அக இருப்பு

அம்மாவின் ஸ்பரிசத்தில்
அனுதினமும்
தென்றலாயிருந்தது

பசி வந்து
அழைக்கும் போது
மட்டும் வீடு
சேரும் நாளில்
செல்லப் பிராணியாய்

அலுவல் குடும்பம்
அலைக்கழிக்க
துய்ப்பு செல்வம்
தொடுவானில் நிற்க
வழித்துணையாய்

புனைவும் பொறுப்பும்
கயிறு இழுத்த
போட்டிக்கு இடைப்பட்டு
சுமைதாங்கியாய்

தரிசனங்களின் அலைகள்
கட்டுமரமாய்
அசைக்கும்
நடு ஆயுளில்
சொரணை அதிகமான
இணையாய்

உறக்கம்

பறவைகளுக்கு
ஆதவன்
அடியொட்டி
சிறகு விரிப்போ
ஒடுங்குவதோ
அகமென்பதில்லை

அகமே புனைவின்
அடிப்படையாயிருக்க
சிறகுகளுக்குப்
பகலிரவில்லை

Series Navigationதமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது.