அன்பளிப்பு

அந்தக் கவிஞனின்
உறுப் பெல்லாம் யாப்பு
நரம்பெல்லாம் மரபு

அசையும் சீரும்
அடி தொழும்
துடிக்கும் அவன் எழுத்தில்

அந்த வெல்லக் கவிஞனுக்கு
பிள்ளைத் தமிழ் எழுத
கொள்ளை ஆசை

தமிழையே
தண்ணீராய்ப் பருகும்
தன் தலைவன் மீதே
பிள்ளைத் தமிழ் பாடினான்
தன் பொன்விழாவில் தந்தான்

ஐநூறு பேரை அழைத்தான்
மூந்நூறு பேரே வந்தனர்
நூலை வாங்கியோர் நூறு பேர்

நூலுக்குத் தந்த
சில காகித உரைகளில்
காசே இல்லை

இடுக்கண் களைபவனே
உடுக்கை பறிப்பதா?
அன்பளிப்பாக அவமானமா?
எனக்கா தமிழுக்கா

அடுத்த நாள்
ஊடகங்கள் கேட்டன
கவிஞனை

‘உன் பிள்ளைகளுக்குப்
பொன்விழாச் செய்தி சொல்
பிள்ளைத் தமிழே’

கவிஞன் சொன்னான்

‘அவமானங்கள்
எனக்கென்றால் சகிப்பேன்
தமிழுக்கென்றால் சாவேன்’

அமீதாம்மாள்

Series Navigationநாடகத்தில் சொதப்பாதிருப்பது எப்படி ?நவீன புத்தன்