ஆணவம்

‘மின்னலுக்கும்
கால்கள் பின்னும்
என் வேகம் பார்த்து
வேகத்தில் என்னை
வெல்பவன் எவன்?’

சூளுரைத்தார் முயலார்
சிரம் தாழ்த்தின
சில்லரை மிருகங்கள்
சிரம் உயர்த்திச்
சொன்னார் ஆமையார்

‘நான் வெல்வேன்’

‘கவிழ்த்துப் போட்ட
கொட்டாங்கச்சியே
போட்டி எறும்போடல்ல
என்னோடு.’

‘தெரியும்
நாளையே நடக்கட்டும் போட்டி
ஆனால் ஆனால்
போட்டி நிலத்திலல்ல நீரில்’

‘ஆ! நீரிலா?’

‘ஆம்
நிலமென்று நீர் சொல்லவில்லை
நீர் என்று நான் சொல்கிறேன்’

கரவொலித்தன மிருகங்கள்
ஆமோதித்தனர் ஆமையாரை

‘தயாராகு. இல்லையேல் தவிடாவாய்.’

மொத்த மிருகங்களும் மிரட்டின
முயலை நெருங்கின

ஆமையார் சொன்னார்.

‘பாறைகள் அஞ்சும்
என் பலம் கண்டு
நிலத்தில் நீ என்றால்
நீரில் நான்
முட்டாள் முயலே
இருபது ஆண்டு உன் ஆயுள்
இருநூறு என் ஆயுள்
சரணாகு இன்றேல் சாகு’

‘செருக்கால் கிறுக்கானேன்
அணைந்தது ஆணவத் தீ
ஆமையாரே சரணாகதி’

அமீதாம்மாள்

Series Navigationஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 16தேவ‌னும் சாத்தானும்