ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – அத்தியாயம் 5 பிருந்தாவன லீலைகளின் முடிவு.

வங்க மூலம் –பக்கிம் சந்திர சட்டர்ஜி

மொழியாக்கம்-சத்தியப்பிரியன்

பிருந்தாவன லீலைகளின் முடிவு.

பாகவத புராணத்தில் ஸ்ரீ கிருஷ்ணரின் இளமைக் கால நிகழ்ச்சிகளாக மேலும் சிலவற்றைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன.

ஒரு முறை யமுனை ஆற்றில் நந்த கோபர் குளித்துக் கொண்டிருந்தார்.வருண பகவானின் ஆட்கள் அவரை பிடித்துக் கொண்டு தங்கள் தலைவன் முன் கொண்டு நிறுத்துகின்றனர். ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களை துரத்திக் கொண்டு சென்று வருண பகவானிடமிருந்து நந்தகோபரை மீட்டு வந்ததாகக் கூறப் படுகிறது.இதன் மூலம் நாம் அறிந்து கொள்வது என்னவென்றால் யமுனையில் குளித்துக் கொண்டிருக்கும்பொழுது நந்தகோபர் ஆற்றில் அடித்து செல்லப் பட்டிருக்க வேண்டும். ஸ்ரீ கிருஷ்ணர் பின் தொடர்ந்து சென்று அவரை காப்பாற்றி இருக்க வேண்டும்.

ஒரு முறை நந்தகோபரை பாம்பு ஒன்று விழுங்கியது.ஸ்ரீ கிருஷ்ணர் அதனுடன் போரிட்டு அதனைக் கொன்று நந்தகோபரை விடுவிக்கிறார். அந்த பாம்பு சாப விமோசனம் பெற்று தனது பழைய பண்டிதன் என்ற நிலையை அடைவதாக கதை.. இதை மிகவும் சிந்தித்து புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.பாம்பினால் தீண்ட பெற்ற நந்தகோபரை ஸ்ரீ கிருஷ்ணர் விஷத்தை முறித்து காப்பாற்றினார் .அவ்வளவுதான்.

சங்கசூடன் எனப் பெயருடைய அசுரன் ஒருவன் விராஜத்தில் வசித்த பெண்களை கவர்ந்து செல்ல நேரிட்ட சமயம் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் அவனை துரத்திக் கொண்டு சென்று போரிட்டு அவனைக் கொன்று பெண்களை மீட்டதாகக் கூறப் படுகிறது.

மேலே கூறப்பட்ட கதைகள் பற்றிய குறிப்புகள் விஷ்ணு புராணத்திலோ ஹரிவம்சத்திலோ அல்லது மகாபாரதத்திலோ கூட குறிப்பிடப் படவில்லை. கேசி மற்றும் அரிஷ்டன் என்ற இரண்டு ராக்ஷசர்களை கிருஷ்ணன் கொன்றதாக இந்த மூன்று நூல்களிலும் கூறப் படுகிறது. இந்த செய்தி மகாபாரதத்தில் யுதிஷ்டிரர்  நடத்தும் ராஜ சூய யாகத்தின் பொழுது தர்ம புத்திரரின் சபையில் சிசுபாலன் ஸ்ரீ கிருஷ்ணரை அதீத நிந்தனை செய்யும்பொழுது வருகிறது. அரிஷ்டனும் கேசியும் முறையே காளைமாடு , மற்றும் குதிரை வடிவிலான அசுரர்கள்  என்று  மகாபாரதம் கூறுகிறது.

பிருந்தாவானத்தில் ஸ்ரீ கிருஷ்ணரின் வாழ்க்கையை வருணிக்கும் இந்த இந்த இரண்டாம் பாகம் முடியும் தருணத்தில் நான் என்னையும் என் வாசகர்களையும் கேட்க விரும்புவது.

“ இந்தப் பகுதியில் இருந்து ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றி நமக்கு கிடைக்கும் தகவல்கள் என்ன?” கீழே குறிப்பிடப் படும் தகவல்கள் மட்டும் ஸ்ரீ கிருஷ்ணா சரித்திரத் தகவல்கள் ஆகும்.

கம்சனிடம் அச்சம் கொண்ட வசுதேவர் தன மனைவி ரோஹிணி குழந்தைகளான பலதேவன் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணரை நந்தகோபரின் பாதுகாப்பில் விட்டு வைக்கிறார்.. ஸ்ரீ கிருஷ்ணரின் குழந்தைப் பருவம் கோகுலத்தில் கழிகிறது. ஸ்ரீ கிருஷ்ணர் அனைவரும் விரும்பும் வசீகரமும் லாவண்யமும் நிரம்பிய குழந்தையாக வளர்கிறார். பிருந்தாவனத்தில் அவர் பாதுகாப்பில் உள்ள கால்நடைகள் மற்றும் விலங்குகளை இயற்கைப் பேரழிவுகளிலிருந்து சிறந்த முறையில் காப்பாற்றுகின்றார். சிறு வயது முதல் கொண்டே அவர் அனைத்து உயிரினங்கள் மீதும் அன்பு செலுத்துகின்றார். வேண்டியவர் வேண்டியபடி உதவி புரிகிறார். இடையர்களிடமும் கோபிகளிடமும் நற்பெயர் பெற்று விளங்கினார். அவர்களுடன் சேர்ந்து கழிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார். தர்ம நியாயம் அவரிடம் மிக கூர்மையுடன் விளங்கியது.

ஏதோ சிறிதளவே மேலே குறிப்பிட்ட விஷயங்கள் அனைத்தும் உண்மை என்றோ நியாயமான தகவல்கள் என்றோ குறிப்பிட முடியாது.ஆனால் இவற்றை விட்டு வேறு எதையும் நிஜம் எனக் கொள்ள முடியாது.

தன் பிள்ளைப் பருவத்திலும் இளமை பருவத்திலும் ஸ்ரீ கிருஷ்ணர் பெண் பித்தனாக இருந்தார் என்று கூறுவதற்கு உறுதியான அடிப்படை எதுவும் இல்லை.

Series Navigationபேபி பிரபஞ்சத்தில் தோன்றியுள்ள காலவெளிப் பிளவுப் பழுதுகள்தாகூரின் கீதப் பாமாலை – 85 அந்தி மங்கிடும் வேளை .. !