அம்மா

 

(1)

 

அம்மா

இனியில்லை.

 

வெயிலில்

வெறிச்சோடிக் கிடக்கும்

ஒற்றையடிப்  பாதையாய்

மனம்

ஒடிந்து கிடக்கும்.

 

வேலைக்குப் போய்

அம்மாவுக்கு

வாங்கித் தந்தது

ஒரே ஒரு சேலை.

 

அழுவேன்

நான்.

 

ஆண்டுகள் பல

அம்மாவிடம் பேசாத அப்பா

நாற்காலியில் கிடத்தப்பட்டிருக்கும்

’அம்மாவின்’ தலைக்கு

எண்ணெய் வைப்பார்.

 

அது

இது வரை

என் விவரம் தெரிந்த வரை

அம்மாவுக்கு

அப்பா செய்த

ஒரே ஒரு சேவகம்.

 

அழுவார்

அப்பா.

 

இருந்து

அம்மா

இன்னல்களில்

அழுது நான் பார்த்ததில்லை.

 

அழுவேன் நான்

அம்மா

இல்லாததற்கும்.

இருந்து

அழாததற்கும்.

 

(2)

 

இருமி

இருமி

இளைப்பாயிருக்கும்.

 

முழங்கால்கள்

நெஞ்சோடு சேர்த்து

களைப்பாயிருக்கும்.

 

”அம்மா” என்று

அடி மனம்

கரையும்.

 

‘அம்மாவின்’ வயிற்றில்

மீண்டும்

கர்ப்பித்து

உறக்கம் கொள்வதாய்

இருக்கும்.

’அம்மா’

எப்போதும்

இல்லாமலில்லை.

 

மண்குடம்

என்னுள்

வெளி அவள்.

 

 

கு.அழகர்சாமி

Series Navigationஅக்னிப்பிரவேசம் -1மணிபர்ஸ்