அன்பாதவன் கவிதைகள் – ஒரு பார்வை

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

‘ தனிமை கவிந்த அறை ‘ கவிதைத் தொகுப்பை எழுதிய அன்பாதவன் [ இயற்பெயர் ஜ .ப அன்புசிவம் ] விழுப்புரத்துக்காரர். பல இலக்கியப்
பத்திரிகைகளில் எழுதியுள்ளார். பல நூல்கள் எழுதியுள்ளார். பல பரிசுகள் பெற்றுள்ளார். 96 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தில் பல
கவிதைகள் உள்ளன. தனிமை , மெளனம் , காதல் , மரணம் போன்ற பாடு பொருட்கள் அவற்றின் மென்மையான பரப்புகளில் கவிமணம்
வீசி அழகாய்ப் பூத்து நிற்கின்றன.
‘ மவுனவெளி ‘ ஒரு நல்ல , காதல் பிரிவைச் சொல்லும் கவிதை அடர்த்தியான சொல்லாட்சி , புதிய சிந்தனைகள் காணப்படுகின்றன.
இவற்றின் வழிப் படிமங்கள் உதிர்கின்றன.
சுற்றிப் பரவியிருக்கும் உரத்த ஓசைகளிலும்
தெளிவாகக் கேட்கிறதுன் மொழியின் இசைலயம்
….. உரத்த ஓசைகளிலும் அவள் மொழியின் இசைலயம் முன் நிற்பது என்னும் வெளிப்பாட்டில் நேசம் ததும்புகிறது.
ரசிக்கிறேன்
இளமையாய் மழலையாய்
மடியில் வைத்துக் கொள்ளத் தோணும்
பரிமாறலில் இளகுமுன் வயதை
தாய்மையின் அறிவுரையுமுண்டு
……. கடைசி இரண்டு வரிகளில் ஒரு தெளிவின்மை காணப்படுகிறது. ‘ பரிமாறலில் தாய்மையின் அறிவுரையுமுண்டு ‘ என்றிருந்தால் ஒரு
தெளிவு கிடைத்திருக்கும்.
உறக்கங்களில் உடனிருக்கிறது
போர்வையாயுன் வார்த்தைகள்
…… அழகான படிமம். காதல் உறவின் மேன்மை இதில் சிறைப்பட்டு நிற்கிறது. கவிதையில் முத்தாய்ப்பு கச்சிதமாக அமைந்துள்ளது.
புற உலகின் ஒலிகளைக் கடந்து
நிசப்த தருணங்களிலும்
அளவளாவிக் கொண்டு தானிருக்கும் என் மனசு
உன்னுடன்.
…… பாராட்டி மகிழ வைக்கிறது கவிதை. கவிதையின் தலைப்பு கனமானது. வெளி என்ற சொல் நீண்ட பரந்துபட்ட என்ற பொருட்களைத்
தந்து சிறப்பூட்டுகிறது.
‘ அபிரக்ஞை ‘ கவிதையில் காட்சிப் படுத்துதல் நன்றாக அமைந்துள்ளது. ஒரு தற்செயல் காட்சி யதார்த்தத்தின் உச்சமாகி உள்ளது.
ஹாரன் ஒலியில் திடுக்கிட்டு
முலைப்பால் சொட்ட
வேடிக்கை பார்க்கும் சிசு
….. சாட்டையால் தன்னைத் தானே அடித்தபடி ‘ வித்தை ‘ காட்டும் கழைக் கூத்தாடி கவனத்தை ஈர்க்கிறார்.
‘ மெல்லக் கரையும் இரவு ‘ — பாலியல் கவிதை !
அருகருகே புரள்கிறோம் தூக்கமின்றி
இடைவெளியில் இருளில்
படுத்துக் கிடக்கிறது
கசப்பும் சலிப்புமான ஒரு மிருகம்
…….. என் இல்லறத்தில் ஏற்பட்ட மனவிலக்கைப் பதிவு செய்கிறார் அன்பாதவன். இங்கேயும் ஒரு படிமம் ‘ நச் ‘சென்று அமைந்துவிட்டது.
இக்கருத்தின் வெளிப்பாட்டில் தேவையில்லாத சொல் ஒன்று கூட இல்லை என்பதைக் கவனிக்க வேண்டும்
பல் படும்போதெல்லாம்
உறிஞ்சிவிடுகிறது நேசத்தை
…. ‘ அன்பு இல்லை ‘ என்ற சாதாரண வாசகம்தான் , மேற்கண்ட கவிதை வரிகளாக மாறியுள்ளது.
முரட்டுப் பிரியத்தின் மொழி புரியாததில்
துப்பும் கசந்த வார்த்தைகளின்
கனத்தில் உடைந்து சிதறுகிறதென் காமம்
……. காமம் சிதறியது ஏன் ? நமக்குக் கிடைக்கும் விடை ‘ முரட்டுப் பிரியம் ‘ என்பதும் அதைத் தொடர்ந்த கசந்த வார்த்தைகளின்
கனமும்தான் !
அகத்தின் எழுச்சியினுன் அண்மை தேடி வருகிறேன்
புறங்களைப் பற்றிய எச்சரிக்கையோடு விலகுகிறாய்
…. இச்செயல்பாடு எல்லா ஆண்களும் சந்திக்கும் பிரச்சனைதான். இதை வெற்றிக் கவிதையாகவே நான் பார்க்கிறேன். தேர்ந்த சொல்லாட்சி
கவிதையில் நல்ல கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.

‘ காதலைச் சொன்ன மாலை ‘ என்ற கவிதையில் காதலைச் சொன்னது யார் ? அவனா ? அவளா ? விடை கவிதையில் இல்லை.
வியப்பின் உச்சிக்கு ஒருவர் சென்றால் அவர் மனம் எப்படி இருக்கும் என்பதற்கு இக்கவிதை நல்ல சான்று. எனவே பெண் காதலைச்
சொல்லக் கேட்டு ஓர் ஆண் மகிழ்வதாகக் கொள்ளலாம். முரண் தொடர்கள் அடுக்கப்பட்டுள்ளன.
காதலைச் சொன்ன மாலையில்
ஒரே வரிசையில் நீண்டன நட்சத்திரங்கள்
சதுரமாய்ச் சிரித்தது நிலவு
…..,,, புனைவு சார்ந்த படிமம் மணல் அலைகளாகக் கிளம்பி கடலுக்குள் சென்றன. திமிங்கலத்தை சின்ன நெத்திலி விழுங்கியது என்றெல்லாம் கூறுவது மிகையுணர்வு உச்சம் தொட்டு நிற்பதைக் காட்டுகிறது.

தீ தொடுவதற்கு இனிக்கிறதாம். சூரியன் பனிழை பொழிந்தான் என்றும் கூறுகிறார்.
எல்லாப் பறவைகளும்
காதல் பறவைகளாக மாறிவிட்டன
காதலைச் சொன்ன மாலையில்
…… என்பது முத்தாய்ப்பு. மிகையுணர்வையும் மீறி சில நயங்கள் ரசிக்க வைக்கின்றன. காதலால் மனம் துள்ளுவதை ஒரு பழைய சினிமா
பாடல்……
நாளெல்லாம் திருநாளாகும்
நடயெல்லாம் நாட்டியமாகும்
என்கிறது.

‘ தோழியர் கூட்டம் ‘ என்ற கவிதை ஆறு பகுதிகளைக் கொண்டது. ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு கிழமை துணைத் தலைப்பாகியுள்ளது,
அதாவது ஞாயிறு முதல் வெள்ளி வரை ! சனிக்கிழமை ஏன் விடப்பட்டதோ ? இக்கவிதையில் பல பெண்கள் பேசப்படுகிறார்கள்.
கூட்டாஞசோறு ஆக்கி விளையாடியவள் , கல்லூரித் தோழி , கணவனை இழந்தவள் எனப் பலர் பேசப்படுகிறர்கள்.
புத்தகத் தலைப்புக் கவிதை ‘ தனிமை கவிந்த அறை ‘ ! தனிமையில் இருக்கும் ஒருவனுடைய மனநிலையைப் பதிவு செய்கிறது.
இரவை
ஒரு தேர் போல
இழுத்து வந்தது மழை மாலை
…… என்பது புதிய அழகான படிமம். சாதாரண கருப்பொருள். ஒருவன் ரயில் வண்டியிலிருந்து இறங்கித் தன் அறைக்குச் செல்கிறான்.
போர்த்திக் கொண்டு படுக்கிறான். இடையில் ஒரு தவறான எண்ணுக்கு கைபேசி அழைப்பு வருகிறது. இவன் துயர் பொறுக்காமல் மழை
கதறி அழுகிறதாம். நன்றாகத் தொடங்கிச் சுமாராக முடிகிறது கவிதை !
பல நல்ல கவிதைகளைக் கொண்ட தொகுப்பிது. அன்பாதவன் இலக்கியத் தடாகத்தில் சொற்கள் கவித்துவமாய் நீந்தித் திளைக்கின்றன.
படித்து மகிழலாம் !

Series Navigationதொடுவானம் 85. புதிய பூம்புகார்சைனா 2020 ஆண்டுக்குள் முதன்முறையாக நிலவின் மறுபுறத்தில் தளவுளவியை இறக்கத் திட்டமிடுகிறது.