அரசியல்பார்வை

அரசியல்பார்வை

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

……………………………………………………………………………………………………………………

அதுவொரு வனம் என்று எதை வைத்துச் சொல்கிறாய் என்கிறீர்கள்

வனத்தை வனம் என்றுதானே சொல்லமுடியும் என்கிறேன்.

அதுவொரு வனம் என்று எதை வைத்துச் சொல்கிறாய் என்கிறீர்கள்

வனம் நம் கண் முன் விரிந்திருக்கிறது. இது போதாதா என்கிறேன்.

போதாது. இது வனம் என்பதற்கு அத்தாட்சி வேண்டும் என்கிறீர்கள்.

காற்றின் இருப்புக்கு அத்தாட்சி கேட்பது எத்தனை அபத்தமோ

அதை விட மோசம் வனத்தின் பிரத்யட்சத்துக்கு நிரூபணம் கேட்பது என்கிறேன்.

இது வனமானால் இதில் என்னவெல்லாம் இருக்கிறது சொல் பார்க்கலாம் என்கிறீர்கள்.

இருவரின் நேரத்தையும் ஏன் இப்படி வீணடிக்கிறீர்கள் – வனத்தை வனமில்லை என்று பேசுவதுதான் அறிவுசாலித் தனம் என்றால் உங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் என்கிறேன்.

அதிபுத்திசாலியாகப் பேசுவதாக நினைப்போ? வனத்தில் என்ன இருக்கிறது என்று ஒரு பத்து விஷயங்களைக்கூட சொல்லத்தெரியவில்லை உனக்கு என்று எகத்தாளமாகச் சிரிக்கிறீர்கள்

உங்களுக்கு இது வனம் என்று சொல்லக்கூடத் தெரிய வில்லையே – இதில் என்னைக் கேள்வி கேட்கிறீர்கள் என்கிறேன்.

நாலு மரங்களிருந்தால் வனமாகிவிடுமா என்று நமுட் டுச் சிரிப்போடு கேட்கிறீர்கள்

இங்கே நாலு மரங்கள் மட்டுமா இருக்கின்றன என்கி றேன்.

புலி சிங்கம் யானை கரடி விஷப்பூச்சி குள்ளநரி பாம்பு நீர்ச்சுனை முட்புதர்கள் அன்னபிற இருந்தால் மட்டும் ஒரு இடம் வனமாகிவிடுமா என்கிறீர்கள்.

ஆக இவையெல்லாம் இங்கிருக்கின்றன என்பதை ஏற் றுக் கொள்கிறீர்கள் என்கிறேன்.

ஒரு பூகோள வரைபடத்தில் கோடிழுத்துக் காட்டப்பட் டுள்ள வனப்பகுதி நிஜ வனமாகிவிடாது என்கிறீர்கள்

வரைபடத்திலுள்ள வனம் என்பது மெய்வனத்தைத் தானே குறித்துக்காட்டுகிறது என்கிறேன்.

வனம் என்பது உன் மன பிரமை யென்கிறீர்கள்

ஒரு கை யோசைத் தத்துவம்தானே எல்லாம் என்கிறேன்.

ஏட்டுச்சுரைக்காய் கவைக்குதவாது என்கிறீர்கள்.

அது ஏட்டைப் பொறுத்தது என்கிறேன்.

எதை வேண்டுமானாலும் வனம் என்று தினம் நம்புவ தால் என்ன பயன் என்கிறீர்கள்

வனத்தை வனமில்லை யென்று சாதிப்பதால் என்ன பயன் என்கிறேன்

நான் வனம் என்று சொல்வதை வனம் என்று கொள்ள குறைந்தபட்சம் நூறுபேர் உண்டு என்கிறீர்கள்

ஆக உங்கள் வனம் வனமில்லை யென்று ஒப்புக்கொள் கிறீர்கள் என்கிறேன்.

வளர்ந்துகொண்டே போகும் வார்த்தைகளில் விரிந்து கொண்டே போகிறது வனம்

கணமோ யுகமோ – கவிதைபோல் காலமும் முடியத் தான் வேண்டும்……மௌனமாகிறேன்.

இங்கில்லாத வனத்தை இருப்பதாகப் பொய்யுரைத்த குற்றவுணர்வில் ஏதும் பேச வக்கில்லாமல் போய்விட் டதோ என்று நக்கலாய் கண்சிமிட்டிக் கேட்கிறீர்கள்.

இது வனமா இல்லையா என்று முடிந்தால்

இக்கணமோ எக்கணமோ உங்கள் மனசாட்சியிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்றவாறு . விடைபெற்றுக் கொள்கிறேன்.