அவன் அவள் அது – 12

Spread the love

( 12 )

      அடுத்த இரண்டாவது நாள் கண்ணனும், சுமதியும் நேருக்கு நேர் சந்திக்கத்தான் செய்தார்கள்.

நடந்தது எல்லாவற்றையும் சொல்லியிருப்பாளோ என்ற பயத்தில் அவளை நேரே காணக் கூசியவனாய்த் தயங்கி நின்றான் கண்ணன்.

கண நேரத்தில் ஏற்பட்ட அந்தத் தவறுக்காக என்னை நீ மன்னிச்சிடு. இனி ஜென்மத்துக்கும் அம்மாதிரி ஒண்ணும் நடக்காது. இது சத்தியம்….

அழாத குறையாய் அவளது விழிகளோடு கெஞ்சினான் கண்ணன்.

உங்களோட சரியும், தவறும் என்னோடுதான். மூன்றாவது நபருக்கு அதைத் தெரிய விடமாட்டேன். நீங்க செய்த தவறை உணர்ந்து என்கிட்டே ஏற்கனவே மன்னிப்புக் கேட்ட பிறகும் நான் உங்களை விட்டுப் பிரிஞ்சது தப்புதான். அதுக்காக நீங்க இப்போ என்னை மன்னிக்கணும். அந்த மாதிரி ஒரு தவறுக்கு உங்களைத் தூண்டின அந்த உணர்வுக்கு ஏதோவொரு விதத்திலே நானும் காரணம்னுதான் நினைக்கிறேன். நமக்குள்ளெ ஏற்பட்ட இந்தப் பிரிவு இத்தோட முடியட்டும்…

பதிலுக்கு சுமதியின் உணர்வுகள் இப்படிப் பேசிய அதே நேரத்தில்,

பேருந்து நிலையத்தில் சந்தித்துக் கொண்ட சேதுராமனும், பத்மநாபனும் வேலைக்காரி ராஜாத்தி மூலம் அந்த ஆதிமூல உண்மைக் காரணத்தைத் தெரிந்து அதிர்ந்தனர்.

ஐயா, எனக்கு வேலை போயிட்டதைப் பத்திக்கூட நான் கவலைப்படலிங்க. அவுக ரெண்ட பேரையும் சேர்த்து வச்சீங்க பாருங்க…அது போதும் எனக்கு. உங்களுக்குக் கோடிப் புண்ணியம் கிடைக்கட்டும். ஏதோவொரு வேகத்துலே என்கிட்டே தப்பா நடக்க அவரு வந்திட்டாரு. நெசந்தான். அன்னைக்கு நானும் ஒரு மாதிரித்தேன் இருந்தேன். ஆனா வந்த வேகத்துலயே அந்தத் தப்பை உணரவும் செய்திட்டாரு. அவரு ஒழுக்கமான பிள்ளைங்கிறதுக்கு அதுவே சாட்சிங்கய்யா. மனுஷங்க தவர்றது சகஜம்தானேங்கய்யா…அதுக்காக அவுகள ஒரேயடியா ஒதுக்கிட முடியுமா? அப்புறம் ஒருத்தர் கூட மிஞ்ச மாட்டாங்கய்யா இந்த உலகத்துல…அன்னைக்க அம்மா கூட அதைப் பார்க்கலைங்கய்யா…ஆனாலும் செய்த தவறைக் கட்டின பெண்டாட்டி கிட்ட சொல்லி மன்னிப்புக் கேட்டிருக்காரு பாருங்க…அதுதாங்க பெரிசு. யாராச்சும் செய்வாங்களா? அந்த அய்யா தங்கம்ங்கிறதுக்கு இதவிட வேறென்னங்க வேணும். ரெண்டு பேருமே புடம் போட்ட தங்கம்தானுங்க…ஏதோ கெட்ட நேரம்…இப்படி ஆயிடுச்சி…இந்தக் கிறுக்கச்சியத்தான் நாலு போடு போடணும்…நல்லபடியா முடிஞ்சிச்சே…அதுவே போதும் எனக்கு. எல்லாம் அந்த மாரியாத்தா புண்ணியம்… – சொல்லிக் கொண்டே கண்களைத் துடைத்துக் கொண்டு கையை உயர்த்தி பெரிய கும்பிடாகப் போட்டாள் வேலைக்காரி ராஜாத்தி.

ஆதிமூல அதிர்ஷ்டானக் கருவைப் புரிந்து கொள்ளாமல் பிரச்னையைத் தீர்த்து வைத்து விட்டதாக நினைத்துப் புறப்பட்டு வந்திருந்த இந்த இரு பெரிசுகளும், ஓ…! தப்பு…தப்பு… இரு பெரியவர்களும் வேலைக்காரி ராஜாத்தி சொன்ன இந்தப் புதிய காரணத்தை அறிந்து பிரமித்துப் போய் மேற்கொண்டு பேசவொண்ணாது வாய் பிளந்து நின்று கொண்டிருந்தனர்.

*************************************

 

Series Navigationஇஸ்லாமிய சீர்திருத்தத்தை ஏன் ஆதரிக்க வேண்டும்?அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம்