அழுத்தியது யார்?

கோவர்தனா

கரும் மை இட்டு கடமையாற்ற சென்றவனே

மறைக்காமல் சொல்

நடந்தது என்ன?

அந்த மறைவுக்குள்

அசைவின்றி கிடந்த

அந்த இயந்திரத்தின் விசையை

அழுத்தியது யார்?

வாக்கை விற்று

இல்லை இல்லை

உன்னை விற்று

நீ ஈட்டிய

பணமா?

பன்னுக்கும் உதவாது

மண்ணுக்குள் புதையாது

உயிரை உறிஞ்சும்

மதமா?

அஃறிணையும் பரிகசிக்கும்

பெருமையென நீ நினைக்கும்

சாதியத்தின் பலமா?

பால்குடித்து வளர்ந்த கதை

மறந்துவிட்டு

பால் பொருத்து மலர்ந்த

பேத மொட்டு

பரப்பிய மணமா?

மேனி முதல் மொழி வரை

படிந்திருக்கும் இரத்தக்கரை

காய்ந்திடாமல் காக்கும்

இழவெடுக்கும் இனமா?

பத்துபேரிடம் கணித்து

மொத்த ஊரின் கருத்து

இதுவென்றே திணித்து

ஊடகங்கள் அழுத்திவிட்டதா?

ஊகங்கள் ஊடாக

வறுமைக் கோட்டை வாழவைக்கும்

வள்ளல்களிடம் கொடைபெற்று

கடை விரிக்கும் கட்சிகள்

வாரிகொடுத்த

இலவசம் அழுத்திவிட்டதா?

இலேசாக

நிற்பவரின் தகுதிகளை ஒதுக்கி

சிற்றறிவை அப்படியே முடக்கி

வெற்று சின்னம்

அழுத்திவிட்டதா முற்றாக?

சரி விடு.

நீ தான் அழுத்தினாய்

விசையை.

அழுத்தியது யார்?

உன்னை…

-கோவர்தனா

Series Navigationதொடுவானம் 200. நாடக அரங்கேற்றம்ஒரு தமிழ்ச்சிறுகதை; ஒரு வாசிப்புணர்வு..