அண்ணே

Spread the love

நீ பதித்த தடத்தில்
நான் பாதம் பதித்தேன்
நடை வேகமானது
வியர்வைப் பூ தூவி
நுரை தள்ள
நீ எனைத் தள்ள
மிதிவண்டி கற்றேன்
மூச்சடக்கி
நீ முதுகு விரித்ததில்
நீச்சல் கற்றேன்.

ராவுத்தர் குளத்தில்
மீன் பிடித்தது
கொலுசம்பீ சுவரேறி
கொடுக்காய்ப்புளி பறித்தது
காக்கா வீட்டு நாயை
கல்லால் அடித்தது
அத்தனையிலும்
எனைத் தப்பிக்க வைத்தாய்
தண்டனை நீ பெற்றாய்

ஒரு மழை மாலை
உன் சட்டையே
முக்காடாய் நான்
மொத்தமும் தெப்பமாய் நீ

கல்லூரி வாழ்க்கை
ஒன்னாந்தேதி உன்
‘மணியார்டர்’ வரும்
அடிக்கடி எழுதுவாய்
‘நீ நலமென்றால்
நான் நலம் என்று’

இன்னார் மகன் என்பது
இரண்டாம் முகவரி
உன் தம்பி என்பதே
என் முதல் முகவரி

கல்யாணங்கள் முடிந்தன
நுகத்தடி மாடுகளாய்
சுமைகளைப் பகிர்ந்தோம்
40 ஆண்டுகள் நழுவிவிட்டன
நீ ஊரில்
நான் சிங்கையில்
நீ எழுதியது
பொய்யானதண்ணே

இன்று தோல் போர்த்திய
முள்ளாய் நீ
உன் நினைவுத் திரையை
காலக் கறையான்கள்
தின்றுவிட்டன
குளம் குழியாகிப் போனது
காடு செடியாகிப் போனது
சுள்ளி நெருப்பை
சூரைக்காற்று மேய்கிறது

நம் கதையின்
கடைசி வரி எழுத
கண்ணீர் மையுடன்
இன்னும் சிறிது நேரத்தில்
நம் இறுதிச் சந்திப்பு

அமீதாம்மாள்

Series Navigationசிங்கப்பூரில் பாக்யாவுடன் ஒரு பட்டிமன்றம்உமர் கயாம் ஈரடிப் பாக்கள் பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத்