அவர் நாண நன்னயம்

This entry is part 20 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012
முகில் தினகரன்
நீண்ட யோசிப்பிற்குப் பின் கிருஷ்ணன் அந்த யோசனையைக் கூற, சற்றும் தயக்கமின்றி அதை முழு மனதோடு ஆமோதித்தாள் பார்வதி. ‘நானே சொல்லலாம்ன்னு இருந்தேங்க….நீங்களே  சொல்லிட்டீங்க…ரொம்ப சந்தோஷம்…தாராளமாச் செய்யலாம்” என்றாள்.

‘ஆமாம் பார்வதி…..விதி அரக்கன் தன்னோட அகோர பசிக்கு நம்ம மகனோட உயிரை எடுத்துக்கிட்டான்…நாம அதையே நினைச்சு…நினைச்சு…உருகி…மருகிக் கெடக்கறத விட…நம்மோட அன்பையும் பாசத்தையும் கொட்டறதுக்காக…நம்மோட வயோதிக காலத்துல நமக்குன்னு ஒரு துணை தேவைப்படும்கறதுக்காக…முக்கியமா நாம இப்ப அனுபவிச்சிட்டிருக்கிற இந்த புத்திர சோகத்திலிருந்து விடுபட…ஒரு அனாதைக் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம்னு இருக்கேன்…”

‘ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இங்க நடந்த இந்து முஸ்லீம் கலவரத்தப்ப…சம்மந்தமேயில்லாம தெருவுல நடந்து வந்திட்டிருந்த நம்ம மகனை…அந்த ‘சம்சுதீன்”கற முஸ்லீம் ஆளு வெட்டிச் சாய்ச்சானே அப்ப நம்ம மகன் துடிச்ச துடிப்பை இப்ப நெனைச்சாலும்  என் நெஞ்சே வெழச்சிடும் போலிருக்குங்க….”

பார்வதியின் மனத்திரையில் தன் மகனின் பிணக்கோலம் வந்து போக ஆற்ற மாட்டாமல் அழுதே விட்டாள்.

ஆறிப் போயிருந்த அவள் மனக் காயத்தை நாமே தூண்டி விட்டுட்டோமே…என்று நொந்து போன கிருஷ்ணன் ஈஸி சேரிலிருந்து எழுந்து வந்து தரையில் அமர்ந்திருந்த அவளை நெருங்கி தோளைத் தொட்டுத் திருப்பி கன்னங்களில் வழிந்தோடிய நீரைத் துடைத்தார்.

‘கவலைப் படாதே பார்வதி….நாம தத்தெடுக்கப் போற குழந்தை நம்ம மகன் மூர்த்தியா இந்த வீட்டுல துள்ளி விளையாடி…உன்னோட வேதனையை மொத்தமா மறக்கச் செய்யும்…நம்பு.”

கணவரின் ஆறுதல் வார்த்தைகள் அவளை ஓரளவிற்குத் தற்காலிகமாக சமாதானப்படுத்தினாலும் அடிமனது ஆண்டவனை நோக்கிக் குமுறியது. ‘ஆண்டவா…நான் என்ன பாவம் செய்தேன்னு என்னை இப்படிச் சோதிக்கறே?…ஆரம்பத்துல நீண்ட காலம் குழந்தை வரம் தராம சோதிச்சே…அப்புறம்…குடுத்த குழந்தையை பன்னிரெண்டு வருஷத்துல நீயே திருப்பி எடுத்துக்கிட்டே…அது மட்டுமில்லாம…இனிமே குழந்தையே பிறக்காது என்கிற மாதிரியான ஒரு கர்ப்பக் கோளாறையும் எனக்கு வெச்சிட்டே…ஏன்?…ஏன் எனக்கு மட்டும் இப்படி?”

மறுநாள.;   காலை பத்து மணி.

கிருஷ்ணனும் பார்வதியம் அந்த அனாதை இல்லத்தின் வாசலில் நின்றிருந்தனர்.  அவர்களை இறக்கி விட்ட ஆட்டோ புகை கக்கியபடி மறைந்ததும் இருவரும் அந்த இல்லத்தின் பெரிய கேட்டினுள் நுழைந்து ‘அலுவலகம்” என்ற பெயர் தாங்கியிருந்த அறையை நோக்கி நடந்தனர்.

குனிந்து எதையோ எழுதிக் கொண்டிருந்த ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி இவர்களின் காலடி சத்தத்தில் நிமிர்ந்து ‘நீங்க?,”

‘நாங்க .ஆப்ரஹாம் அய்யாவைப் பார்க்கணும்..”

‘அப்படியா,….உட்காருங்க…              ” அவர்களை நாற்காலியில் அமரச் சொல்லிவிட்டு இண்டர்காமில் யாருடனோ பேசினாள் அப்பெண்மணி.

ஐந்தே நிமிடத்தில் வேகவேகமாக வந்த அந்த ஆப்ரஹாம் ‘வாங்க மிஸ்டர் அண்ட் மிஸஸ் கிருஷ்ணன்..”என இன்முகத்துடன் அவர்களை வரவேற்று விட்டு அப்பெண்மணியின் பக்கம் திரும்பி ‘சிஸ்டர்…நான் சொல்லியிருந்தேனே…குர்ந்தையைத் தத்தெடுக்க வர்றாங்கன்னு… ”

‘ஓ…இவங்கதானா அது?….வாங்க சார்…வாங்க மேடம்…”

‘ம்ம்…சிஸ்டர்….ரெண்டு மாசத்துக்கு முன்னாடி வந்து சேர்ந்த…அந்தச் சிறுவனைக் கூட்டிட்டு வந்து இவங்களுக்கு காட்டறீங்களா?”

‘கண்டிப்பா சார்.” என்றபடி எழுந்து சென்ற அப்பெண் சில நிமிடங்களில் திரும்பி வந்தாள். உடன் ஒரு சிறுவன்.

சிவந்த களையான முகத்தில் ஒரு வித நிரந்தர சோகமும்….அச்சமும் படர்ந்திருந்தது.  மேலும் அங்கிருந்தோரை மிரட்சியுடன் அவன் பார்த்த பார்வை பரிதாபத்தையும்…பாச உணர்ச்சியையும் ஏற்படுத்தி விட பார்வதி அவனை அருகில் அழைத்தாள்.  அவன் மலங்க மலங்க விழித்தபடியே வர,

‘ராசுக்குட்டி…..உன் பேரென்ன?” அவன் தலை முடியை விரல்களால் கோதியபடியே கேட்டாள்.

சிறுவனோ பதிலேதும் பேசாமல் பார்வதியின் முகத்தையே பரிதாபமாய் ஊடுருவிப் பார்த்தவாறு நின்றிருந்தான்.

‘அடடே…பயப்படக் கூடாது…இங்க வா…” கிருஷ்ணன் சிறுவனைத் தன்னருகில் அழைக்க அவன் மேலும் அச்சமுற்று பின் வாங்கினான்.

‘சார்….பையன் பயப்படறதுக்கும் ஒரு காரணமிருக்கு…அதை அப்புறம் சொல்றேன்…” என்றவர் அப்பெண்மணியிடம் ‘சிஸ்டர்…நீங்க பையனை ரூமுக்குக் கூட்டிட்டுப் போங்க” என்றார்.

பையன் அங்கிருந்து நகர்ந்ததும் ‘சொல்லுங்க மிஸ் அண்ட் மிஸ்டர் கிருஷ்ணன்…இந்தப் பையனை உங்களுக்குப் பிடிச்சிருக்கா?…”

கிருஷ்ணன் பார்வதியின் முகத்தைப் பார்க்க, அவள் கிருஷ்ணனின் முகத்தைப் பார்த்தாள்.

‘இப்படி ரெண்டு பேரும் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்தா எப்படி?,” ஆப்ரஹாம் சிரித்தபடி கேட்க,

‘எங்களுக்கு இந்தப் பையனைப் பிடிச்சிருக்கு…நாங்க இவனையே தத்தெடுத்துக்கறோம்…” கணவனும் மனைவியும் கோரஸாகச் சொல்ல,

மகிழ்ந்து போனார் ஆப்ரஹாம்.

‘ரொம்ப சந்தோஷம் மிஸ்டர் கிருஷ்ணன்….நீங்க ஓ.கே.ன்னு சொன்ன பிறகு அந்தப் பையன் பற்றி நான் சொல்லியே ஆகணும்…அவன் சோகத்துக்கும் ஒரு காரணமிருக்குன்னு சொன்னேனே…அது என்னன்னா….நாலு மாசத்துக்கு முன்னாடி நடந்த ஒரு விபத்துல இவன் தாய் தந்தை ரெண்டு பேருமே இவன் கண் முன்னாடியே ஒரு சேர இறந்துட்டாங்க..”

‘த்சொ…த்சொ..” பார்வதி அங்கலாய்க்க,

‘அதை விடப் பெரிய சோகம்….பெத்தவங்களை இழந்திட்டு அனாதையா நின்ன இவனுக்கு உதவி செய்ய இவனோட உறவினர்கள் யாருமே முன் வராததுதான்”

‘அடப்பாவமே” இது கிருஷ்ணன்.

‘காரணம்….இவனோட அப்பன்காரன்….உயிரோட இருந்த காலத்துல உறவுக்காரங்க யாரையுமே மதிக்காம…ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி…அட்டகாசம் பண்ணி….அடிதடி…சண்டை…கலவரம் எல்லாத்திலேயம் ஈடுபட்டு எல்லார்கிட்டேயும் ஒரு வெறுப்பையே சம்பாரிச்சு வெச்சிருந்தான்…அது இப்ப பையனைப் பாதிக்குது…”

ஒரு சிறிய அமைதிக்குப் பின் கிருஷ்ணன் மெல்லக் கேட்டார் ‘பையன் பேரு?”

‘ரியாஸ்…முகமது ரியாஸ்…”

‘என்னது…ரியாஸா?….அப்படின்னா முஸ்லீமா?” விருட்டென்று கேட்டாள் பார்வதி.

‘ஆமாம்….ஏன்?”

‘அய்யோ…வேண்டாம்டா சாமி…என் மகன் சாவுக்கு காரணமாயிருந்தது அந்த மதத்துக்காரன்தான்…’சம்சுதீன்’கற பாவி…கதறக் கதற என் மகனை வெட்டிக் கூறு போட்ட அந்த மதத்துக்காரங்களோட சங்காத்தமே வேண்டாம்…” கையெடுத்துக் கும்பிட்டு விட்டு வாசலை நோக்கித் திரும்பினாள் பார்வதி.

‘கொஞ்சம் நில்லுங்கம்மா…நீங்க எந்த சம்சுதீனைச் சொல்றீங்க?…லாரிப்பேட்டை சம்சுதீனா?”

‘ஆமாம்….அந்தப் பாவியேதான்…”

‘ஓ…ஜீசஸ்….” என்றபடி ஒரு நிமிடம் கண்களை மூடி நெஞ்சுப் பகுதியில் சிலுவைக் குறியிட்டுப் பிரார்த்தனை செய்த ஆப்ரஹாம் மெல்லக் கண் திறந்து ‘அந்த லாரிப் பேட்டை சம்சுதீனோட மகன்தான் இந்தச் சிறுவன்..” என்றார்.

‘அப்ப…அந்தப் படுபாவி சம்சுதீன் செத்துட்டானா?….”சந்தோஷமாய்க் கேட்ட பார்வதி கணவன் அருகே சென்று ‘பாத்தீங்களா…எம்மகனை வெட்டிக் கொன்ற அந்தப் பாவிக்கு ஆண்டவனே தண்டனை குடுத்துட்டான் பாத்தீங்களா?”

சூழ்நிலையைத் தெளிவாய்ப் புரிந்து கொண்ட ஆப்ரஹாம் இனி இவர்கள் அச்சிறுவனை தத்தெடுக்கப் போவதில்லை என உறுதியாய் முடிவெடுத்து ‘சரி மிஸ்டர் கிருஷ்ணன்;…நீங்க இன்னும் கொஞச நாள் வெய்ட் பண்ணுங்க…வேற நல்ல குழந்தையா வரும் போது நானே சொல்லி அனுப்பறேன்..” என்றார்.

‘ஏன்…இந்தப் பையனுக்கு என்ன? நல்லாத்தானே இருக்கான்?,” கிருஷ்ணன் சொல்ல கணவனை விநோதமாய்ப் பார்த்தாள் பார்வதி.

‘என்னங்க இப்படிக் கேக்கறீங்க?….நம்ம மகனைக் கொன்னவனோட புள்ளைங்க இது… இதை எப்படிங்க…நாம…?”

சில நிமிடங்கள் அமைதி காத்த கிருஷ்ணன் நிதானமாய்ப் பேசினார் ‘பார்வதி நானும் நீயும் படிச்சவங்க..நடைமுறை வாழ்க்கையோட யதார்த்தங்களைப் புரிஞ்சவங்க…எல்லாத்தையும் இயல்பா எடுத்துக்கற ஒரு மனப் பக்குவத்தை பெற்றவங்க…நாமே இப்படிப் பேசலாமா?…வள்ளுவன் சொன்னதை மறந்திட்டியா?.’இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்” ன்னு அற்புதமாச் சொல்லியிருக்காரே!”

தூரத்தில் மசூதியின் முகட்டிலிருந்து படபடத்துக் கிளம்பிய புறாவொன்று போகிற போக்கில் சர்ச் மணியில் சத்தம் ஏற்படுத்திவிட்டு கோயில் கோபரத்தின மேல் சாந்தமாய் அமர்ந்தது.

அந்த மணியோசை காற்றில் மிதந்து வந்து பார்வதியின் செவிக்குள் நுழைய, சிலிர்த்தது அவள் உடம்பு.

சில விநாடி அமைதிக்குப் பின், ‘ஏங்க…நாம நம்ம மகனை இன்னிக்கே கூட்டிட்டுப் போகலாமான்னு கேளுங்க..” பார்வதி புன்னகையடன் சொல்ல,

‘பார்வதி….நீ…நம்ம மகன்னு சொல்றது?.,”

‘ரியாஸை…முகமது ரியாஸை!”

ஆப்ரஹாம்  முகம் மலர்ந்து ‘தாராளமா…இன்னிக்கே கூட்டிட்டுப் போகலாம்” என்றார்.

அந்தக் கோயில் புறா ‘பட..பட”வெனச் சிறகடித்து தன் நன்றியைக் கூறியது.

(முற்றும்)

Series Navigationசதாசிவம் மதன் “உயிரோவியம்” கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்புஎம்.சி. சபருள்ளா “வியர்த்தொழுகும் மழைப்பொழுது” கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *