அசல் துக்ளக் இதுதானோ?

Girish-Karnad-Imagesசிவகுமார்.

”சோ” வென்று கேலியுடனும் குதூகலத்துடனும், நடப்பில் உள்ள ஆட்சி பற்றிய எள்ளலும், நையாண்டியும் சேர்த்துக் கொடுத்த, சோவின் “முகமது-பின்-துக்ளக்” ஒரு விதம். தி மெட்ராஸ் ப்ளேயர்ஸ் வடிவமைத்திருந்த “துக்ளக்” இன்னொரு விதம். இரண்டுமே 14ஆம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்தவனின் சாகசக் கதையேதான். இவன் 26 ஆண்டுகள் ஆட்சியில் அம்ர்ந்திருந்தான். மேலே சொன்ன இரண்டாவது படைப்பின் முடிவில், அந்த மன்னன் மீது ஒரு பரிதாபமே உண்டாகின்றது. பத்ம பூஷண் (நாடகாசிரியர்) கிரீஷ் கார்னாடை நாம் நிறைய தமிழ்படங்களில் பார்த்திருக்கிறோம். அந்தக் காலத்திலேயே ரோட்ஸ் ஸ்காலர்ஷிப் பெற்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்திற்குச் சென்று பட்டம் பெற்றவர் (1960-63). இந்த ட்ராமாவை 1964ஆம் வருடத்தில் வரைந்துள்ளார். இந்த நாடகம் வழியாக, நம்மை சரித்திரத்தையே மறுபரிசீலனை செய்ய வைத்து விட்டார். 1964 என்றால் உடன் நினைவுக்கு வருவது நேருவின் மரணம்! நமது நாடு எந்தவித தண்டவாளங்களில் பயணிக்க வேண்டும் என்பதை நாம் நிர்ணயித்த வருடம்!
நாடகத்தின் துவக்கம் மிகச் சாதாரணமாகத் தான் இருந்தது. ப்ரஜைகள் சிலர் நடக்கும் துக்ளக்கின் ஆட்சி பற்றி விமர்சனம் செய்யும் காட்சி. ”பிராமணர் ஒருவரின் முறையீட்டின் பேரில் அவருக்குச் சொந்தமான நிலம் அவரிடமே ஒப்படைக்கப் பட்டது,” என்கிறான் ஒருவன். துக்ளக் நியாயாத்தின் அதிபதியே தான். வாழ்க! வாழ்க! என்கிறார்கள் மக்கள். மெல்ல கதை நகர்கிறது. செஸ் விளையாட்டில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறான் துக்ளக். தனது ”கட்சிக்காரர்களே” தனக்கு எதிராகப் படை எடுத்துள்ளனர் எனும் செய்தி நம்மைத் தாக்குவது போல அவனைத் தாக்கவில்லை. செஸ் தான் முக்கியமாக இருக்கிறது அவன், ”விடை காணாத ஒரு செஸ் நகர்த்தலுக்கு விடையைக் கண்டு விட்டேன்” என்கிறான். அசல் பிரச்னைக்கு – ”ஏதோ நம்மிடம் உள்ள ஆட்படை 6,000 பேரை வைத்துக் கொண்டு பார்த்துக் கொள்ளலாம்” – இதுவே அவனது பதில்.
ஆரம்பத்தில் எல்லோரும் ஒரு நாளைக்கு ஐந்து முறை நமாஸ் புரிதல் வேண்டும் என்பதைக் கட்டாயமாக்குகிறான். எல்லோரும் இதைப் போற்றிப் பாராட்டுகிறார்கள். பக்தி சிரத்தையுடைய இவனல்லவோ மன்னாதி மன்னன் என்று கரகோஷமிடுகிறார்கள். கடைசியில் அவனது தொழுகையின் போதே அவனைக் கொல்ல முயற்சி நடத்தப் படுகிறது. சமயோசித புத்தியுடைய காவலாளி மன்னனைக் காப்பாற்றுவதாக நமக்குக் காட்டப்படுகிறது. உண்மையில் துக்ளக் “உளவுத் துறை” மூலமாக இந்த சதி பற்றி ஏற்கெனவே அறிந்துள்ளான் என்பதை நாம் பிறகு அறிகிறோம். துக்ளக்காக வந்த யோஹான் சாக்கோ அலட்டிக் கொள்ளாமல் ஆனால் அற்புதமாகச் செய்துள்ளார். அமைதியாக இருக்கிறான், ஆனால் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறான் என்பதை, பாத்திரத்தின் தன்மையை முற்றும் உணர்ந்து சித்தரித்திருக்கிறார், யோஹான்.
மன்னனின் மாற்றான் தாயாக வரும் தெஸீம் கட்டாரியின் குரல் “குழலினிது யாழினிது” எனும் வண்ணம் ஒலிக்கிறது. சில நிர்ப்பந்தங்கள் காரணமாக இவளையும் கைது செய்து சிறையிலடைக்க நேரிடுகிறது. நிர்ப்பந்தங்களின் கைதியாகத்தான் மன்னனே திகழ்கிறான்!.
மேலும் பி சி ராமகிருஷ்ணா சரித்திரம் எழுதுபவராக, கச்சிதமாகவும் கெளரவமாக தனது பங்கை நிர்வகிக்கிறார். குரலின் கம்பீரம் வியக்கத்தக்கதாக இருந்தது. பக்காத் திருடனாகவும் அவனது உதவியாளாகவும், ரோஷன் மாத்யூவும், அக்‌ஷை ஆனந்தும், சிரிப்பொலிக்கு வழி வகுக்கின்றனர். நம் வழக்கமான தமிழ் படங்களில் வரும் கதையுடன் ஒட்டாத காமெடியல்ல. காமெடி மெயின் கதையின் ஒரு அம்சமாகக் கொடுக்கப் படுகிறது.
சரித்திர நாடகத்திற்கே உண்டான பிரம்மாண்டமான செட்கள் ஏதும் இல்லை. செட்களை வகுத்த விக்டர் பால்ராஜ் எல்லாவற்றையுமே ஓளியின் தன்மை மூலமாகவே நமக்கு உணர்த்தி விடுகிறார்.
கடைசி காட்சி, நாம் படத்தில் காணும் உறையும் காட்சி (ஃப்ரீஸ் ஷாட்) போல் அமைகிறது. இந்த காட்சி மூலம் நாம் உணரும் அமைதி அலாதியானது. மயான அமைதியா? அல்ல அதையும் மீறியதா இது? பல விஷயங்களைப் போகிற போக்கில் கிளப்பி விடுகிறது. அதாவது, இந்த மன்னன் நமக்குள் இருப்பவனா? அவனது தர்மசங்கட நிலமைகள் நம்மையும் ஒரு நாள் தாக்குமா, அல்லது தாக்கி விட்டதா? மன்னனுக்கு இன்னும் அதிகாரம் வேண்டுமா அல்லது உள்ள அதிகாரத்தை எப்படி நாட்டின் பொருட்டு உபயோகிப்பது என்ற குழப்பத்தில் உள்ளானா? வெறும் அமைதிக்கு இவ்வளவு அர்த்தங்களா?
S.சிவகுமார் (s.sivakumar2004@gmail.com)

Series Navigationபோதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 31‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………29 ஞானக்கூத்தன் – ‘கவிதைகளுக்காக’