அதிர்வுப் பயணம்

 

 

பள்ளி ஆசிரியர்

முன் வரிசை வகுப்புத் தோழன் தோழி

அப்பா மூத்த சகோதர சகோதரி

தொடங்கி வைத்தார்

கல்லூரியில் உச்சக் கட்டம்

 

மேலதிகாரி வாடிக்கையாளர்

சகவூழியன் மேலெடுத்துச்செல்ல

 

மகன் மகள் மனைவி

அண்டை அயல்

தரும்

அதிர்வுகள் ஓய்வதில்லை

 

தனியே பயணம்

செய்தால்

கைபேசி வழி

தாக்குதல் தொடரும்

 

மின்னஞ்சல்

முகனூல் மேலும்

எண்ணற்ற செயலிகள்

உறக்கத்தின் எதிரிகள்

 

அதிர்வின்

அதீதம் பழகி

அபூர்வ மௌனமே

அச்சம் தரும்

 

மின்னுலகம் என்னுலகை

விழுங்கியது சிறிய சோகம்

என்னுலகின் விளிம்புகளை விரிவுகளை

எழுதிப் பார்க்கத்

துப்பில்லை

இது

அந்தரங்க வலி

 

அவ்வப்போது

சுருதி பெற்று

அதிர்வால்

கோடி இதயங்களை

இசையாய் வியாபித்து

இயல்பாய்

ஏதுமற்று இருக்கும்

கொடுப்பினை

வீணையின் தந்திகளுக்கு

மட்டும்

 

Series Navigationசெம்மொழிச் சிந்தனையாளர் பேரவை புதுக்கோட்டை செய்திக்குறிப்புஉதிராதபூக்கள் – அத்தியாயம் -3