அணைந்து போனது ஓவியரின் அகவிழிப் பார்வை

author
0 minutes, 0 seconds Read
This entry is part 6 of 9 in the series 18 டிசம்பர் 2022

குரு அரவிந்தன்

ஓவியர்கள் கற்பனையிலும் ஓவியம் வரைவார்கள், இல்லாவிட்டால் கண்ணால் பார்த்ததை அப்படியே வரைவார்கள், ஆனால் அவர்களின் கண் பார்வையே பறிபோய்விட்டால் அவர்கள் என்ன செய்வார்கள்? இப்படியான ஒரு சோகமான சூழ்நிலைதான் ஓவியர் மனோகருக்கு ஏற்பட்டது, ஆனாலும் அவர் அதற்காக உடைந்துபோய் உட்கார்ந்து மௌனமாகி விடவில்லை, தன்னால் முடிந்தளவு ஓவியங்களை இறுதிவரை வரைந்து கொண்டே இருந்தார்.

கடைசிக் காலத்தில் கறுப்பு வெள்ளைக் கோட்டு வரைபடங்களை வரைவதில் அதிக அக்கறை காட்டினார். தமிழக இதழ்களில் வெளிவந்த எனது கதைகளுக்குப் பிரபல ஓவியர்கள் பலர் அவ்வப்போது படங்களை வரைந்திருந்தார்கள். குறிப்பாக ஓவியர்களான ஜெயராஜ், மாருதி, ராமு, மணியன் செல்வன், அர்ஸ், பாண்டியன், மனோகர் போன்றவர்களைக் குறிப்பிடலாம். விகடன் பவழவிழா போட்டியில் பரிசு பெற்ற ‘நீர்மூழ்கி நீரில்மூழ்கி’ என்ற எனது குறுநாவலுக்கு ஐந்து பிரபல ஓவியர்கள் படம் வரைந்திருந்தனர். இவர்களின் ஓவியங்கள் எல்லாம் ஒவ்வொரு கோணத்தில் மிகச் சிறப்பாக அமைந்திருந்தாலும், என்னை வியக்க வைத்தவர் மனோகர் தேவதாஸ் என்ற ஓவியர்தான் என்றால் மிகையாகாது.

இவரைப்பற்றி முன்னாள் விகடன் ஆசிரியர் வியெஸ்வி அவர்கள் ஒருமுறை குறிப்பிட்ட போதுதான், எனக்கு அவர் குறிப்பிட்ட விடயம் அதிர்ச்சியைத் தந்தது. அதனால் இவர் எனது கதைக்கு வரைந்த ஓவியங்களைப் பல தடவை திரும்பத் திரும்பப் பார்த்து வியந்திருக்கின்றேன், காரணம் 1983 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழருக்கு ஏற்பட்ட அவலநிலையைப் பற்றி விகடன் தீபாவளி மலரில் வெளிவந்த, உண்மைச் சம்பவத்தைக் கருப்பொருளாகக் கொண்ட ‘நங்கூரி’ என்ற எனது கதைக்கு மிகவும் தத்ரூபமாக மனோகர் படங்களை வரைந்திருந்தார். பொதுவாக அவர் இதழ்களுக்கு ஓவியம் வரைவதில்லை, ஆனால் இந்த கதையின் கருப்பொருள் காரணமாக, தமிழர்களின் வலியை உணர்த்த வேண்டிய அவசியம் கருதி, சொந்த மண்ணுக்கே நாங்கள் அகதிகளாகச் சென்ற நங்கூரி கப்பல் எப்படி இருக்கும், அல்லது மாவீரர் துயிலும் இல்லம் எப்படி இருக்கும் என்றே தெரியாத நிலையில் அவர் இந்த ஓவியங்களை அகவிழியால் உணர்ந்து வரைந்து கொடுத்திருந்தார்.

மனோகர் தேவதாஸ் என்று அழைக்கப்பட்ட இவர் ஓவியம் வரைய தொடங்கிய காலத்தில் அவருக்கு பார்வை நன்றாகவே இருந்தது. அவர் கண்ணால் பார்த்ததை அப்படியே வரைந்தார். காலம் செல்லச்செல்ல அவருக்கு ரெட்டினிஸ் பிக்மென்டோஸா என்ற விழித்திரை நோய் ஏற்பட்டு, பார்க்கும் திறன் குறையத் தொடங்கியது. இளமையில் வண்ணங்களில் பார்த்த காட்சிகளை, எது எந்த நிறம் என்று கண்டுணர முடியாத ஒருவித அவலநிலையை அந்த நோய் ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அவர் மனம் தளராது தான் முன்பு வெளிச்சத்தில் பார்த்ததை, அப்படியே அகவிழியால் வரைந்து கொண்டிருந்தார்.

பத்மஸ்ரீ விருது பெற்ற, பாரம்பரிய கட்டடங்களை வரைவதில் சிறந்த ஓவியரான மனோகர் சென்ற 7 ஆம் திகதி மார்கழி மாதம் உடல்நலக் குறைவால் தனது 86 வது வயதில் சென்னையில் காலமானார். இவர் எழுதிய ‘எனது மதுரை நினைவுகள்,’ ‘நிறங்களின் மொழி,’ ‘கனவுகள்,’ ‘பருவங்கள் மற்றும் வாக்குறுதிகள்’ போன்ற சில நூல்கள் வெளிவந்திருக்கின்றன. தனது மனைவி மகிமாவின் பெயரால் தொண்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி அதன் மூலம் கிராமத்து மக்கள் கண் சிகிச்சை செய்வதற்கு உதவி வந்தார்.

தனது மனைவியின் நினைவாக ‘வண்ணத்துப் பூச்சிகளும் மகிமாவும்’ என்ற நூலையும் வெளியிட்டுள்ளார். ஓவியர் மனோகர் தேவதாஸ் எனது கதைக்கு ஓவியம் வரைந்ததை நான் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம் என்றே நினைக்கின்றேன். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிப் பிரார்த்திக்கின்றேன்.

Series Navigationதெளிவு! 3 குறுநாவல்கள். ஜனநேசன்.க.நா.சு கதைகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *