்காது. ஞாயிற்றுக்கிழமை தான் ஒய்வு எடுத்துக்கொண்டு தங்கையை மார்கெட்டுக்கு அனுப்பி இருக்கமாட்டான். தைரியம் இருந்தால் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் புகார் கொடுக்கச் சொல்லு. நான் சுந்தரியை அழைத்துக்கொண்டு போகிறேன்.”

அந்தக் கத்தலைக் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கூடி விட்டார்கள்.

“அநியாயம் நடந்து கொண்டிருக்கும் போது ஒருத்தரும் வாயித் திறக்க மாட்டர்கள். சண்டை நடந்தால் மட்டும் வேடிக்கை பார்க்க வந்து விடுவார்கள்.” பெரிய குரலில் கத்தினாள் பாவனா. அவரவர்கள் திருடனுக்குத் தேள் கொட்டினாற்போல் நழுவி விட்டார்கள். மூர்த்தி இன்னும் கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தான்.

“வா சுந்தரி! அந்த துணிமணிகூட இவர்களுடையது தானே. அவைகூட தேவையில்லை.”

சுந்தரி கைகளைக் கூப்பி “நீ போய் வா பாவனா! நான் வர மாட்டேன்” என்றாள்.

திடீரென்று முகத்தில் வெந்நீரைக் கொட்டினாற் போலாயிற்று பாவனாவுக்கு. திகைப்படைந்து நின்றுவிட்டாள். சுந்தரி அவள் தோளைப் பற்றி வெளியே அழைத்துவந்தாள்.

“என்னை மன்னித்துவிடு பாவனா! நீ பண்ணப் போன காரியத்திற்கு நன்றி. ஆனால் என்னால் வரமுடியாது. நான் வரமாட்டேன்.”

பாவனா இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. “ஏன்?’ என்றாள்.

“நான் ரொம்ப சாதாரணமான பெண் என்பதால். நான் இங்கேயே இதுபோலவே சமாதியாகி விடுகிறேன். நடைபிணமாய் வாழ்ந்து கொண்டு இருப்பவர்களுக்கு நான் ஒரு எடுத்துக்காட்டு. ஆனாலும் இந்த நரகத்திலிருந்து வெளியே வரும் துணிச்சல் எனக்கு இல்லை. என் ரத்தத்தோடு பண்பாட்டையும், நரம்புகளோடு பணிவையும், மூளையில் அதைரியத்தையும் நிரப்பி வளர்த்துவிட்டார்கள் யார் என்ன சொல்லுவார்களோ என்ற பயமும், குடும்பத்தை விட்டுவிட்டு ஓடிப்போய்விட்டாள் என்று சொல்லுவார்களோ என்ற சந்தேகமும், இருக்கிற கொஞ்ச நஞ்ச ஆதாரத்தையும் கைவிட்டால் இன்னும் ஆபத்து வருமோ என்ற அதைரியமும் என்னை மதிப்பாய் எங்க அண்ணன் வீட்டிலேயே வேலைக்காரியாய் இருந்துவிடச் சொல்கின்றன.”

பாவனா கண்ணிமைக்காமல் சுந்தரியையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் தலை குனிந்தாள். பாவனாவுக்கு அவகை மிரட்டி அடக்குவதில் விருப்பம் இல்லை. வாதங்களால் எண்ணங்கள் மாறாது என்று எண்ணியிருந்தாள் இத்தனை நாளாய். அனுபவங்களால் கூட மாறாது என்று தெரிந்துவிட்டது.

அவள் நிசப்தமாய்த் திரும்பினாள். “பாவனா!” என்ற அழைப்பைக் கேட்டு நின்றாள். சுந்தரி பின்னாலிருந்து நெருங்கி வந்தாள்.

“உனக்கு நினைவு இருக்கா? அந்த நாளில் படிப்பில் ஆர்வம் காட்ட மாட்டாய். எப்போதும் கனவு கண்டு கொண்டிருப்பாய். நான் எவ்வளவோ தடவை எடுத்துச் சொல்லி இருக்கிறேன். எல்லாவற்றையும் எடுத்துச் சொன்ன நான் கேவலம் வாயால் சொன்னதோடு மட்டுமே நின்றுவிட்டேன். நீ இன்றைக்கு என் அண்ணனை ஒரே பார்வையில் சிலையாய் நிற்க வைத்த விதத்தை, எங்க அண்ணியை  ஒரே வார்த்தையில் வாயடைக்கச் செய்த விதத்தைப் பார்த்தபோது எனக்குச் சிறு பெண்ணைப் போல் குதித்து கும்மாள மிடவேண்டும் போலிருந்தது. போய் வா பாவனா! உன்னைப் பற்றி லட்சம் பேர் லட்சம் விதமாய் நினைக்கிறார்கள். நினைக்கட்டும். ஆனால் எங்கே போகணும் என்று தெரியாமல் நின்றுவிட்ட என்னைவிட இருட்டில் நடையைத் தொடர்ந்து கொண்டிருக்கும் நீயே மேல். குறைந்த பட்சம் ஒளியைக் காண்போம் என்ற ஆசையாவது எஞ்சியிருக்குமே உனக்கு.”

******

யோசனையிலிருந்து மீண்டாள் பாவனா. சுந்தரியின் நடவடிக்கையை அவளால் புரிந்துகொள்ள முடிந்தது. பழுக்கக் காய்ந்தால்தான் இரும்பு வளையும்  அதற்கு முன்னால் எவ்வளவு சம்மட்டி அடிகள் விழுந்தாலும பயனில்லை என்று நினைத்துக்கொண்டாள். ஆனாலும் ஏதோ குழப்பம் மனதில். அந்தக் குழப்பமான உணர்வுகளை எப்படி போக்கடித்து கொள்வது என்று தெரியவில்லை. பேப்பரையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு தன் மனதில் இருந்த எண்ணங்களை ஒரு கதையாய் எழுதினாள்.

ஒரு இளம் பெண்ணுக்கு எத்தனையோ வரன்கள் வந்தாலும் வரதட்சணை காரணாமாக திருமணம் தள்ளிக்கொண்டே போகிறது. வயது இருபதெட்டாகிவிட்டது. இனி அதுதான் கடைசி வரன். இது நடக்காமல் போனால் தங்கைகளுக்கும் விஷத்தைக் கொடுத்துவிட்டு (அக்காவுக்கு திருமணம் முடியாமல் அவர்களுக்கும் ஆகாது என்பதால்) தானும் செத்துப் போய் விடுவதாய் சொல்கிறார், பழமைவாதியான தந்தை.

மணமகன் வீட்டார் இருபதாயிரம் கேட்கிறார்கள். அந்தப் பெண் யோசித்துவிட்டு, ஒரு முடிவுக்கு வருகிறாள். ரகசியமாக ஒரு ப்ரோக்கரைப் பிடித்து ஐந்து ஆண்களுடன் ஐந்து நாட்கள் கழித்துவிட்டு, அந்தப் பணத்தைச் சம்பாதித்துக்கொண்டு திருமணம் செய்து கொள்கிறாள். அந்த விதமாய்க் குடும்பத்தைக் காப்பாற்றிவிட்டு அந்தற்குப் பிறகு கணவனுடன் சுகமாக இருக்கிறாள்.

இந்தக் கதை நான்கு பத்திரிகைகளிலிருந்து திரும்பி வந்து ஐந்தாவதில் பிரசுரமாயிற்று. புரட்சியைத் தோற்றுவித்தது. நிறையபேர் திட்டித் தீர்த்தார்கள். “கடவுளே! மென்மையான உணர்வுகள் இருக்க வேண்டிய பெண்ணிடம் இந்த விபரீதமான போக்கா?” என்று புலம்பினார்கள். எப்படி இருந்தால் என்ன? பெயர் வருவதற்கு புரட்சிதானே முதல்படி. அதைத் தொடர்ந்து அவள் எழுதிய கதைகள், கட்டுரைகள் வரிசையாக பிரசுரிக்கத் தொடங்கினார்கள். இந்த நேரத்தில்தான் அவள் வாழ்க்கையில் எதிர்பாராத முக்கியமான திருப்பம் ஏற்பட்டது

(தொடரும்)

Series Navigationடௌரி தராத கௌரி கல்யாணம்….! – 2பதின்மூன்றாவது அவுஸ்திரேலியத் தமிழ் எழுத்தாளர்விழா
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *