ஆசை துறந்த செயல் ஒன்று

“ ஸ்ரீ: “

 

 

ஆஸ்பத்திரி வாசலில் பிள்ளையார்

அனிச்சையாய் நின்றன அவனின் கால்கள்

என்ன வேண்டிக் கொள்வது….

குழந்தைகள் படிப்பில் சிறந்திடவும்

மனைவியின் பதவி உயர்வுக்கும்

தன்னுடைய பதவி இறங்காமலிருக்கவும்

பாதி கட்டிய வீடு பங்களாவாகவும்

பேங்க் லோன் முழுவதும் திருப்பி அடைக்கவும்

வேண்டிய அளவு வேண்டிக்கொண்டாயிற்று;

நிறைவேறக் கொஞ்சம் நேரம் பிடித்தாலும்

வேண்டுவது கொஞ்சமும் குறைந்த பாடில்லை.

இன்றைய வேண்டுதல் ஒன்று இருக்கிறது –

என்னவென்று வேண்டிக் கொள்ள

என்பதுதான் புரியவில்லை;

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்டிருக்கும்

ஆயிரம் பிறை கண்ட அம்மாவை

வேண்டாத சுமையாக எண்ணி

வீட்டில் எல்லோரும் வெறுக்கத் தொடங்கியாச்சு

இருமலைக் கேட்கவும் சளியைத் துடைக்கவும்

கழுவுகளைச் சேகரித்துக் கக்கூஸில் கொட்டவும்

முகம் சுளிக்காமல் மௌனமாய்ச் செய்ய

யாருக்கும் முடியவில்லை, பிடிக்கவுமில்லை;

உயிர் பிழைத்தால் சந்தோஷம்தான்;

ஆஸ்பத்திரியிலேயே போய்விட்டால்

அதைவிடவும் சந்தோஷம்தான்;

ஆஸ்பத்திரி வாசல் பிள்ளையாரிடம்

அம்மாவுக்காக எதை வேண்ட….

இத்தனை நாள் படிக்காத கீதை

இப்போது மகன் நெஞ்சில் இடம்பிடித்தது….

விருப்பு வெறுப்பற்றுக் கிளம்புகிறது வேண்டுதல் –

“விருப்பப்படி செய் பிள்ளையாரப்பா….!”

ஏற்றிய சூடம் ‘ததாஸ்து’ என்று தலையசைக்கிறது.

**** **** **** ****

 

Series Navigation