அம்மா

நீ ஊட்டிய அமுதில்
என் நகங்களும் பசியாறின

உன் தாலாட்டில்
இமைகள் சுமையிறக்கின

உன் விரல் பிடித்து நடந்தேன்
விரல்கள் விழிகளாயின

உன் கோழிக் குஞ்சிகளை
சாயம் ஏற்றாமல்
மேயவிட்டதில்லை
மிரண்டன பருந்துகள்

பசலையும் அவரையும்
சொகுசாய்ப் படர்ந்தன
முளைவிடும்போதே
நீ விரித்த பந்தலில்

கத்தரிப் பூச்சிகள்
காணாமல் போயின
நீ தூவிய சாம்பலில்

வாடிக்கைக் காகங்கள்
கன்றோடு பசு
குஞ்சுகளோடு கோழிகள்
இவைகளோடு நானும்
பசியாறாமல் நீ
பசி உணர்ந்த தில்லை

அன்று  அடைமழை
நம் கட்டைச் சுவரில்
ஒரு தண்ணிப் பாம்பு
நான் கம்பு தேடினேன்
நீ கைதட்டி விரட்டினாய்
பின் சொன்னாய்

என் வாழ்க்கைச் சக்கரத்தின்
கடையாணியாக அந்த
உன் கடைசி வார்த்தைகள்
இதோ

‘விரட்டிவிடு அல்லது
விலகிவிடு
எதையும் காயப்படுத்தாதே’
—————————————–

Series Navigationபவித்திரனின் “ மாட்டுத்தாவணி “விபத்தில் வாழ்க்கை