அத்திப்பழம்

மு.வெங்கடசுப்ரமணியன்

மணி மாலை 6.30யைத் தாண்டிக்கொண்டிருந்தது. 28வது எண் பேருந்தில் இருந்து ஒரு வாட்டசாட்டமான மனிதர் கையில் ஒரு பையோடு இறங்கினார்.  நெரிசலிலிருந்து இறங்கிய அவர் வெளியே வந்த நிம்மதியில் சுதந்திர காற்றை இரண்டு மூன்று முறை சாவகாசமாக இழுத்துவிட்டு தன்னுடலை ஒரு நிலைக்குக் கொண்டுவந்தார். பிறகு, சாலையை கடந்து முக்கியத் தொடர்வண்டி நிலையத்திற்குள் மெல்ல நடந்துவந்தார். அந்த எழும்பூர் நிலையத்தின் தெற்கு நோக்கிச் செல்லும் சில வண்டிகள் அடுத்தடுத்து இருப்பதால் பயணிகளும், அவர்களை வழியனுப்ப வந்தவர்களும் எழும்பூருக்கு வரும் பயணிகளை வரவேற்க வந்தவர்களுமாக அந்நிலையம் ஒரு ஜனசமுத்திரமாக காட்சிய ளித்தது. மின்விசிறிகள் குளிர்ந்த காற்றை வீசினாலும் மதிய வெப்பத்தின் எஞ்சிய உஷ்ணமும் வந்துபோவோரின் மூச்சுக்காற்றுமாக ஒரு இரண்டுங் கெட்டான் வெப்பநிலையை உருவாக்கியிருந்தது. வண்டிகளின் வருகை புறப்பாடு பற்றிய அறிவிப்புகள் ’டொன்டொய்ன் டொன்டொய்ன் டொன்டொய்ன்’ என்ற சத்தத்திற்கு இடையே மூன்று மொழிகளிலும் அறிவிக்கப்பட்ட ஒசை தெளிவில்லாமலும் காதில் விழுந்தது.

 

உருட்டிச் செல்லும் சூட்கேசுகளின் சரசர ஒலியும், சாமான்களை ஏற்றிச் செல்லும் டிராலி கோரின் கட கட ஒலியும் காதை அடைத்தது.  வண்டியிலிருந்து இறங்கிய சந்திரசேகர் வயது சுமார் 54 வயதுக்காரர்.  5 3/4 அடிக்கு குறையாமல் உயரம்.  மாநிறம், இடது கையில் ஒரு சாதாரண கடிகாரம்.  வலது கையில் ஒரு மோதிரம்.  மெரூன் கலரில் ஒரு முழுக்கால் சட்டை, வெண்ணிற அரைக்கைச்சட்டை, ஒரு வாரமாக ஷேவ் செய்யப்படாத முகம், சிந்தனை ரேகை, பரந்த நெற்றி, வந்த அழைப்பை ஏற்றுப் பேசிய கைபேசி, இத்துடன் எதிரே பார்த்துக்கொண்டு நிதானமாக முதல் நடைமேடைக்குள் வந்து பளிங்கு இருக்கையில் வந்தமர்ந்து ஒரு ஆசுவாச பெருமூச்சை விட்டுக் கொண்டார்.

 

கைப்பேசியை பையில் வைத்துக்கொண்டு பயணச் சீட்டை சோதித்துப்பார்த்துக் கொண்டார்.  அவர் அமர்ந்திருந்த இருக்கையில் நல்ல வெளிக்காற்று அவரை உரசிச்சென்றது. தன்னுடைய கைப்பையை நிதானமாகத் திறந்து அன்றைய ஆங்கில நாளேட்டை விரித்து மிச்சம் மீதி பார்க்காமல் இருந்த செய்திகளை வரி விடாமல் ஒவ்வொன்றாக படித்து பார்த்தார். அதற்கு 15 நிமிடங்களுக்கு மேல் ஆகவில்லை. அவர் செல்ல வேண்டிய வண்டிக்கு இன்னும் 1 மணி நேரத்திற்கு மேல் அவகாசம் இருந்தது. எனவே, கேண்டின் வரை சென்று ஒரு காபியை வாங்கிப் பருகத்தொடங்கினார். சூடு இருந்தது. சுவை இல்லை. இனிப்பும் இல்லை. ’ஏண்டா இக் காபியை வாங்கினோம்’ என்று சலித்துக்கொண்டார்.  பிறகு, கோப்பையை ஒரு பக்கமாகப் போட்டுவிட்டு ஜன சந்தடி குறைவான ஒரு பகுதிக்கு மீண்டும் வந்து அமர்ந்தார். இப்போது அவர் இருக்கைக்கு பக்கத்தில் ஆஜானுபாகுவான, 30 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞன். பேண்ட், ஷூ, டீ-ஷர்ட் களையான முகம். கையில் நாளிதழ். அதில் கவனத்தை செலுத்தியவாறு அமர்ந்திருந்தான்.

அவர் அருகில் அமர்ந்ததைக்கூட கவனிக்காத அவன் முகத்தில் கோபம், வருத்தம், கேலி, விசனம் போன்ற கதம்பக் குறிகள் தோன்றிமறைந்தன.  ’பையன் பரம இரசிகனாக இருப்பான் போலும்’,  என்று சந்திரசேகர் நினைத்துக் கொண்டார். அடுத்த 10 நிமிடங்களில் நாளிதழை மடித்து ஒரு பக்கத்தில் போட்டுவிட்டு கைகளை சேர்த்து தலைக்குமேல் தூக்கி உடம்பை ஒரு முறை முறுக்கி ஒரு கொட்டாவியை விட்டுவிட்டு எழுந்துநின்று பின் மீண்டும் அமர்ந்தான். இதுவரை அவனைக் கவனித்துவந்த சந்திரசேகரை அவன் ஏற இறங்க ஒருமுறை பார்த்தான். வயது இடைவெளி காரணமாக உடனே அவரோடு பேச்சுக்கொடுக்க அவனால் முடியவில்லை.

 

ஒரு முறை சுற்றும்முற்றும் பார்த்தான். அவரது பணப்பையில் வெளியே நீட்டிக் கொண்டிருந்த புல்லாங்குழல் அவன் கண்ணில் பட்டது. இவருடைய தோற்றத் திற்கும், அந்தக் குழலுக்கும் அதிகத் தொடர்பு இருப்பதுபோல் தெரியவில்லை.  அவனது பார்வை தன்னையும் குழலையும் கவனிப்பதைப் பார்த்து ஏதோ கேட்க நினைக்கிறான் என்று புரிந்துகொண்ட சந்திரசேகர், “என்ன தம்பி, ஒரு பெரிய ஆராய்ச்சியே செய்கீறிர்கள்போல் தெரிகிறது!”,  என்று தன் பேச்சை தொடர்ந்தார்.  அவரது முகத்தில் ஒரு புன்சிரிப்பு தவழ்ந்தது. அவனும் பதிலுக்கு ஒரு முறுவலை உதிர்த்துவிட்டு “நீங்கள் பார்ப்பதற்கு ஒரு ஆசிரியர் போல் இருக்கிறீர்கள். ஆனால், இந்தக் குழல் எவ்வாறு உங்களோடு தொடர்பாகிறது என்றுதான் பார்த்தேன்”, என்று முடித்தான்.

 

அவர் ஒரு முறை தொண்டையை கனைத்துவிட்டு, “உன் ஊகம் சரிதான்,  நான் ஆசிரியர் தான். ஆனால், கலைஞனாக இருக்கக்கூடாது என்று நிபந்தனை ஏதும் இல்லையே?”,  என்று கேட்டார்.

 

“உங்களுக்கு உங்கள் பணியில் இதற்கெல்லாம் நேரம் ஒதுக்க முடிகிறதா?”, என்று அடுத்த கேள்வி.

 

”முடியும் தம்பி, பணியின் சுமையை மறக்க மனதை இலேசாக்க இசையும் கலையும் பெரிதும் பயன்படுகிறது தம்பி”, என்றார் சந்திரசேகர்.

 

”நீங்கள் எந்த வகை இசை வாசிக்கீறீர்கள்?”. “நான் பெரும்பாலும் அதிகம் சினிமாப் பாடல்களை தான் வாசிப்பேன். அதுதான் சுலபம் பலரையும் கவரும். தவிரவும், நான் முறைப்படி கர்நாடக இசையை அவ்வளவாகப் பயிலவும் இல்லை” என்று நிறுத்தினார்.

 

“ஐயா, தாங்கள் என்ன ஆசிரியராக இருக்கிறீர்கள்?”, என இளைஞர் கேட்டான்.

 

”நான் தமிழாசிரியர் தம்பி.  10 ஆம் வகுப்பு வரை. சரிதம்பி உங்கள் பெயரை சொல்லவில்லையே”.

 

“என் பெயர் அருண். எம்.ஏ.உளவியல். எம்.ஏ சமூகவியலும் படித்துக் கொண்டிருக்கிறேன். அத்துடன் ஒரு தனியார் நிறுவனத்தில் கணினி கையாளுனராகவும் இருக்கிறேன்” என்று முடித்தான்.

 

‘பயணம் எவ்வளவு தூரம்’, என்று கேட்டான். ”கோவில்பட்டி வரை. ஆனால் இப்போது செங்கோட்டைவரை சென்று குற்றாலத்தில் ஒரு நாள் தங்கிவிட்டு கோவில்பட்டி திருமணத்தில் கலந்துகொண்டு விட்டு இரு நாட்களுக்குப்பின் சென்னை திரும்ப உத்தேசம்” என்றார் சந்திரசேகர்.

”நீங்கள்?”.

 

”நானும் தென்காசி வரை அதே வண்டியில் தான் வருகிறேன்”.

 

இருக்கை எண்கள், படுக்கை எண்களைப் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ள அருகருகே அமைந்திருப்பது கண்டு வியந்தனர்.

 

உரையாடல் முடியும்போது செங்கோட்டை வண்டி நடைமேடைக்கு வருவதாக அறிவிப்பாளர் குரலும், இரயில் வண்டியின் கொம்பொலியும் ஏககாலத்தில் கேட்டன. நடைமேடை பரபரப்பானது. சந்திரசேகர், அருண் இருவரும் குறைந்த சுமையை தூக்கிக்கொண்டு நிதானமாக நடந்து பெட்டி எண்ணைத் தேடி அமர்ந்தனர். அன்று ஏனோ அந்த பெட்டியில் கூட்டம் அதிகம் இல்லை.  விளக்குகளைப் போட்டு இருக்கையில் அமர்ந்தனர். அருண் உரையாடலில் ஆர்வம் காட்டி மேலும் தொடர்ந்தான்.

 

”பயணத்திற்கு குற்றால சீசன் காரணமா?”

 

”அப்படியெல்லாம் இல்லை தம்பி! என் மருமகளுக்கு குழந்தை பிறந்துள்ளது.  அதற்கு பெயர் சூட்டு விழா நாளை மறுநாள்.  அதுதான் இப்பயணம்”.  கச்சிதமாக இருந்தது சந்திரசேகரன் பதில்.

 

பையனின் பார்வையில் வியப்பு. சந்திரசேகர் கேட்டார் ”என்ன தம்பி வியந்து பார்க்கிறாய்?”

 

”ஒன்றுமில்லை, மகனுக்கு குழந்தை பிறந்துள்ளது என்றுதான் பெருமையாகச் சொல்வார்கள். நீங்கள் மருமகள் என்பதால் உங்கள் சகோதரியின் பெண்ணிற்கா அல்லது உங்கள் மகனின் மனைவிக்கா?”, என்று நிறுத்தினான்.  .

 

”இரண்டுமேயில்லை. எங்கள் தத்துப்புத்திரனின் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது. எனக்கு பொதுவாக பெண்ணினத்தின் மீது மதிப்பு அதிகம்.  ஆகவே ஒரு ஏற்றம் கொடுத்து நகைச்சுவையாகச் சொன்னேன்”.  சந்திர சேகரனின் பதில். பின், “அப்படியானால் உங்களுக்கு என்று குழந்தைகள்?  என்ற உங்கள் கேள்வி தெரிகின்றது”, என்றவர், ஒரு சிறு பெருமூச்சிற்குப் பிறகு ”எங்களுக்கு அந்த வாய்ப்பை இயற்கை கொடுக்கவில்லை”, என்றார்.

 

இளைஞன் கண்களில் கேல்வி தொக்கிநின்றதைப் பார்த்து, ”தம்பி, அது ஒரு பெரிய கதை”, என்றவாறு ஹ்டொடர்ந்து பேசலானார்:

 

”நான் ஏற்கனவே ஒரு ஆசிரியர் என்று சொன்னேன். ஆனால், நான் படித்தது  தமிழ். ஆகவே, காலம் போன கடைசியில் தான் வேலை கிடைத்தது.  அதைக் தொடர்ந்து தாமதத் திருமணம். தவிர, இயற்கையின் சதி அங்குதான் ஆரம்பமானது.  திருமண வாழ்க்கை தாம்பத்தியத்திற்கு மட்டுமே பயன்பட்டதே தவிர சந்ததிக்கு அது வழிசெய்யவில்லை. காலதாமதமின்றி நானும் என் மனைவியும் மருத்துவரை அணுகினோம். சோதனைக்காகவே ஒரு சிறு அறுவைசிகிச்சைகூட என் மனைவிக்குச் செய்யப்பட்டது.  தொடர் சிகிச்சையில் பணம் தண்ணீர்போல் செலவானது தான் மிச்சம். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. கொடுத்துவைத்தால்தான் கிடைக்கும் என்று  அமைதி யாகிவிட்டேன். ஆனால் எனக்குள் சில தவிர்க்கமுடியாத ஆசைகள் இருந்தன.  அதை ஒரு நியாயமான வழியில் தீர்க்க விரும்பினேன்”, என்றார்.

 

மேலும் தெரிந்து கொள்ளும் ஆவலில் கண்களைச் சற்று அகல விரித்து அவரைப் பார்த்தான் அருண்.  புரிந்துகொண்டதற்கு அடையாளமாக ஒரு புன்னகை உதிர்த்துவிட்டு சந்திரசேகரன் தொடர்ந்தார்.  ”தம்பி, எங்களுக்குத்தான் அந்த வாய்ப்பில்லை. ஏன் ஒரு குழந்தையை தத்தெடுத்துக்கொள்ளக்கூடாது என்று நினைத்தேன். அதற்கு அடிப்படையாக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி அமைந்தது.

அதில் ஒரு சமூகநல நிறுவனம் சமூகத்தில் மக்கள்தொகைப் பெருக்கத்தின் முக்கியத்துவத்தைக் கருதியும், பெண்களின் உடல்நலம் பேணவும், அபிலாஷைகளைப் பூர்த்திசெய்துகொள்ளவும் அந்த நிகழ்ச்சியில் சில கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

 

இரண்டு குழந்தைகளை பெற்றுக்கொள்ள விருப்பம் இருந்து, முதல் குழந்தை ஆணாக இருந்தால் இரண்டாவது குழந்தை ஒரு பெண் குழந்தையாக தத்தெடுத்துக் கொள்ளலாம். இதுபோல் முதலில் பெண்ணாக இருந்தால் ஒரு ஆண் குழந்தையை தத்தெடுத்துக்கொள்ளலாம். இதன்படி வேலைக்குச் செல்லும் பெண்கள் அடிக்கடி விடுப்பு எடுத்துக்கொண்டு குழந்தை பெற்றுக்கொண்டு அதை முறைப்படி பராமரிக்கும் சிக்கலிலிருந்து விடுபடலாம். சில சமயம் சில பெண்களுக்கு இரண்டாம் குழந்தையை பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகலாம். உதாரணமாக, ’ஸிபி’ நெகடிவ் பிரிவு இரத்தத்தைக் கொண்ட குழந்தை பிறந்தால் அவர்கள் இரண்டாம் முறை கருத்தரிக்க வாய்ப்பில்லை.  சில சமயம் இரண்டாவது குழந்தையை தாங்கும் வலுவை கருப்பை இழந்துவிடலாம். இதுபோன்ற மையக் கருத்துகளுடன் தாங்கள் விரும்பும் ஒரு குழந்தையை (ஆணோ பெண்ணோ தத்தெடுத்துக்கொண்டால் துரதிஷ்டவசமாக நிராதரவாக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஒரு பெற்றோரும் நல்வாழ்வும் கிட்டும். அத்துடன் ஒரு சமூகநலப்பணியும் நடைபெறும் என்ற கருத்தை வலியுறுத்தியது அந்த நிகழ்ச்சி. இந்தக் கருத்துகளின் அடிப்படையில் தான் எனக்கு ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கலாம் என்ற எண்ணம் உதித்தது. ஆனால், இங்கு விதி என் வாழ்வில் மீண்டும் சதி செய்யத் தொடங்கியது.  காதலர் இருவர் கருத்தொருமித்து வாழ்வதே இவ்வாழ்க்கை. ஆனால் என் மனைவிக்கும் எனக்கும் இந்த தத்து விஷயத்தில் கருத்துமுரண்கள்தான் நிலவின.  பாரதி அன்று சொன்னான்:  ’காதல் ஒருவனை கைப்பிடித்து அவர் காரியம் யாவினும் கை கொடுத்து மாதர் அறங்கள் பலவும் கற்று இங்கு மாட்சி பெறச் செய்து வாழ்வமடி!  என்று.  என் மனைவிக்கு குழந்தை விஷயத்தில் பேச்சு ஒன்றும் எண்ணம் வேறாகவும் இருந்தது. ’குழந்தை பிறக்காவிட்டால் என்ன? தத்தெடுத்துக்கொள்ள வேண்டாம்’ என்பாள். ஆனால், தெருவில் உள்ள சில குழந்தைகளிடம் அவள் காட்டுகின்ற அன்பும், பரிவும் அவர்களைக் கொஞ்சுகின்ற விதமும் கணவன் என்ற முறையில் அவள் மனக்கருத்தை எனக்கு நன்றாகவே உணர்த்தின.

 

நான் பலமுறை வற்புறுத்தியும் அவள் கருத்தை மாற்றிக்கொள்ளவில்லை.  சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு அவள் தத்தெடுக்க விரும்பியபோது அது போன்ற நிறுவனம் ’தத்தெடுத்துக் கொள்ளும் தம்பதியினரின் வயது மொத்தம் 90க்குள் இருக்கவேண்டும். அப்படியிருந்தால் தான் மூன்று வயதிற்குட்பட்ட குழந்தையை தத்து கொடுக்க முடியும் என்று எடுத்துக்கூறியது. அதன் பின்பு ’வயதுகூடிய குழந்தையை எடுத்துக்கொள்வதில் பிரச்சினைகள் பல வரும்.  தவிரவும், அக்குழந்தை நம்முடன் ஒட்டிக்கொள்வதும் கடினம்’, போன்ற பல கருத்துகளால் குழப்பமடைந்து அவ்வெண்ணத்தை முழுவதுமாக கைவிட முடியாமலும், அதேசமயம் விருப்பத்தையும் கைவிட முடியாமலும் ஒரு இரண்டுங்கெட்டான் நிலையில் இருந்தாள். ஒரு மகாமகத்திற்கு பிறகு ஒரு தீர்மானத்திற்கு வந்தாள்.

 

அவளுடைய எட்டிய உறவினர் பெண் ஒன்றை தத்தெடுத்துக்கொள்ள ஏற்பாடு செய்தாள். அது ஒரு நிராதரவான குடும்பம். சட்டரீதியான பிரச்னை ஏதும் எழக்கூடாது என்ற அடிப்படையில் நானும் முழுமனதுடன் சம்பந்தப்பட்ட அனைவரையும் சந்தித்துப்பேசி ஒரு முடிவுக்கு வந்தேன்.  எப்போதுமே, அதிலும் திருமணத்திற்கு பின்பு என் மனைவியின் ஆசைகளை பூர்த்தி செய்வது மட்டுமே என் நோக்கமாக இருந்துவந்திருக்கிறது. ஆனால், அங்கும் மாறான விளைவே நிகழ்ந்தது”. – ஒரு பெருமூச்சுடன் சற்று நிறுத்தினார் சந்திரசேகர்.

 

அந்த நேரம் வண்டியும் வேகத்தைக் குறைத்துக்கொண்டு செங்கல்பட்டு இரயில் நிலையத்திற்குள் மெதுவாக சென்று நின்றது. டீ, காபி, பிஸ்கெட், வாழைப்பழம் போன்ற வியாபாரிகள் கூச்சல் ஒளிவிடும் குழல்விளக்குகளின் வெளிச்சத்தில் நிதானமாக வண்டியிலிருந்து இறங்குவோரும், திபுதிபுதிபுவென அன்-ரிசர்வ்டு பெட்டியில் ஏறுவோருமாக ஒரே சந்தடி சுமார் 5 நிமிடங்களுக்கு. இதற்குள், ”தம்பி டீ?”, என ஒரு பார்வை பார்த்தார் சந்திரசேகர். அவனுடைய பார்வையாலேயே வேண்டாமென்று புரிந்துகொண்டு ஒரு டஜன் பச்சை வாழையும், ஒரு பெரிய பிஸ்கெட் பாக்கெட்டும் ஒரு கூல்ட்ரிங்ஸ் புட்டியும் வாங்கிக்கொண்டார். “என்ன சார் கூல்ட்ரிங்ஸ்?”,  என்ற கேள்வியை கண்களில் தொக்கவிட்டான் இளைஞன்.  சந்திரசேகர் முறுவலித்துக்கொண்டே ”உன்னிடம் கதை சொல்லிக்கொண்டு வருகிறேனே தாகசாந்திக்குத்தான்”..

 

’சரி’ என்று அவன் தலை அசைத்தான்.  வண்டி மெதுவாக ஹார்ன் அடித்துக் கிளம்பியது. டிக்கட் பரிசோதகர் சில நபர்களை அழைத்துவந்து சில படுக்கைகளை ஒதுக்கிக் கொடுத்துவிட்டுப் போனார். நேரம் சுமார் 10.30ஐ தாண்டியிருந்தது. பயணிகள் படுக்கையில் படுத்து கண்களை மூடிக்கொள்ள, சந்திரசேகர் பிஸ்கெட் பாக்கெட்டைப் பிரித்தார்.  பிஸ்கெட்டுகளும், பழங்களும் புவி வாழ்க்கையை துறந்து இருவர் வயிற்றுக்குள்ளும் அடைக்கலமாயின.  மேலுக்கு கொஞ்சம் கூல்டிரிங்ஸ் ஊற்றி அதைக் ’கான்கீரிட்’ செய்தார்கள்!  இப்போது அருண் பேசத் தொடங்கினான்.

 

“அப்படியானால் உங்கள் பாணியில் மருமகள் எப்போது? எப்படி?“

 

சந்திரசேகர் சற்றே மௌனம் சாதித்தார். பின் தொடர்ந்தார்.  ”அந்த சம்பவத்திற்குப் பின் நான்கு, ஐந்து ஆண்டுகள் ஒடிவிட்டன.  சுமார் 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் ஈசிசேர் போட்டு வாசலில் சாய்ந்து கொண்டிருந்தேன்.  வழக்கம்போல் என் மனம் லயிக்காத, சாரீர வளம் இல்லாத ஒரு குரலில் இந்துஸ்தான் பஜன் ஒன்றை ஒலித்துக்கொண்டிருக்க, பக்கத்து வீட்டுக்காரம்மாவுடன் என் மனைவி சுவாரசியமாக பேசிக்கொண்டிருந்தாள்.  எனக்கு ஒரு பக்கம் வேதனை. கரண்ட்டுக்கு பிடித்த கேடு. கேட்பதனால் போட வேண்டும்,  இல்லையானால் ரேடியோவை அணைத்துவிடவேண்டும்.  கேட்டால் தகராறு வரும். ஆகவே, எப்போதோ படித்த கடல் புறா, யவனராணி, பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு ஆகிய நாவல்களின் கதாநாயக, நாயகிகளும், காட்சிக்காரர்களும், சாண்டில்யன், கல்கி, கௌதம நீலாம்பரன், விக்ரமன், ஆகியோரின் சாதுரியம் மிக்க எழுத்துக்களும், அந்தக் காலத்தில் நான் வாழ்வது போன்ற பிரமையை எனக்குள் ஏற்படுத்த சூழ்நிலைகள் மறந்தன.  வந்தியத்தேவனும், அருள்மொழிவர்மரும், யவனராணியும், இளஞ்செழியனும், கரிகாலனும், கிரேக்க மாவீரன் டைபிரியஸூம், கம்பீரமாக என் கண்களுக்குள் வலம் வந்தார்கள்.

 

மணி மாலை 6.30 மாநிலச் செய்திகள் காற்றில் வரத் தொடங்கியது.  அப்போது ”சார்” என்றொரு குரல் கேட்க, மூடிய கண்களைத் திறந்து பார்த்தேன்.  சுமார் 25 வயது மதிக்கத் தக்க ஒரு இளைஞன். ஒல்லியான உடல், அமைதியான முகம், துருதுருப்பான கண்கள், அடர்ந்த கேசம், சாதாரணமான வேட்டி, சட்டை, கையில் ஒரு செய்தித்தாள்  – இந்த கோலத்தில் நின்றிருந்தான்.  ’என்ன?” என்பது போல் நான் அவனைப் பார்த்தேன். ”வணக்கம் சார், இங்கே வாடகைக்கு வீடு கிடைக்குமா?” என்று ஒரு கேள்வியைத் தொடுத்தான். இந்த விஷயங்கள் எனக்கு அவ்வளவு பரிச்சயம் இல்லை. நான் என் மனைவியை அழைத்து அவனுக்கு உதவும்படி சொன்னேன். அவன் தன்னைப் பற்றிய சில விவரங் களைச் சொல்லி தான் அடுத்த ஊரில் ரூ.6,000/- சம்பளத்தில் ஒரு மெக்கானிக்காக வேலை பார்ப்பதாகவும், தனக்கும், தன் மனைவிக்கும் ஒரு சிறிய வீடு வாடகைக்கு வேண்டும்; அதிகபட்சம்  ரூ.1,000/-  முதல் ரூ.1,250/- க்குள் ஒரளவு வசதியோடு இருக்கவேண்டும் என்றும் சொன்னான். என் மனைவியும் தன் பங்குக்கு சில விவரங்களைச் சொல்லி ‘ஒரு கோப்பையில் காப்பி கொண்டுவந்து கொடுத்தாள். பையன் சற்று நெளிந்தான்.

 

”பரவாயில்ல தம்பி, உங்களுக்காகப் போடவில்லை. நாங்கள் சாப்பிடுகிற நேரம் தான். தவிர, நம் பண்பாடு ஆயிற்றே! குடிங்க” என்றேன்.  இருவரும் காபியைப் பருகி கோப்பையை டீப்பாயில் வைக்க, பையன் தொடர்ந்தான். ”எல்லா வீடுகளையும் பார்த்தேன்.  ஏதாவதொரு சிக்கல்.  ஆகவே வேறு தான் பார்க்க வேண்டும்’ என்று சொன்னான்.  ’அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன். அவன், ”உங்க வீட்டு மாடியில் ஒரு சின்ன போர்ஷன் இருக்கிறதே, அதை எனக்குக் கொஞ்ச நாட்களுக்கு வாடகைக்கு விடுங்களேன்”, என்று கேட்டான்.  ”தம்பி மேலே ஒரு ரூம். அது ஹாலோ ரூமோ இல்லாமல் ஏதோ ஒரு டிசைனில் கட்டிவைத்திருக்கிறேன். தவிர, பாத்ரூம் போன்றவை ஏதும் மேலே இல்லை. யாராவது கெஸ்ட் வந்தால் தங்கட்டும் என்று வைத்திருக்கிறேன்.  எல்லாவற்றிற்கும் கீழேதான் வரவேண்டும். என் தியானம், பொழுதுபோக்கு, தொல்லையில்லாமல் ஏதாவது டிவி பார்க்க மற்றும் அடிக்கடி உபயோகிக்காத பொருட்களை வைக்கும் ஸ்டோர் ரூமாக அது இருக்கிறது.  ஆகவே, அது உங்களுக்குச் சரிவரும் என்று தோன்றவில்லை.  அங்கிருக்கும் சாமான்களை அப்புறப்படுத்த முடியாது. ஆகவே நீ வேறு இடம் பார்”, என்று நிறுத்தினேன்.  அவன் இலேசில் விடுவதாக இல்லை. ”ஐயா, மன்னிக்க வேண்டும். எனக்குக் கல்யாணம் என்று சொன்னேன். பெண் திருநெல்வேலி. அடிக்கடி போய்வருவதோ, அல்லது நீண்டகாலம் என் மனைவியை அங்கு விட்டுவைப்பதோ சாத்தியமில்லை. நீங்கள் எனக்காக ஒரே ஒரு உதவி செய்யுங்கள். உங்கள் கெஸ்ட் ஹவுசை எந்த மாற்றமும் செய்யவேண்டாம்.  எந்தப் பொருட்களையும் எடுக்கவேண்டாம். கேஸ் வைத்துக் கொள்ள ஒரு மேசை வாங்கிக் கொள்கிறேன்.  தவிர அதிக சாமான்கள் ஏதும் கொண்டு வராமல் அவசியமான தட்டுமுட்டு சாமான்களை மட்டும் கொண்டுவருகிறேன்.  கட்டிலைக் கூட ஃபோல்டிங் டைப்பில் வாங்கிக்கொள்கிறேன். ஃபேன் டேபிள் பேனாக வைத்துக்கொள்கிறேன். தற்போதைக்கு உங்கள் வீட்டின் பின்புறம் உள்ள பாத்ரூமைப் பயன்படுத்திக்கொள்கிறேன். தண்ணீரைக் கீழேயிருந்து மேலே எடுத்துக்கொள்கிறேன். தயவுசெய்து இப்போதைக்கு அதே கெஸ்ட் ஹவுசை எனக்கு ஒதுக்கிக்கொடுங்கள். வாடகை, லைட்-சார்ஜ் எல்லாம் நீங்கள் கேட்பதைக் கொடுத்துவிடுகிறேன்”, என்றான்.  எனக்கு ’அவனுக்கு என்ன பதில் சொல்வது’ என்றே தெரியவில்லை. நான் என் மனைவியைப் பார்த்தேன். பொதுவாக, ’உங்கள் இஷ்டம்’ என்று சொல்வாள். அப்படிச் சொன்னால் அவளுக்கு விருப்பமில்லை என்று நான் தெரிந்துகொள்ள வேண்டும்.

 

ஆனால்,  இன்று அவள் பார்வை ’பரிசீலிக்கலாம்’ என்பதுபோல் எனக்குத் தோன்றியது. தவிர, அவன் பேச்சின் பாவனை ஒரு பதிலை எனக்குள் ஏற்படுத்தியது. புதிதாய் திருமணமாகப் போகிறது. அவனுடைய இக்கட்டான நிலையும் அவனுடைய எதிர்பார்ப்புகளுமாக ’அவனுக்கு ஏதாவது செய்தே ஆகவேண்டும்’, என்பது போன்ற ஒரு உணர்வை எனக்குள் உண்டாக்கியது.  ”தம்பி, இரண்டு நாட்கள் எனக்கு அவகாசம் கொடு. அதற்குள் நீயும் ஏதாவது வீடு பார்.  கடைசி பட்சமாக உன் யோசனையை நானும் பரிசீலிக்கிறேன்”,  என்று முடித்தேன். அவன் முகத்தில் திருப்தி அத்தோடு பாதி அவநம்பிக்கை யோடு எழுந்து மீண்டும் அதே வேண்டுகோளோடு புறப்பட்டுப் போனான்.  செவ்வாய் மாலை மறுபடியும் வந்தான். ”என்னப்பா, வீடு கிடைத்ததா?” எனக் கேட்டேன். ’இல்லை’ எனத் தலையசைத்தான். ”பிறகு?” என்றேன். ”இப்போது நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும்”, என்று என்னையும் என் மனைவியையும் மாறி மாறி பார்த்தான். ’சரி, வேறு வழியில்லை. வரன் கொடுத்தவன் தலையிலே கை வைப்பது போன்று’ நாங்கள் இருவரும். ஒரு நிறைகுடம், ஒரு தட்டில் பூ, பழம், தேங்காய், வெற்றிலைப்பாக்கு, ஊதுவத்தி, கற்பூரம் மற்றும் சாக்லேட் இவை எல்லாவற்றையும் கூடத்தில் வெகு விரைவாக என் மனைவி எடுத்துவைத்தாள்.

 

முதல் நாளே வீட்டைப் பெருக்கி, முன்வாயிலில் கோலம் போட்டு வைத்திருந்ததால் அவனுடைய மனைவி கையில் தண்ணீர் குடத்தை கொடுத்து விட்டு மீதத்தை நாங்கள் எல்லோரும் கையில் எடுத்துக்கொண்டு மேலே சென்றோம். வலது காலை எடுத்துவைத்து அந்தப் பெண்ணை உள்ளே செல்லச் சொன்னேன்.  அடுத்து விளக்கேற்றி  ஸ்டவ்வில் பால் காய்ச்ச ஏற்பாடாயிற்று.  ஏற்கனவே ஒலிநாடாவில் இருந்த நாதஸ்வர இசையை ’ஆன்’ செய்தேன்.  மங்கல இசை ஒலிக்க, பால் காய்ச்சி முடிந்தது. என் மனைவி, “அம்மா, நீ இன்று ஒன்றும் சமைக்க வேண்டாம்.  காலை டிபன் தயாராகி விட்டது.  மதிய சாப்பாடு, இரவு டின்னர் அவர்கள் ஒட்டலில் பார்த்துக்கொள்ளட்டும் என்று  சொன்னாள். எல்லோரும் கீழே இறங்கி வர, “அத்தியாவசியப் பொருட்களுக்கு என்ன ஏற்பாடு செய்திருக்கிறாய்?” எனக் கேட்டேன். ”நேற்று இரவு லாரியில்  சாமான்கள் ஏற்றப்பட்டுவிட்டதாகத் தகவல் வந்தது. அநேகமாக இன்று மாலை லாரி ஆபிசிலிருந்து எடுத்துவர வேண்டும். பயப்படாதீர்கள் இரண்டு அட்டைப்பெட்டிகள் தான் இருக்கும் என்று கேலியாகச் சொன்னான்.  ”உனக்கென்ன, நீ நினைத்தது போல் நடத்திக்கொண்டுவிட்டாய். இனி உன் பாடு!” என்று சொல்லிவிட்டு என் மனைவியைப் பார்த்தேன். ’மளிகை, காய்கறிக்கு ஏற்பாடு செய்துகொடு’ என்பது பொருள்.  அவளும் தலையை அசைத்துக்கொண்டாள்.

 

இரவு 7.30 மணிக்கு கடையில் வாங்கி வந்த ஸ்வீட், காரங்களோடு ஒரு வழக்கமான சமையலோடு என் மனைவி அவர்களுக்கு விருந்துவைத்தாள்.  பூக்காரி கொண்டுவந்த பூப் பந்துகள், வீட்டில் உபரியாக இருந்த புதிய பாய், தலையணை, பெட்ஷீட் எல்லாம் மேலே போயின.  என் மனைவியும் நானும் படுக்கை அலங்காரம் செய்துவைத்தோம்.  ஆச்சரியமூட்டும் வகையில் என் மனைவி கூஜாவில் கொடுத்த பால் மற்றும பலகாரங்களோடு அவர்களை மேலே கொண்டு போய்விட்டோம்.

 

பையன் ஏற்பாடுகளை கண்டு ஒரு கணம் அசந்தே போய்விட்டான் என்றுதான் சொல்ல வேண்டும். அப்பெண்ணின் முகத்தில் நாணம் குங்குமக் கோலமிட்டு அவள் தலையை கவிழச்செய்திருந்தது. ”திஸ், இயர், என்ஜாய், நெக்ஸ்ட் இயர் ’பாய்’!” என்று விஷமமாக சொல்லிவிட்டு, நானும்  என் மனைவியும் கீழே வந்துவிட்டோம். கிட்டத்தட்ட மறுநாளும் எங்கள் வீட்டில் தான் சாப்பாடு.  அன்று இரவு சாமான்களையெல்லாம் கொண்டுவந்தாள்.  பிறகு அவர்கள் குடித்தனம் வழக்கம்போல் நடந்தது. எப்படியும் ஒரு நாளைக்கு 10 நிமிடம் எங்களிடம் சம்பிரதாயத்திற்குப் பேசிவிட்டுப் போவான்.  நான் பள்ளிக்கும், அவன் கம்பெனிக்கும் போய்விட்டால் அந்தப் பெண்ணும், என் மனைவியும் ஒரு கம்பெனி தான்! சீரியல் பார்ப்பது முதல் மார்க்கெட்  போவது வரை எல்லாம் இருவரும் சேர்ந்துதான் செல்வார்கள். என் மனைவிக்கோ மனம் தாராளம்.  அரைத்த மாவு, பால், பூ, காய்கறிகள் எல்லாவற்றையும் பிரிட்ஜ்-ல் வைத்து எடுத்துக்கொடுப்பாள். டிபன் செய்தால் கூட 1 பங்கு அங்கே போய்விடும்.  அதுவரை தனித்தே இருந்த அவளுக்கு அத் தம்பதியினரின் வருகை புதிய உற்சாகம் கொடுத்ததை என்னால் காண முடிந்தது. அவளிடம் இப்போதெல்லாம் மலர்ச்சியும் சுறுசுறுப்பும் நிலவியது. எப்படியும் ஒரு நாளைக்கு நான்கைந்து முறையாவது அந்தப் பெண்ணின் சாமர்த்தியத்தையும்  அவள் வீட்டை ஒழுங்காகவும், நேர்த்தியாகவும் வைத்துக்கொள்ளும் பாங்கையும் மற்றும் அவள் பழகும் விதத்தையும் பற்றி மெச்சிப்பேசாதிருக்க மாட்டாள்.  அனேகமாக அந்தப் பெண் என் மனைவியைப் பொறுத்தவரை தத்துப்புத்திரி தான்! ஒரு மாதம் முடிந்தது. அவன் 10ஆம் தேதி சம்பளம் வாங்கி வந்தான்.  எங்கள் இருவர் கையிலும் கொடுத்து மனைவியோடு எங்களை வணங்கி எழுந்தான்.  எழுந்த அவன் கண்களிலிலிருந்து கண்ணீர்முத்துக்கள் சில உதிர்ந்தன. ”நான் ”ஏனப்பா உன் கண்களில் கண்ணீர் வந்தது? அப்படி என்ன பிரச்சினை?“,  எனக் கேட்டேன்.  அப்போது அவன் சொன்னான்: ”எதுவெல்லாம் புதிதாக திருமணமாகின்ற ஒரு தம்பதியினருக்கு பிரச்னையாக இருக்குமோ? அதை எப்படி எதிர்கொள்வது என நான் யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் உங்களைத் தற்செயலாக வீடு கேட்டேன். தவிரவும், உங்களை வீடு விடும்படி வற்புறுத்தியும் பெற்றுக் கொண்டேன். நீங்கள் மட்டும் நிராகரித்திருந்தால் எனக்குப் பல பிரச்னைகள் வந்திருக்கும். சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் பின் ஒருவராக பெற்றோர்களை இழந்தேன். ஏதோ எனக்கு இந்த வேலை கிடைத்து நிரந்தரமும் ஆகிவிட்டது.  எனது மூத்த அண்ணனும்  அண்ணியும் பார்த்துவைத்த திருமணம் நடந்துவிட்டது. திருமணத்திற்குபின் எப்படி வாழ்க்கையை நடத்துவது என்ற பிரச்னையும் உங்கள் வழிகாட்டலாலும் அம்மாவின் அரவணைப்பாலும் எங்களுக்கு எளிதாக முடிந்துவிட்டது.  மொத்தத்தில் ஜம்முவிலிருந்து கன்னியா குமரிக்கு இரயிலில் வரவேண்டிய ஒருவனுக்கு ஒரு தனி விமானம் கிடைத்து ஒரு மூன்றுமணிநேரத்தில் சொகுசாக சென்னை வந்தால் கிடைக்கின்ற ஒரு இன்ப அனுபவம் பெற்றோர்களுக்குச் சமமாக நீங்களும் அம்மாவும் இருப்பதால் எங்களுக்கு கிடைத்தது! ஆகவே, நம்மை ஒரு குடும்பமாக இணையவைத்த இறைவனின் அருளையும் உங்கள் அன்பையும் ஒரு கணம் எண்ணிப்பார்த்ததில் வந்த கண்ணீர் தான் இது!” என்று சொன்னான்.  இதைச் சொல்லும்போது அவர்கள் இருவர் கண்களிலிருந்தும் நீர் தாரை தாரையாக வழிந்தோடியது. ”நாங்கள் அப்படியொன்றும் பெரியதாகச் செய்துவிடவில்லையப்பா. ஏதோ, முடிந்ததை செய்தோம். தவிர,  எங்களுக்கு குழந்தைகள் என்று யாரும் இல்லை. ஆகவே உபரியாக இருந்த இடத்தை உங்களுக்குக் கொடுத்தோம்”. என்று நிறுத்தினேன். ”நீங்கள் வாடகையை இதுவரை சொல்லவில்லையே?”,  என்று கேட்டான்.

 

”உன் திருப்திக்கு ஏதாவது கொடு”, என்று சொன்னேன்.  அவன் ’ஆயிரத்து ஐநூறு’ ரூபாய் நோட்டுகளைக் கொடுத்தான். நான் ஆயிரம் எடுத்துக் கொண்¢டு மீதத்தை அவனிடம் கொடுத்துவிட்டேன். என் மனைவியை அழைத்து அன்று அன்பளிப்பாக வந்த ஒரு ஸ்வீட் பாக்ஸை எடுத்துவரச் சொல்லி அந்த ரூபாய் ஆயிரத்தை அதன் மேலே வைத்து அந்தப் பையனையும், பெண்ணையும் நிற்க வைத்து ”இதை உங்களுக்கு எங்கள் திருமணப் பரிசாக வைத்துக்கொள்ளுங்கள்”,  என்று கொடுத்தோம். அவன் மேலும் நெகிழ்ந்துபோனான். ”உங்களிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். தயவு செய்து நிராகரிக்கக் கூடாது”,  என்றான்.  ’சரி’ என்றேன். ”உங்களுக்குக் குழந்தைகள் இல்லையென்று சொன்னீர்கள். உலகத்தில் குழந்தைகளைத் தத்தெடுப்பது தான் மரபு. இங்கே நாங்கள் இருவரும் உங்களை எங்களது பெற்றோராக தத்தெடுத்துக்கொள்ள விழைகிறோம். ஆகவே, எனக்கு நீங்கள் தான் அம்மா, அப்பா. இதை இப்பிறவியில் இரண்டாம் முறை பெற்றோர் கிடைத்த வரமாகக் கருதுகிறேன்”,  என்றான். இதைக் கேட்டவுடன் எனக்கும் என் மனைவிக்கும் ஏற்பட்ட மனநிலை சொல்லால் விளக்கமுடியாது.

 

”எல்லாத் தாவரங்களும் முதலில் துளிர்த்து பூவாய் பூத்து அவற்றில் சிலவே காய்களாகவும் பின் கனிகளாகவும் மாறுகின்றன. ஆனால் ’தண்டு காய்கனிக்கும்; காணாமல் பூ பூக்கும்’ என்று அத்திப்பழத்தை விடுகதையாகச் சொல்வார்கள். ஒரு வகையில் எங்கள் வாழ்க்கையில் பூ பூக்கவில்லை என்றாலும் அத்திப்பழமாக நீங்கள் இருவரும் கிடைத்திருக்கிறீர்கள். அதிலும், சொத்தை இல்லாமலிருப்பது மகிழ்ச்சி. தாவரவியல் ஆசிரியர் எனக்கு ஒரு நாள் சொன்னார்.  அத்திப் பழம் முழுவதுமே பூக்களாகத்தான் இருக்கும்.  ஆகவே அது தனி பூ கிடையாது!”, என்பதை அவனிடம் சொன்னேன்.  அதற்குப் பின் குடும்பம் இரண்டல்ல ஒன்றாகவே ஆனது!”, என்று தன் வரலாறு முழுவதையும் விரிவாக விளக்கிமுடித்தார் சந்திரசேகர்.

 

”பெயர்சூட்டுவிழாவுக்குப் போகிறேன் என்கிறீர்கள். உங்கள் மனைவி வரவில்லையா?”என்று கேட்டான் இளைஞன்.

 

அதற்கு ”குழந்தை பிறந்தவுடன் முதலில் பார்க்கவேண்டும் என்ற ஆவலில் அவளுக்கு வளைகாப்பு முடிந்து ஊருக்குப்போன ஒரு மாதத்திலேயே பதிவுசெய்துகொண்டு என் மனைவியும் போய்விட்டாள். அவர்கள் இந்த வீட்டிற்குக் குடிவந்த மூன்றாவது மாதமே ஒரு நாள் காலை அந்தப் பெண் வாந்தியெடுத்ததாகவும், மயக்கம் வருகிறது என்று சொல்வதாகவும் அந்தப் பையன் வந்து சொன்னான். அவ்வளவு தான் தம்பி. அன்று முதல் என் மனைவி அவளுக்கொரு செவிலித்தாயாகவே மாறிவிட்டாள் என்று சொல்லவேண்டும். அவளை அடிக்கடி மாடியிலிருந்து இறங்காமல் பார்த்துக்கொள்வாள். முடியாத சமயத்தில் இவளே இருவருக்கும் சமைத்துக்கொடுப்பாள். மாதம் தவறாமல் இவளே மருத்துவமனைக்கும் அழைத்துப்போவாள். அதைப் பற்றி ஒரு புராணமே என்னிடம் கட்டாயமாகப் பாடுவாள். இப்படி அவளைப் பராமரிப்பதன் மூலம் அவளின் முழுமையான தாய்மையுணர்வை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் அந்தக் குழந்தை அவள் வயிற்றில் வளர்வதையும், அது வெளிவரவிருக்கும் நாளையும் அந்தப் பெண் எண்ணிணாளோ இல்லையோ, என் மனைவி தவறாமல் கணக்கிட்டுவந்தாள். ஆகவே, எட்டாவது மாதம் அந்தப் பெண்ணுக்கு இவளே வளைகாப்பும்கூடச் செய்தாள். அவள் ஊருக்குச் சென்ற ஒரே மாதத்திற்குள் இவளும் முன்பதிவு செய்துகொண்டுவிட்டாள். நான் கேட்டபோது, ‘அந்தக் குழந்தையை நானே முதலில் பக்கத்திலிருந்து பார்க்கவேண்டும் என்ற தன் தணியாத தாகத்தை வெளிப்படுத்த, நானும் வேறு வழியில்லாமல் அவளை அனுப்பிவைத்து விட்டேன். எனக்கு அப்படியெல்லாம் ஆசையில்லையா என்று நீ நினைக்கலாம். எனக்கும் ஒரு காலத்தில் அதுபோன்ற ஆசைகளெல்லாம் இருந்தன. எண்ணங்கள் நினைத்தபடி கைகூடாதபோது மனிதர்களுக்குப் பொதுவாக உற்சாகம் குறைந்துபோகிறது. வலிய அந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தபோது அந்த ஆவல் 50 சதவிகிதம் தான் எனக்கு வந்தது. மீதி என் மனைவியை மகிழ்விக்க அந்த ஆவலை போலியாக மட்டுமே என்னால் காட்ட முடிந்தது. இது கிட்டத்தட்ட ஒரு ஞானத்தின் முதிர்வுநிலை என்றுதான் நான் நினைக்கிறேன்”.

 

அப்போது விக்ரவாண்டி ஸ்டேஷனை தாண்டிக்கொண்டிருந்தது வண்டி. தூக்கம் அவ்விருவர் கண்களையும் இழுத்துச் சென்றது.                         0

( மு.வெங்கடசுப்ரமணியன் 10.05.1956இல் பிறந்தவர். பிறக்கும்போதே ஒரு கண்ணில் மட்டுமே பார்வைத்திறன் கொண்டவராய் பிறந்தவர் பின் படிப்படியாக அடுத்த கண்ணிலும் பார்வையை இழந்துவந்தார். ‘ரெட்டினிட்டிஸ் பிக்மெண்ட்டோஸா’ எனப்படும் விழித்திரை பாதிப்பின் காரணமாக, மறு கண்ணிலும் முழுமையாக பார்வை பறிபோயிற்று.அப்பொழுது அவருக்கு வயது பதிமூன்று. மற்றவர்களின் உதவியையே எதிர்பார்த்துக்கொண்டிராமல் சுயமாக வாழ வேண்டும் என்ற ஆர்வமும், உறுதியும் அந்த இளம் வயதிலேயே வெங்கடசுப்ரம ணியனின் மனதில் ஆழமாக வேரூன்றிவிட்டன. குடும்பத்தாரின் ஊக்கமும், ஒத்துழைப்பும் அவருக்கு இருந்தது. தாயார் நாளேடுகள் முதல் இதிகாசங்கள் வரை படித்துக்காண்பிப்பாராம். தந்தை ஆங்கிலம் போதித்தார். உடன்பிறந்தவர்களும் இவருக்கு இப்போதுமே பக்கபலமாக இருந்துவந்தனர்.

1986ஆம் வருடம் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட திருவையாறு அரசர் தமிழ் மற்றும் இசைக்கல்லூரியில் மிருதங்கம் பட்டயப் படிப்பில், விதிவிலக்கின் அடிப்படையில் தனது 29ஆம் வயதில் சேர்ந்தார் வெங்க்டசுப்ரமணியன். இவர் ஒருவர் தான் மாணாக்கர்களில் பாவையிழந்தவர். ஆரம்பத்தில் இவரை ஒருமாதிரிப் பார்த்த சக மாணவர்கள் நாளாக ஆக இவரை மூத்த சகோதரனைப்போல் நடத்தத் தொடங்கினார்கள். அவர்கள் 8ஆம் வகுப்பு படித்தவர்களே. ஆனால், அவர்கள் வெங்கடசுப்ரமணியனின் கல்வி தொடர பெரிதும் உதவினார்கள். அவருக்கு ஆர்வமாகப் படித்துக்காட்டினார்கள். பள்ளிக் கல்வியையும் முடித்தார் வெங்கடசுப்ரமணியன். மிருதங்கம் கற்கத் தொடங்கியவர் இறுதியில் இந்திய இசையில் கீழ்/மேல் நிலைகளில் தேறினார். 1991இல் டி.டி.ஸி முடித்தார்(இசையாசிரியர் பயிற்சி).

1995இல் வெங்கடசுப்ரமணியனின் மனைவியாக மனம்விரும்பி முன்வந்தவர் சூரியா. பார்வையுள்ளவர். இன்றளவும் வெங்கடசுபரமணியத்தின் வலதுகரமாகத் திகழ்ந்துவருகிறார்!

நன்றாகப் புல்லாங்குழல் வாசிக்கக் கூடியவர் வெங்கடசுப்ரமணியன். படிக்கும் காலத்தில் 40 மேடைக் கச்சேரிகள் செய்துள்ளார். இலக்கியத்தில் பெரிதும் ஈடுபாடு கொண்டவர். தரமான நூல்களை வாசிப்பதிலும், கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் எழுதுவதிலும் பெரிதும் ஆர்வம் கொண்டவர். கல்லூரிக் காலத்திலேயே குழல், யாழ், முழவு என்ற தலைப்பில் இவர் எழுதிய கட்டுரை ஆண்டுமலரில் வெளியானது. தெய்வத் தமிழிசை என்ற தலைப்பில் கர்நாடக இசை ராகங்களை அடிப்படையாகக்கொண்டு இவரால் எழுதப்பட்ட 18 பாடல்கள் சிறு நூலாக வெளியாகியுள்ளது. ‘எல்லைகளுக்கு உட்பட்ட ஒன்றிலிருந்து எல்லைகளேயில்லாத ஒன்றை நோக்கிய பயணமே கலை என்று உணர்கிறேன்’, என்று கலைகளைப் பற்றிக் குறிப்பிடும் திரு.வெங்கட சுப்ரமணியன் சிறுகதைகள் கணிசமாக எழுதியுள்ளார். )

Series Navigationதுருக்கி பயணம்-4கேரளாவில் சிபிஎம் தனது மரணச்செய்தியை எழுதிகொண்டிருக்கிறதா?