அரசாணை – ஐந்தாண்டுகளுக்கு!

நூலிழை கொண்டு
நெய்து வைத்தது போல்
பெய்து கொண்டிருந்தது
மழை

இடியாமலும் மின்னாமலும்
சற்றேனும் சினமின்றி
சாந்தமாயிருந்தது
வானம்

சீயக்காய் பார்க்காத
சிகையைப்போல
சிக்குண்டு கிடந்தன
மேகங்கள்

உதயகாலம் உணராமல்
உறங்கிக்கொண்டிருந்தது
உலகம்

பஞ்சுப்பொதி மேகம் போர்த்திப்
படுத்துறங்கிக் கொண்டிருந்தது
பகலவன்

தற்காலிக ஓடைகளிலும்
தான்தோன்றிக் குட்டைகளிலும்
துள்ளின
தவளைகள்

நைந்தும்
சிதைந்தும்போய்விட்ட
மழைநீர் சேகரிப்புக் கொள்கலன்களில்
ஐந்தாண்டுகளுக்குப் பிறகு
மீண்டும்
அனிச்சையாகவே
சேகரமாயது
மழைநீர்.

Series Navigationகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அன்புமயமும் சமத்துவமும் (Love & Equality) (கவிதை -47 பாகமும் -1)குறுநாவல்: ‘பிள்ளைக்காதல்’