அது அந்த காலம்..

அம்பல் முருகன் சுப்பராயன்

சிறுவயதில்
சளி, காய்ச்சல் வந்தால்
எங்களூர் மருத்துவர் காசாம்பு
எழதி தரும்
அரிசி திப்பிலி,
கண்ட திப்பிலி,
பனங்கல்கண்டு,
ஆடாதொடா இலை,
துளசி,
சித்தரத்தை,
தேன்,
கருப்பட்டி ஆகியன
வாங்கி வருவார் அப்பா..
கியாழம்
செய்து கொடுப்பார் அம்மா.
ரஸ்க் ரொட்டியை
பாலில் நனைத்துத்
தருவாள் அக்கா..
உடம்பு முடியாத செய்தி கேட்டு
அக்கா பாட்டி
இட்லியும்
திருவாட்சை இலை துவையலும்
ஊட்டுவாள்..
மாணிக்கவள்ளி அத்தை
மிளகு ரசம் செய்து தருவார்..

இன்று
என்ன? ஏது? என
கேட்காமல்,
முகத்தைக்கூட
பார்க்காமலும்
ஐம்பது காசு
பாராசிட்டமால்
மாத்திரையை எழுதி
வாசலில்
ரூபாய் 250 கட்டணம்
செலுத்தி நகருங்கள் என்று..
அடுத்த நோயாளியை
கூப்பிடுகிறார்
நகரத்து ஆங்கில மருத்துவர்.

~அம்பல் முருகன் சுப்பராயன்

Series Navigation