அசோகன் செருவில்லின் “ டிஜிட்டல் ஸ்டூடியோ “

This entry is part 31 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

 

சிறகு இரவிச்சந்திரன்.

பாலியல் கதைகளைத் தாண்டி, எப்போதாவது வணிக இலக்கிய(!) இதழ்களில், நல்ல கதைகள் வரும். அப்படி நான் கண்ணுற்று எழுதியதுதான் சுகுமாரனின் ‘சர்ப்பம் ‘, பிரபஞ்சனின் ‘ மரி என்கிற ஆட்டுக்குட்டி ‘. எந்வொரு எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் நான் நூலகத்திற்குப் போகிறேன். இன்றும் அப்படித்தான் போனேன். ஆனால் அதிர்ஷ்டம் பாருங்கள்! ஒரு நல்ல கதையைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரே ஒரு குறை. கதை தமிழில் என்றாலும், மூலம் மலையாளம். வந்தது உயிர்மை ஜூலை இதழில்.
இதற்கு முன்னால், ஒரு பழங்காலப் போட்டோ ஸ்டூடியோவைப் பற்றி, தமிழில் ஏதாவது கதை வந்திருக்கிறதா என்று தெரியவில்லை. “ ஸ்மைல் ப்ளீஸ் “ என்றொரு தலைப்பு ஞாபகத்தில் நெருடுகிறது. அது கதை என்றால், எழுதியது ஜெயகாந்தனா? சுஜாதாவா? கொஞ்சம் தடுமாற்றம்தான்.
கதை இதுதான். அடுக்கு மாடிக் குடியிருப்பின், வெள்ளி விழா மலரில் போட, ஓய்வு பெற்ற சார்பதிவாளர் புகைப்படத்தைக் கேட்கிறான் சதாசிவம். “ கோட்டு சூட்டு போட்டு கம்பீரமா இருக்கணும் சாரே! அப்போதான் கெத்தா இருக்கும்.” நாளைக்குக் கொடுக்க வேண்டும். அதனால் இன்றே எடுக்க வேண்டும். “ டெக்னாலஜி எங்கியோ போயிடுச்சு.. எடுத்த ரெண்டாவது நிமிஷம் கையிலே படம் கொடுத்துடுவான். “
வேட்டி சட்டையுடன், போட்டோ எடுக்கப் போகும் பெரியவர், டிஜிட்டல் ஸ்டூடியோ பேனர் பார்த்து, அந்தப் பழங்காலக் கட்டிடத்தின் செங்குத்தான பழைய மரப்படிகளில், தொங்கும் கயிற்றைப் பிடித்துக் கொண்டே ஏறுகிறார். நீண்ட வராந்தாவில், சுவற்றில் கருப்பு வெள்ளைப் புகைப்படங்கள். புகைப்படக்காரருக்கு ஒரு கால் ஊனம். ஆனாலும் அவர் ஊன்றுகோல் இல்லாமல்தான் நடக்கிறார். அவர் எப்படித்தான் இந்தப் படிகளில் தினமும் ஏறுகிறாரோ என்கிற சிந்தனயுடன், புகைப்படக்காரர் துணையுடன், கோட்டு சூட்டு போட்டு, டை கட்டி கேமரா எதிரே உட்காரும்போது மின்தடை. மூன்று மணி நேரம், இருட்டில், கோட்டை, முக்கியமாக கழுத்து டையை ( அதை இறுக்கக் கட்டிவிட்ட போட்டோகிராபர்தான் அவிழ்க்க வேண்டும் ) கழட்ட முடியாமல், புகைப்படக்காரரின், பல வருடப் புராணத்தைக் கேட்கும் அவஸ்தை பெரியவருக்கு. போட்ட பழைய கோட் வேறு, பூச்சி அரித்து, இன்னும் ஒன்றிரண்டு பூச்சிகள் உள்ளே ஓடிக்கொண்டிருக்கும் அசூயை. கோட்டை உதறக்கூடாது என்ற புகைப்படக்காரரின் நிபந்தனை.
“ தோழர் கோபாலகிருஷ்ணன் தெரியுமா? அவரை நான் தான் போட்டோ எடுத்தேன். பெருசு பண்ணி ரொம்ப நாள் வெளியில மாட்டி வச்சிருந்தேன். உங்களுக்கு அவரைத் தெரியுமா? “
“ விபத்துல காலமாயிட்டாருன்னு கேள்விப்பட்டிருக்கேன். “
“ அதெல்லாம் இல்ல.. நடுத்தெருவில போலீஸ் அவரை அடிச்சு, கொளுத்திட்டாங்க”
பெரியவருக்கு வேர்க்கிறது. கரெண்ட் வந்த பாடில்லை. போட்டோகிராபர் பேசிக் கொண்டே இருக்கிறார்.
“ அப்புறம் ஒரு நாள் இன்ஸ்பெக்டர் வந்தாரு. ‘ என் படத்தை நீதான் எடுக்கற.. பெரிசு பண்ணி வாசல்ல மாட்டற ‘ ன்றாரு. போலீஸ் ஸ்டேஷன்லேர்ந்து திரும்பி வந்தபிறகு, கால் இப்படி ஆகிப்போச்சு. “
கரெண்ட் வருகிறது. ஆனால் அதற்குள் பேசிப் பேசிப் புகைப்படக்காரர் தூங்கிப் போகிறார்.
இந்தக் கதையில் எந்தவித பாசாங்கும் இல்லை. பெரிய சமூக நீதி அறிவுரைகள் இல்லை. போகிற போக்கில் பல விசயங்களைச் சொல்லிக் கொண்டே போகிறது கதை. பெரிதாக வர்ணணைகள் இல்லாவிட்டாலும், நாம் எப்போதோ பார்த்த ஒரு பழைய போட்டோ ஸ்டூடியோவைக், கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.
“ அந்தக் காலத்துல பொட்டி மாதிரி இருக்கும் கேமரா. போட்டோகிராபர் அதுக்குள்ளே தலையை விட்டுக்குவாரு. அவர் தலை வெளியே வந்தாத்தான் நாம நகரணும். “
உடனே நம் கண்முன் விரிகிறது கறுப்புத் துணி போர்த்திய அந்தக் கேமரா.
“ கரெண்ட் வந்தவுடனே எடுத்திடலாம் சார். உங்க கண்ணு சரியில்லையா சொல்லுங்க.. போட்டோ ஷாப்புல ஆயிரம் கண்ணு வச்சிருக்கேன். எத வேணுன்னாலும் போட்டுக்கலாம். “
“ எத்தனை கேமரா வந்தாலும், போட்டோ எடுக்கறவன் மனசு அதிலே இருக்கணும் சார். “
“ செத்துப் போனவனைப் போட்டோ எடுக்கறச்ச கூட, பழக்க தோஷத்தில ‘ஸ்மைல் ப்ளீஸ் ‘ னு சொல்ற போட்டோகிராபர்ஸ் உண்டு சார். “
மெல்லிய நகைச்சுவை. கால் சூம்பிப் போனதன் பின்னணிச் சோகம், வந்த வியாபாரத்தை விட்டு விடக்கூடாது என்று எதையெதையோ பேசிச் சமாளிக்கும் அந்தப் புகைப்படக்காரரின் தொழில் நிர்பந்தம். ஆனால் இவை எதையும் ஆசிரியர் கோடிட்டுக் காட்டவில்லை என்பதுதான் இந்தக் கதையின் சிறப்பு.
முக்கியமாக இன்னொன்று. குறிப்பு ஏதும் இல்லாமல் இந்தக் கட்டுரையை நான் எழுதுவதற்கு, அந்தக் கதை என்னுள் ஏற்படுத்திய தாக்கம். அசோக் செருவில்லின் மற்ற கதைகளைப் பற்றி யாருக்காவது தெரிந்தால் எழுதுங்களேன்.
0

Series Navigationமானுடர்க்கென்று……..பூங்காவனம் ஒன்பதாவது இதழ் மீது ஒரு பார்வை
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *