அந்தரங்கங்கள்

Spread the love

nadesan

 

தேவகுமார (தேவ்) என்ற டேவிட்டின் கதை

எமது திருமணமாகி முப்பது வருட நிறைவு நாளுக்காக பிள்ளைகளால் ஒழுங்கு செய்யப்பட்ட அந்த விருந்திற்கு, நானும் மாலினியும் சென்றபோது எதிர்பாராமல் எனது வாழ்கையில் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பாக, இரண்டு வருட காலம் என்னுடன் உறவில் இருந்த எமிலியை சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் வருமென நான் எதிர்பார்க்கவில்லை.

பழையனவாக நினைத்து புதைத்தது, துளிர்த்து மீண்டும் செடியாகியதுபோல், எதிர்பாராமல் நிகழும் சம்பவங்களின் கோர்வைதானே இந்த மனித வாழ்க்கை.

சிட்னியில் ஜுலை மாதம் குளிர்காலம். அன்று மதியத்தில் தொடங்கிய மழை, மெதுவாக ஆனால் தொடர்ச்சியாக தூறிக்கொண்டிருந்து. வானம் கார்வண்ணமாக நகரத்தின் மீது கீழிறங்கி குடை விரித்திருந்தது. இரவில் இடியோடு பெருமழை வருவதற்கான அறிகுறியாக சில மின்னல் வெட்டுக்கள் சிமிட்டியபோது விருந்தை நினைத்து எழுந்த உற்சாகம் குறைந்துவிட்டது. வீட்டிற்கு முப்பது கிலோமீட்டர் தூரத்தில், சிட்னி துறைமுகத்திற்கு அருகில் உள்ள ஒபரா ஹவுசுக்கு எதிரில் தொடர்ச்சியாக அலைமோதும் பசுபிக்கடலைப் பார்த்த வண்ணமாக அமைந்த சிட்னியில் பிரபலமான ஒரு வியட்நாமிய உணவகத்தில் விருந்துக்கு ஒழுங்குசெய்திருப்பதாக எனது மகள் கூறியபோது அந்தத்தொலைதூரம் திருப்தி தரவில்லை.என்னைப் பொறுத்தவரை நாங்கள் வசிக்கும் சிட்னியின் மேற்குப் பகுதியில் வீட்டுக்கு அருகில் உள்ள இலங்கை அல்லது இந்திய உணவகம் உவப்பாக இருந்திருக்கும் என நினைத்தேன்.

வித்தியாசமான சுவைகளைத் தேடித்திரிந்த காலம் போய்விட்டது. அறுபதுவருட அகவையில் மூன்று நாடுகள் அலைந்து திரிந்த களைப்பு. இப்பொழுது காலம் காலமாக தெரிந்தவற்றை உண்டு, புரிந்தவர்களுடன் நட்பும், பழகிய சுவையை தேடும் காலம்போல் எண்ணத் தொடங்கிவிட்டேன்.
ஆனால் மகள் வாணியாலும் மகன் ஜெயந்தனாலும் இந்த விருந்து ஒழுங்கு பண்ணப்பட்டிருந்தது. அவர்கள் இங்கு பிறந்து வளர்ந்தவர்கள். அவர்களில் வாணி ஐரிஸ் வம்சத்தில் வந்த அவுஸ்திரேலியனான மார்க்கையும், ஜெயந்தன் வியட்னாமில் இருந்து குழந்தைப்பருவத்தில் பெற்றோருடன் படகொன்றில் வந்துசேர்ந்த சமந்தா லீ யையும் மணந்தவர்கள். வித்தியாசங்களில் விரும்பி மணந்ததுடன் முழு உலகத்தையும் ஒரே தன்மையாகப் பார்ப்பவர்கள். நிறம், மதம், நாடுகளின் பூகோள எல்லைகளை தேவையற்ற தடயங்களாக நினைக்கின்ற தலைமுறையை சேர்ந்தவர்கள். அவுஸ்திரேலியாவில் இரண்டாவது தலைமுறையில் பல்லினக்கலாச்சாரத்தில் கலந்துவிட்ட சிட்னியில் வாழும் இலங்கை தமிழ் குடும்பத்தில் நாங்களும் ஒன்றாகிவிட்டோம்.

வேறு இனங்களைச் சேர்ந்தாலும் மார்க்கும் சமந்தாவும் எம்மைக் கவர்ந்தார்கள். திருமணமாக முன்பே எங்கள் குடும்பத்துடன் பழகித் தெரிந்து கொண்டவர்கள். அவர்களின் தோல் வெள்ளை, மஞ்சள் நிறத்தைத் தவிர்த்து உள்ளே இரத்தமும், தசையும் மட்டுமல்ல சிந்தனை, உணர்வு, அறிவிலும் எங்களைப் போலிருந்தார்கள். குழந்தைகள் வளர்ந்தவுடன் அவர்களது வாழ்க்கையில் தலையிடாத கொள்கையை வெளிப்படையாக கடைப்பிடிக்கும் இயல்புடன் நானும் மாலினியும் இருந்தாலும் உள்ளுணர்வில் அவர்களில் குறை கண்டு பிடிக்க முடியாமல் தோல்வியை ஏற்றுக் கொண்டோம். தொடர்ந்து அவர்களோடு பழகியதால் எமது உறவுகளின் பிணைப்பையும் அதிகமாக்கும் என்பதில் அதிக உண்மை இருந்தது.

இந்த வியட்நாமிய உணவுச்சாலையும், அங்கு எமக்கான விருந்துணவுகளும் சமந்தாவின் தெரிவுகள். எங்களுக்கு கடல் உணவுகள் பிடிக்கும் என்பது அவளுக்குத் தெரியும். அவளது தந்தையாரே ஒருகாலத்தில் வியட்னாமிய உணவகம் நடத்தியதால் உணவு விடயத்தில் அவளை எங்களது திறனாய்வு ஆலோசகராக நியமிப்பதில் எவருக்கும் ஆட்சேபனையில்லை. அவள் தொழிலிலும் வக்கீலாக இருப்பதால் ஏதும் பேரம்பேசும் விடயங்களுக்கும் அவளைத்தான் முன்னிறுத்துவோம்.

அன்றும் அவள் தெரிவுசெய்த உணவுகள் சமுத்திரத்தில் மலர்ந்தவை. விருந்திற்கு முன்பதாக உணவை ருசித்துப் பார்ப்பதற்காக எண்ணெயில் மிருதுவாக பொரித்த கவுதாரியை வெட்டி இரண்டு தட்டில் வைத்திருந்தார்கள். நியூசிலாந்தின் குளிர்பிரதேசமான, தென்தீவில் விளையும் திராட்சையில் வடித்த பிரபலமான சவியன் புளங் என்ற வெள்ளை வைனை சுவைத்துக்கொண்டு கவுதாரித் துண்டுகளைக் கடித்தபோது பிரமாதமாக இருந்தது.வைனுக்கு கவுதாரி பொருந்தியதா இல்லை கவுதாரிக்கு வைன் ருசித்ததா என்பதை பிரித்தறிய முடியாதிருந்தது. கவுதாரியை முடித்துவிட்டு சிறிய கோப்பையில் எலும்புகளை வைத்த பின்பு, சுறா செட்டையில் செய்த சூப் மேசைக்கு வந்தது. சிறிய நீளமான புழுக்களைப்போல் சுறா தசைகள் மிதந்தன. அந்த சூப்பில் இருந்து எழுந்த நீராவியுடன் வந்த வாசனை மூக்கு வழியாக சென்று பசியை அதிகப்படுத்தியது.

‘இது அவுஸ்திரேலிய சிறாத்தானே ? ” என்றாள் வாணி.

‘ஆம் இது இறக்குமதி செய்யப்பட்டதல்ல’ என்றாள் சமந்தா.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என்றால் உயிராக பிடித்து செட்டையை மட்டும் வெட்டிவிட்டு சிறாவை உயிருடன் மீண்டும் கடலுள் விடுவதாக அறிந்த செய்தியின் அடிப்படையில் கேட்கப்பட்ட கேள்வி. வாணியைப் பொறுத்தவரை அவள் அவுஸ்திரேலிய கிறீன் கட்சிக்கு ஆதரவளிப்பவள்.

‘இந்த வைன் மிகவும் கலாதி. வாயில் படும்போது மெதுவான காரம் தெரிகிறது” என்றேன்.

‘ஆம் மாமா இது நியூசிலாந்தின் தென் தீவில் தயாரிக்கப்படுகிறது. மிளகாயின் மெதுவான காரமும், வாயில் ஓட்டாத தன்மையும் கொண்டது. குடிக்கும்போது மெதுவான காரம் அடித்தொண்டையில் செரியும்போது வைன் வழுக்கியபடி உள்ளே சென்றுவிடும். இந்த வைன் இங்கே மிகவும் குறைந்தவிலையில் கிடைக்கிறது. கடலுணவிற்கு இந்த வைன் பிரசித்தியானது. பெரும்பாலும் உணவகங்களில் இதை பரிமாறுவார்கள். பிரான்சு நாட்டின் வைனுக்கான தரமும் அதேவேளையில் குறைந்தவிலையில் கிடைக்கிறது.’

‘பரவாயில்லை உன்னிடம் இருந்து நான் பலவற்றை புரிந்து கொண்டேன். எனது மகன் அதிர்ஸ்டசாலி என நினைக்கிறேன்’

‘இவளுக்கு சமயல் தெரிந்ததால் வீட்டிலும் இப்படித்தான் இருக்கும் என நினைத்தால் நீங்கள் ஏமாந்து போய்விடுவீர்கள் டாட்.’ என்றான் மகன்.

‘அது உண்மைதான் மாமா. ஒவ்வொருநாளும் இப்படிச்சமைத்தால் கொலஸ்ரோல் கூடிவிடும். எப்படி அதிக நாட்கள் உயிர் வாழமுடியும்?’ என்றாள் சமந்தா.

‘அதுவும் உண்மைதான் உங்கள் அம்மாவின் சமையல் அறுபது வருடங்களை பெரிய நோயில்லாமலும் கொலஸ்ரோலை கட்டுக்குள் வைத்திருக்கிறதென்றால், அதற்கு நன்றி கூறவேண்டியது எனது கடமை’

‘எனது காலை இழுக்காமல் உங்களுக்கு விடியாதே’ என்றாள் மாலினி.

‘இந்தக் கவுதாரிகள் எங்கிருந்து வருபவை? எனக்கேட்டாள் வாணி.

‘இவை தற்போது பண்ணைகளில் வளர்க்கப்படுகிறது.’ சமந்தாவின் பதில்.

‘அப்ப எனது நண்பன் வேட்டைக்கு போய்கொண்டு வருகிறானே?. என்றான் மாக்

‘ஆரம்பத்தில் காட்டுப்பறவைதான். பின்பு நான் நினைக்கிறேன், யப்பானில் வளர்க்கத் தொடங்கி தற்பொழுது கோழிப்பண்ணைகள் போல்வளர்க்கிறார்கள். மாமி இதில் அதிகபுரதம் உள்ளது. கொழுப்புக் குறைவு’

முதலாவதாக தட்டில் கொண்டு வரப்பட்ட உணவைப் பார்த்தபோது கிட்டத்தட்ட ஒரு கிலோ எடையுள்ள மீனை அப்படியே பொரித்து வைத்திருந்தார்கள். அது எமது ஊரில் விளை என்ற மீன். அதன் மேல் வெங்காயம் காய்ந்த மிளகாய் உள்ளி மற்றும் இஞ்சி தாளிக்கப்பட்டு சிறு துகள்களாக தூவப்பட்டு இருந்தது. பார்ப்பதற்கு கவர்ச்சியாகவும் இருந்தது. மீனில் இருந்து எழுந்த மணத்தால் நாவில் எச்சில் ஊறியது. மீனை இரசித்துக் கொண்டிருந்தபோது நூடில்ஸ் வந்தது. அதில் பெரு நண்டுகள் துண்டாகி கலந்திருந்தன

‘ பெருநண்டுகளை சமைத்து அந்த பாத்திரத்தோடு அவித்த நூடில்ஸைப் போட்டு மீண்டும் பிரட்டி எடுக்கும்போது மிகவும் ருசியாக இருக்கும். ஒரு விதத்தில் உங்கள் புரியாணி போல். ஆனால் இதில் எண்ணெயில்லை’

‘இதை விட இன்னமும் உள்ளதா சமந்தா?” எனக்கேட்டேன்.

‘ஒரு உணவு மாத்திரம் பாக்கி மாமா” என்றாள்.

‘அது என்ன?

‘ இறால் ”

‘எந்த மரக்கறியும் இல்லையா?’

‘எல்லா மரக்கறிகளோடும் சேர்த்துத்தான் இறால்’.

சமந்தா சொன்னது போல் கரட், வெங்காயத்தாள் இன்னமும் பல மரக்கறிகளுடன் இறால் சிவந்த இறாலாக வந்தது. வெந்த உணவுபோல் தோன்றவில்லை.

‘மரக்கறிகளை பச்சையாக என்னால் சாப்பிட முடியும். ஆனால் பச்சை இறால் பழக்கமில்லை. இறால் வெந்ததா?’

‘அதைப் பற்றிய பயம் வேண்டாம் மாமா. இறால் லேசாக கோது மட்டும் பொரிய எடுக்கப்பட்டது. இறாலின் உள்ளே உள்ள நீரில் இருந்து வரும் நீராவியால் மட்டும் இறால் வேகிறது. இதனால் இறாலின் சத்துகள் எதுவும் வெளியேறுவதில்லை.’

எல்லோரும் சாப்பிடத் தொடங்க கையை வைத்தபோது ‘கொஞ்சம் பொறுங்கோ’ என்றாள் வாணி

‘ஏன்…? ”

‘கேக் வருகிறது.’

அப்பொழுது ஒரு வியட்நாமிய பெண் ஒரு மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருந்த வெள்ளை ஐசிங் செய்திருந்த சொக்கலேட் கேக்கை தனது நெஞ்சுயரத்தில் ஏந்தியபடி தேவதைபோல அசைந்து எடுத்து வந்தாள். அந்த உணவு விடுதியின் இருபக்கத்து கண்ணாடிகளில் தேவதைகள் அணிவகுத்து எமது திருமண நினைவு நாள் கேக்கை கொண்டுவருவதுபோல் மங்கலான வெளிச்சத்தில் தோற்றமளித்தது. நான் மணம்முடித்து முப்பது ஆண்டுகள் நிறைவு மட்டுமல்ல தற்பொழுது எனக்கு அறுபது வயதுமாகிவிட்டது. எனக்கோ அந்த விருந்து இரண்டுக்கும் சேர்த்துதான் நடக்கிறது என்று உள்ளுணர்வு சொன்னது.

அது சரி. ஒருவயதில் ஒரு மெழுகுதிரி வைப்போம். இது என்ன அறுபதுவயதில்… ?’

அறுபது வயதில் இருந்து வாழ்கையின் முடிவை நோக்கிய ஓட்டப்பந்தயம் தொடங்குகிறது என்பதாக நினைத்துக்கொண்டு அந்த இடத்திற்கு பொருத்தமான வார்த்தைகள் இல்லை என்பதால் சொல்லவில்லை.

‘ஒரு முறைதானே அன்ரியை திருமணம் செய்திருக்கிறீர்கள் என்பதால் ஒரு மெழுகுதிரி” என்றான் மார்க்.

‘சட் அப் மார்க’; என்றாள் வாணி.

கேக்கை வைத்தபோது அந்த மேசையருகே நிழலாடியது. அத்துடன் பலகாலங்களுக்கு முன்பாக அறிமுகமான அந்தரங்கமான வாசனையை மீண்டும் சுவாசிக்க முடிந்ததால் குனிந்து கேக்கை பார்த்துக் கொண்டிருந்த நான் தலையை நிமிர்த்தினேன்.

எமிலி சிரித்தபடியே நின்று கொண்டிருந்தாள். அவளது கையில் கமரா இருந்தது.

அவளைக் கண்டதும் எனது மனைவி மாலினி எழுந்து ‘எவ்வளவு காலமாகிவிட்டது’என எழுந்தாள்.

‘இந்த உணவு விடுதிக்கு வருபவர்களை அதுவும் முக்கியமாக பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபடுபவர்களை புகைப்படம் எடுத்துக் கொடுப்பேன். அறிமுகமான முகமான முகங்கள் இங்கு இருபதுபோல் தெரிந்தபடியால் வந்தேன். டேவிட்டுக்கு பிறந்தநாள் இல்லையா? வாழ்த்துக்கள் ” என்றதுடன் எனது கன்னத்தில் குனிந்து முத்தமிட முயன்றபோது எழுந்து ‘இல்லை. அறுபது வயதுதான் ஆனால் முப்பது வருட கல்யாணநாள்’ என்று சொல்லி முத்தமிட்டேன்.

அவள் நெருங்கு முன்பு அவளது நிழல் நெருங்கியது. அவளது நிழலைக் கண்டதும் வேகமாக அடிக்கத் தொடங்கிய இதயம் நெஞ்சை விட்டு வெளியேறும் அவதியில் ஓட்டப்பந்தயத்தில் இறுதிச்சுற்றுக்கான வேகத்தில் இயங்கியது. குடித்த வைனில் வந்த போதை சென்ற இடம் தெரியவில்லை. எவ்வளவோ உண்டபின்னும் வயிற்றில் ஏதோ காலியாகி, அங்கு உண்ட கௌதாரி உயிர்பெற்றது போன்ற நிலையில் அவளது எதிர்பாராத முத்தம் மேலும் உடலில் பெரிய பூகம்பத்தை உருவாக்கியது. சமநிலைக்கு வருவதற்கு சிறிது நேரம் எடுத்தது.

மாலினியிடம் திரும்பி ‘வாழ்த்துகள்’ என்றாள். மீண்டும் ‘எப்படி டேவிட்? அறுபது என சொல்ல முடியாது’ என்றாள் எமிலி.

தேவகுமாரான என்னை டேவிட் என அழைப்பது அவளது பழக்கம்.

‘திடீரென பார்த்ததும் பேசமுடியவில்லை எமிலி. மிகவும் நன்றி. ஏதோ அதிர்ஷ்டம்தான் உன்னை இங்கு வரவழைத்திருக்கிறது. இது எனது மகன் மகள் மற்றும் மருமக்கள் ” என அறிமுகப்படுத்தினேன்.

அவளது முகத்தில் மேக்கப்பில்லாததால் ,கண்ணருகிலும் கழுத்திலும் சுருக்கங்கள் தெரிந்தன. ஒருகாலத்தில் நிறைந்து வழிந்த உதடுகள் உலர்ந்திருந்தது.

‘ஜெயந்தனை எனக்குத் தெரியும். அப்பொழுது ஒரு வயதுப்பிள்ளையாக இருந்தான்.

ஜெயந்தன் மட்டுமல்ல எல்லோரும் விழித்தனர்.

‘எமிலிதான் நான் உடல் நலமில்லாதபோது இரண்டு வருடம் வீட்டுக்கு வந்து உதவி செய்தவர். அப்பொழுது கவுன்சிலில் வேலை செய்து கொண்டிருந்தவர். இந்த நாட்டில் நாங்கள் மிகவும் கடமைப்பட்டிருக்கும் ஒருவர் எமிலி.” என்றாள் மனைவி மாலினி.

‘இல்லை. மாலினி எனது கடமை. அதற்கு நான் பணம் பெற்றேன் உங்களிடமும், கவுன்சிலிடமும்.

‘எமிலி உங்கள் பராமரிப்புத்தான் என்னை குணமாக்கி; வாணியை பெறமுடிந்ததுடன் மீண்டும் வேலைக்கும் போக முடிந்தது. எங்களால் உங்கள் உதவிகளை மறக்கமுடியாது.” என்றாள் மாலினி.

‘எங்களுடன் இருந்து சாப்பிடுங்கள். அன்ரி. ” என்றான் ஜெயந்தன்.

‘நான் போகவேண்டும.; டேவிட்டுக்கு கேக் வெட்டுங்கள்.’ எமிலி சொன்னாள்.

‘நன்றி எமிலி’ என்றவாறு அவளது முகத்தை பார்த்தபோது அவளது அந்தக் கண்களில் முன்பு ஒரு காலத்தில் கரைந்து உருகிய கணங்கள் மனதில் வந்து மறைந்தது. கால் நூற்றாண்டுக்கு முன்பு அவள் மிகவும் அழகி என்று கூறமுடியாவிட்டாலும் கவர்ச்சியாக இருந்தவள்.

———-

வீட்டுக்கு காலையில் வந்து மாலினியையும் பின்பு கைக் குழந்தையாகிய ஜயந்தனை பராமரித்தாள். கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் அவளது பராமரிப்புத் தொடர்ந்தது.

நான் நீர்பாசன திணைக்களத்தில் வேலை செய்வதால் வாரவிடுமுறை நாட்களில் அவள் வருவதில்லை. இதனால் அதிக பழக்கம் ஏற்படவில்லை.

அந்த ஒரு நாள் நான் எதிர்பார்க்காதது. அன்று மாலை ஆறு மணி செய்தியை கேட்க நான் ஹோலுக்கு சென்றபோது எமிலி வேலை முடிந்தும் போகவில்லை. துணிகளை எடுத்து மடித்தபடி இருந்தாள். அது முடிய போய்விடுவாள் என்ற எண்ணத்தில் தொலைக்காட்சியை பார்த்துவிட்டு உணவை உண்டுவிட்டு எனது படிக்கும் அறைக்குச் சென்றேன். இரவு ஒன்பது மணியாகி விட்டதால் திரும்பவும் ஹோலுக்கு சென்றபோது அங்கு தொலைக்கட்சியை பார்த்தபடி எமிலி இருந்தாள்.

‘இன்னும் வீடு செல்லவில்லையா…? ” எனக்கேட்டேன்.

‘வீடு இல்லை?

‘ஏன்?’

‘எனது கணவர் என்னை விட்டு விட்டு எமது இரண்டு குழந்தைகளையும் எடுத்துக்;கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். வெறுமையான வீட்டுக்குள் எப்படி செல்வது’ என்ற போது அவளது கண்களில் நீர் சுரந்தது.

அவளையோ அவளது குடும்பத்தைப்பற்றியோ எனக்கு எதுவும் தெரியாத போது அவளது அந்தரங்கமான விடயத்தில் அவளுக்கு ஆறுதல் கூறமுடியாத நிலையிலும் மேலும் அவளது அந்தரங்கவிடயங்களை அறிந்துகொள்ளும் நேரம் அது இல்லை என நினைத்தபடி ‘எமிலி இந்த அறையில் படுத்துவிட்டு நாளை செல்லலாம்’ என அருகிலிருந்த ஒரு அறையை அவளுக்கு காட்டி விட்டு நான் உள்ளே சென்றேன்.

மனைவியின் அறைக்குச் சென்று விடயத்தை சொல்லிவிட்டு மீண்டும் படிக்க சென்றேன். அன்று இரவு எங்கள் வீட்டில் எமிலி தங்கினாள்.

நடு இரவு அவளது அறையில் இருந்து மெதுவான விசும்பல் சத்தம் கேட்டது என மனைவி சொன்னதால் அவளது அறைக்குச் சென்று பார்த்தேன். இருளான அந்த அறையில் கட்டிலில் முழங்காலை மடித்து அதில் தலைபுதைத்து விசும்பியபடி ஒரு நிழலாக எமிலி இருந்தாள். எட்டிப்பார்த்து விட்டுபோக முடியாது . உள்ளே சென்று எமிலியிடம் ஆறுதலாக சில வார்த்தை சொல்லவேண்டும் என நினைத்தாலும் வார்த்தைகள் உதட்டைவிட்டு வரவில்லை.

‘எமிலி தைரியமாக இரு’ என்று மட்டுமே சொல்லமுடிந்தது.

அவளிடம் இருந்து எதுவித பதிலும் இல்லை.

லைட்டைப் போட்டுவிட்டு அவளருகே அமர்ந்தேன்.

‘ஐ ஆம் சொறி’ என்றுவிட்டு தொடர்ச்சியாக முகத்தை புதைத்தபடி இருந்தாள்.

அரை மணிநேரம்; செல்ல அவள் முகத்தை தலையணையில் புதைத்தபோது அந்த அறையின் லைட்டை அணைத்துவிட்டு விலகினேன்.

எமிலியின் கணவன் ஏன் அப்படி செய்தான்? இவள் என்ன குற்றம் செய்தாள்? இந்தக்கேள்விகள் எனது மனதை அரித்தபடி இருந்தன. ஆறு மாதகாலமாக எங்கள் வீட்டுக்கு வந்து உதவி செய்யும் ஒரு பெண்ணிடம் எந்த விபரத்தையும் கேட்காமல் சுயநலமாக இருந்துவிட்டோமே? மிலிக்கு நாற்பது வயது இருக்கலாம். முப்பது வயதான எனக்கு எமிலி இதுவரையும் திரும்பிப் பார்க்கவேண்டிய பெண்ணாகத் தெரியவில்லை. ஏதோ ஐரோப்பிய தொனி அவளது உச்சரிப்பில் தெரிந்தது. சராசரிக்கு குறைந்த உயரமும், சிறிது பருமனான உடலும், அதிகமான மேக்கப்பும் கொண்டவள்: என்னை கடந்து செல்லும் தருணங்களில் அவற்றை அவதானிக்க முடிந்தது. அதைவிட அவள் கடைசியாக குடித்த கப்புகளில் அவள் அவற்றை கழுவுவதன் முன்பு படிந்த சிவப்பு உதட்டு சாயத்தையும் அவதானித்தேன். இதற்கு மேல் அவள் மீது எந்த அக்கறையும் காட்டாதது குற்றமாகத் தெரிந்தது.

மறுநாள் காலை அவள் தனது வீட்டிற்கு செல்லும்போது அவளிடம் விலாசம்கேட்டு விட்டு அன்று மாலை அவளது வீட்டுக்குச் சென்றேன். அவளுக்கு வக்கீலை ஏற்படுத்தி மற்றும் பல உதவிகளை செய்யத் தொடங்கியபோது அவள் தனது குழந்தைகளை பொறுப்பேற்றாள். மெதுவாக தன் துன்பத்தில் இருந்து மீண்டு வந்தவளிடம் நான் என்னை இழந்தேன். நிஜத்தில் பொருட்படுத்த முடியாமல் இருந்த அவளிடம் நெருங்கும்போது ஏதோ வித்தியாசம் தெரிந்தது. அவளது அழகும் அதிகமாகி என்னைக்கவரத் தொடங்கியது

அவளிடம் மாலையில் இருமணிநேரம் கழித்துவிட்டு வீடுவருவது வழக்கமாகியது. எந்த ஒரு எதிர்பார்ப்பும் அற்ற இந்த உறவு இருவருக்கும் வசதியாக இருந்தது. அவளது குழந்தைகள் அவளிடம் வந்த பின்பும் நீடித்தது.

இப்படியான காலத்தில் மனைவி குணமாகி பழைய நிலைக்கு வந்ததும் எமிலி எங்கள் வீட்டுக்கு வேலைக்கு வருவதில்லை. வழக்கம்போல் ஒரு நாள் அவளது வீட்டிற்கு இந்திய உணவோடு சென்றபோது மேசையில் வைத்து உணவருந்திவிட்டு அவளை நெருங்க முயன்றபோது கைகளை தோளில் போட்டு ‘டேவிட் இதுவரை இருந்த இந்த உறவு தொடரக்கூடாது. இருவரும் நண்பர்களாக இருப்போம்’ என்றாள்.

அந்த நிராகரிப்பு கசப்பாக இருந்தது.

‘ஏன்…?”

‘இந்நாட்களில் உங்கள் மனைவி பூரணகுணமடைந்து உங்களைத் தேடுகிறாள் என்பது எனக்குப் புரிகிறது. அவளுக்கு துரோகம் செய்ய நான் விரும்பவில்லை’

‘உனக்கு என்ன நடந்தது?

‘டேவிட் இவ்வளவுகாலமும் ஒரு குழந்தை பாவிக்காத விளையாட்டுப்பொருளுடன் நான் விளையாடினேன். உண்மைதான் அதுவும் திருட்டுத்தனமாக விளையாடுகிறேன் என நினைத்துக்கொண்டாலும் இரண்டு வருடங்களாக பிரிந்திருக்கிறாய் என்பதும் எனது கஷ்டகாலங்களில் உனது துணை ஆதரவாக இருந்தது. மனதில் குற்ற உணர்வுடனே செய்தேன். ஆனால் இப்பொழுது எனது மனச்சாட்சியை என்னால் நியாயப்படுத்த முடியவில்லை. உனக்காக என்னிலும் அழகான இளமையான தேவதை வீட்டில் காத்துக் கொண்டிருக்கிறாள். தயவு செய்து போ.’

அவளது வார்த்தைகளுக்கு மறுவார்த்தை பேசமுடியவில்லை. எனக்காகவே அவள் அப்படி பேசும்போது என்ன செல்வது?.
‘உனது கூற்றில் உள்ள உண்மை புரிகிறது’ என்றேன்.

அதன்பின்பு எமிலியின் பிறந்த நாட்களுக்கு மலர் செண்டு ஒவ்வொரு வருடமும் அனுப்புவேன்

மாலினிக்கு மீண்டும் வேலை கிடைத்ததுடன் தாயாகினாள்

எமிலியின் அந்தரங்க நினைவுகள் வண்டியின் முன்சக்கரமாகவும் தொடர்பில் ஏற்பட்ட குற்ற உணர்வு பின்சக்கரமாகவும் எப்பொழுதும் தொடர்ந்தன. ஆனால் எங்கள் வாழ்க்கை முன்னே நகர்ந்தது.
——-
கேக்கை வெட்டி முடித்து பரிமாறியதும் எமிலி புறப்பட்டபோது எல்லோரும் எழுந்தனர். மாலினி மட்டும் வெளியே சென்று சில வார்த்தைகள் பேசினாள். எமிலியும், மாலினியும் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டது மழையின் புகார் படிந்த கண்ணாடியில் மங்கலாக தெரிந்தது. எனது கண்களிலும் கண்ணீர் படலமாக திரையிட்டது.

விருந்து முடிந்தும் வெளியே இன்னமும் மழை தூறிக்கொண்டிருந்தது.

திரும்புகையில் பிள்ளைகள் தொடர்ச்சியாக எமிலியைப்பற்றியும் தாயின் நோய்பற்றியும் பேசிக் கொண்டிருந்தனர். ஜயந்தன் இதை தனக்கு சொல்லாததற்கு ஆத்திரப்பட்டான். வாணி விருந்திற்கு எமிலியை ஏன் அழைக்கவில்லை என குறைப்பட்டாள். ஆனால் அவர்களுக்குத் தெரியத பல விடயங்கள் இருக்கிறது என்ற ஆதங்கம் இருந்தது.

‘உங்களை வளர்ப்பதில் பல கஷ்டங்களை நாங்கள் பட்டிருக்கிறோம் அதையெல்லாம் சொல்லி உங்களையும் அந்தக்கவலைகளை சுமக்க வைக்க விருமபவில்லை.” என்றாள் மாலினி.

வீடு திரும்பியதும் நான் நித்திரைக்கு சென்று விட்டேன்.

மாலினியின் கதை

நான் தொடர்ந்து எமிலியுடன் தொடர்பு வைத்திருந்ததை எனது கணவன் தேவிடம் மறைத்தது குற்றமா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. சில விடயங்களை மறப்பதில் அர்த்தங்கள் இருக்கிறது. என்னுடன் படித்த தேவின் தம்பி அருளை காதலித்ததும், அவன் போராட்ட இயக்கத்தில் சேர்ந்து இறந்ததும், அதை நினைத்துக் கொண்டிருந்த என்னை, இங்கிலாந்தில் இருந்து வந்த தேவிக்காக அம்மா வந்து பெண் கேட்க எனது அம்மா சம்மதித்துவிட்டார். இங்கிலாந்து எஞ்ஜினியர் மாப்பிள்ளை கிடைத்ததும் எனது விருப்பத்தை ஒருவரும் கேட்கவில்லை. திருமணத்திற்கு மறுத்தபோது காரணம் சொல்ல முடியவில்லை. அம்மாதான் உயிர் விடுவதாக அழுதபோது எனது நினைவுகள் ஊமையின் கனவாகின. வேறுவழியில்லை. அவசரமாக மாலை மாற்றியதும் அந்த மாலையில் இருந்த மலரின் மணம் அகலுமுன்பு விமானத்தில் இங்கிலாந்துக்கு ஏறி பின் ஆறுமாதத்தில சிட்னியில் வந்து இங்கினோம். ஓவ்வெரு முறை தேவியைத் தொடும்போதும் அருளின் நினைவு வருவதும் பல்லைக்கடித்தபடி சத்தமின்றி அருளின் பெயரை தொண்டைக்குள் அமுக்கும்போதும் நரகவேதனயாக இருந்தது.

ஜயந்தன் பிறந்தபோது அருளைப்போல் முகம் மட்டுமல்ல முதுகில் மச்சத்துடன் பிறந்ததால் மனதை ஒரு முகப்படுத்த முடியாமல் தவித்த தவிப்பும் கடைசியில் மனஅழுத்தம் ,மூளைக்கோளாறு என வைத்தியர்கள் கூறினார்கள். இரண்டு வருடங்கள் கரைத்துவிட்டது. இந்த காலத்தில் எமிலியின் உதவி மறக்க முடியாது

குணமடைந்ததும் வீட்டுக்கு தாமதமாக வருவதையிட்டு எமிலிடம் சந்தேகம் கொண்டு கேட்டதும் எமிலி ஒத்துக்கொண்டு இருவரும் ஒன்றாக இருமணி நேரத்திற்கு அழுதபோது இருவரும் இரகசியங்களை பரிமறியபின் எமிலி ‘மன்னித்துக்கொள் என்றாள்

‘இல்லை எமிலி இரண்டு வருடமாக என்னைப் பாதுகாத்ததும் இல்லாமல் என் கணவரையும் பாதுகாத்திருக்கிறாய்.வேறு எங்காவது தொடர்பிருந்தால் நான் வாழ்க்கையை இழந்திருப்பேன். இதற்கு மேலானது இவ்வளவு காலமும் எனக்கிருந்த பெரிய மன அழுத்தத்தை நீங்கிவிட்டாய்.

‘ஏன்’

‘நான் தேவ்வின் தம்பியைக் காதலித்து சந்தர்ப்பவசத்தால் தேவ்வை மணந்து கொண்டவள். இதனால் ஏற்பட்ட மனக்குழப்பம்தான் எனது நோய்க்கு மூலகாரணம். உனது தொடர்பு இவ்வளவுகாலமும் தேவுக்கு துரோகம் செய்துவந்தேன் என்ற மனக்குறையை நீக்கிவிட்டது.

‘உண்மையாகவா சொல்கிறாய்?

உண்மையாகத்தான். எல்லாவற்றையும் கருப்பு வெள்ளையாக பார்க்க நான் விரும்பவில்லை. தேவ் நல்ல மனிதர். ஒரு நாளும் என்னை வார்த்தையால்கூட உரத்துப் பேசவில்லை. எனது நோய்காலத்தில் மிகவும் அன்பாக நடந்துகொண்டார். அப்படியொரு மனிதர் எனக்கு கிடைத்தது அதிஷ்டமே.’

‘உண்மைதான் டேவிட்டின் குழந்தை போன்ற குணம்தான் என்னையீர்த்தது.
——-
மாலினி வீடுவந்து உடுத்திருந்த சேலையை கழற்றாமல் வேலைகளை செய்துவிட்டு கட்டிலுக்கு சென்று தேவ்வை உற்றுப்பார்த்தாள். அவளையறியாமல் அவளது கண்களில் இருந்து சில துளிகள் தேவ்வின் முகத்தில் விழுந்தன. தேவ் ஆழமான நித்திரையில் ஆழ்ந்திருந்தான்.

‘எமிலிக்கும் எனக்கும் தெரிந்தவை எங்களுடனே போகட்டும்’ என முணுமுணுத்படி யன்னல் திரையை விலக்கினாள். கண்ணாடி யன்னலின் வெளியே மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது. தேவ்வின் குறட்டை அந்த படுக்கையறயை ஆக்கிரமித்தது.

 

 

Series Navigationகொலஸ்ட்ரால் கொழுப்புகள் பலவிதம்உதிர்ந்த செல்வங்கள்