ஆண்டாள், அறிவீனம் வேண்டாள்…!

குமரன்

இச்சமூகம் மொத்தமுமே அறிவற்றும் நேர்மறை சிந்தனையற்றும் போய்விட்டதோ என்ற எண்ணம் தோன்றும் வண்ணம் நடந்தேறி வருகிறது “தமிழை ஆண்டாள்” தோற்றுவித்துக் கொண்டிருக்கும் விவாதங்கள்…இக்கட்டுரையை எழுதிய வைரமுத்து என் பார்வையில் சிறந்த பாடலாசிரியர். மலின வரிகளுக்கிடையிலும் சில மகத்தான வார்த்தை கோர்வைகளை அளித்தவர். ஓரளவுக்கு “ஜனரஞ்சக” கவிஞர். இதுவே, அவர் தன்னை நிறுத்த‌ வேண்டிய, நாம் அவரை பொருத்த வேண்டிய, இடம். இதை விடுத்து, அவரை இலக்கியவாதி என நோக்குவதில் துவங்குகிறது நம் அறிவீனம்.

எதற்காக நாம் இலக்கியத்தை நாடுகிறோமோ அதைத்தான் இலக்கியம் தரும். எனவே தான் எண்ணற்ற பரிமாணங்களை அடைத்து படைக்கப்பட்டிருக்கின்றன அவற்றின் அமைப்பும் ஆக்கமும். வைரமுத்து இலக்கியங்களை திறம்பட வாசித்திருப்பவர் என்றே வைத்துக் கொள்வோம். இருப்பினும், அதில் தென்படும் “சரக்கை” தன் பாடல்களிலும் கவிதைகளிலும் பயன்படுத்தும் பொருட்டு அதில் லயித்திருப்பார் எனின், அவர் இலக்கியத்தின் வழி பெறும் “பொருளும்” அப்படித்தான் இருக்கும். திரைப்பாடல் என்றாலே புறந்தள்ளத் தக்கவை எனக் கொள்ளுதலும் ஆகாது. அது நம்மை எவ்விதத்தில் அடுத்த கட்டத்திற்கு முன்னகர்த்துகிறது என்பதை பொறுத்தாக அமைய வேண்டும் அதன் நிராகரிப்பு. அந்த அடுத்த கட்டத்திற்கான வாயிலை கண்டடைய வேண்டியதும் நாமே.

கண்ணதாசனும் திரைப்பட பாடலாசிரியர் தான். அவர் பார்த்த ஆண்டாள் வேறு.

“சூடிக் கொடுத்தாள் பாவை ப‌டித்தாள்
சுட‌ராக எந்நாளும் தமிழ் வானில் ஜொலித்தாள்
கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்
கோபால‌ன் இல்லாம‌ல் க‌ல்யாண‌ம் வேண்டாள்”

என்று நான்கு வரியில் ஆண்டாளை நச்சென சொன்னார். நம் விழைவின் தீவிரத்தை பொறுத்து, இந்த திரைப்பாடலில் கிடைக்கும் ஆண்டாளின் அறிமுகம் நாச்சியார் திருமொழி வரைக்கும் கூட நம்மை அழைத்துச் செல்லும். ஆனால் நாமோ, வைரமுத்துவின் கட்டுரைத் தலைப்பு இங்கிருந்து உருவப்பட்டிருப்பது போன்ற சில்லறைத் தனமான வாதங்களில் நேரத்தை வீணடிக்கிறோம்…

ஒரு சினிமா பாடலாசிரியரை, பக்தி இலக்கியத்திற்கு ஒவ்வாத ஒருவரை, அதன் மேன்மை குறித்து உரையாற்ற அழைக்கும் அளவுக்கு இருக்கும் முன்யோசனை அற்ற ஊடகங்களும், அத்தகையனவற்றை “பாரம்பரியம் மிக்க ஊடகங்கள்” என்று ஏற்றுக் கொண்டிருக்கும் நாமும், அடுத்த அறிவீனம். வலை முழுவதும் ஆதரவும் எதிர்ப்புமாய் எத்தனை ஏச்சுக்கள்…அவற்றில் “பக்தி இலக்கியம்” வாசித்த பக்குவம் இருக்கிறதா என்று தேடிப்பார்க்க வேண்டியிருக்கிறது. அதாவது, வைரமுத்து மட்டும் நுனிப்புல் மேயவில்லை. நாம் அனைவருமே அப்படித்தான் இருக்கிறோம். இதற்கு ஒரு எடுத்துக் காட்டு, அனைவருமே தேர்ந்தெடுக்கும் பாடல்களை கவனித்தால் நகைப்பாய் இருக்கிறது. இவர்களின் கண்ணில் “முலை”களும் “கொங்கை”களும் மட்டுமே தட்டுப்படுகின்றன. பக்தி மரபு, ஞான மரபு போன்றவற்றை தாங்கி வரும் இலக்கியங்களில் அதை படைத்தவர் ஓட்டும் உணர்வுத் தேரில் அச்சாணியாய் இருக்கும் பாவம் சார்ந்த கருப்பொருளை இவர்கள் கண்டது இல்லை என்பது தின்னம். திரைப்பாடல் மற்றும் அதன் காட்சிகளில் காட்டப்படும் “தொடை” நயத்திற்கும், பக்தி இலக்கியம் காட்டும் பாவங்களுக்கும் வேறுபாடு உண்டென்று உணரும் வகையிலா நாம் சமூகத்தை செம்மைப்படுத்தியிருக்கிறோம்? வானில் பறக்கும் வண்ணப்பறவையின் பிம்பத்தை சேற்று நீரில் பார்த்து அது சேறு வாழ் பறவை என்று கூறுவது எத்தனை அறிவீனமோ அதை ஒத்தது, ஆண்டாளின் வேட்கையை காமம் என்று பொருள் கொள்வது…நம் இருப்பும் விருப்பும் சேற்றின் மீதா வானின் மீதா என்பதைப் பொறுத்ததே இது. “யாழ்பாணம் யானைத் தந்த”த்திற்கும் “முலையெழுந்தார்”ருக்கும் இடையில் உள்ள விட்டு விடுதலையாதலின் பொருட்டான முதிர்ச்சியின் தொலைவு வெகு அதிகமல்லவா?

மலினங்கள் மட்டுமே எளிதில் பிரபலமாகும் திருநாட்டில் இத்தகைய கற்பிதங்களும் அதை பரப்புவதும் முளையிலேயெ கிள்ளி எறியப்படவேண்டும். இல்லையெனில் இன்னும் சில ஆண்டுகளில் சித்தர் பாடல்களுக்குக் கூட சிருங்கார விளக்கவுரைகளை தமிழ் கூறும் நல்லுலகம் பெறும் பேராபத்து நிகழக்கூடும். எனவே வைரமுத்துவின் கட்டுரைக்கு, எந்தச் சொல்லுக்கு எந்தக் காலத்தில் எந்தப் பொருள், ஆய்வுக் கட்டுரையா ஆன்மீகக் கட்டுரையா மேற்கோளா செயற்கைகோளா என்பது போன்ற வெட்டிப் பேச்சுக்களில் இறங்காமல், கடுமையான கண்டனங்களை நாம் தெரிவித்தாக வேண்டும்.

ஆனால், இதைவிட அதிகப்படியான கண்டனம் சென்றடைய வேண்டியது ராஜாவுக்கு. அதிர்ச்சியளிக்கும் சொல்லாடலை, பொதுவெளியில், இச்சிக்கலுக்கு சற்றும் சம்பந்தமில்லாத வைரமுத்துவின் உறவுகளை உள்ளிழுத்துப் பேசி, மெல்ல மத விரோதத்தை நுழைத்து…முள்ளை முள்ளால் எடுக்கத்தான் தமிழ் கற்றுக் கொடுத்திருக்கிறது. மலத்தை மலத்தால் அல்ல. இப்படிப்பட்ட பேச்சை பலர் பாராட்டியும் ஊக்குவித்தும் வருவதும் வருந்துதலுக்குரியது.

ஆனால் என் செய்ய?

கவிப்பேரரசுகளுக்கும் கள அரசியலுக்கும் நடுவில் அம்போவென விடப்படுவது இலக்கியம் மட்டுமல்ல. நாமும் தான். “பாடவா ஒரு பாசுரம் நீதானே என் ஸ்வரம்” என்று பாடிக்கொண்டே மரத்தை சுற்றி ஓடும் நாயகனும் நாயகியும் காட்டுவது தான் நமக்குத் தெரிந்த இலக்கியம். இந்த லட்சணத்தில், படித்துணரவே பல பிறப்புகள் தேவைப்படக்கூடிய‌ பழந்தமிழ் இலக்கியத்தை “ஆய்வு” செய்யும் செய்யும் தகுதி இன்றளவில் நம்மில் எவருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. உண்மையில் சொல்வதானால், எவ்வித சார்புத்தன்மையுமின்றி இலக்கிய ஆய்வில் இறங்குபவர்களை, தங்களின் அக ஆய்வுக்கு இழுத்துச் செல்லும் ஆழமும் வலிமையும் இலக்கியத்திற்குண்டு. எனவே தான் அத்தகையவர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள் பரபரப்புக்குத் தீனி போடாமல் பக்குவமாய் இருக்கிறது. அதனால் தானோ என்னவோ அவர்களும் அத்தகைய கருத்துக்களும் சீண்டுவாரின்றி ஓரமாய் கிடக்க அர்த்தமற்ற கூச்சல்கள் மட்டுமே மேடைகளில் கேட்கின்றன.

நம்மால் ஆக வேண்டியதும் நான் அடைய வேண்டியதும் ஒன்றே. பக்தி மார்க்கத்தில் திளைப்பவரோ நாத்திகத்தின் வழி நடப்பவரோ…இங்கேயே தோன்றியவரோ எங்கிருந்தோ வந்தவரோ..கருப்போ சிவப்போ வெளுப்போ…யாதொரு நிறமோ…சாதியோ…தமிழ் என்னும் தொல்மொழியை வாசிக்கும் பேறு நம் நாக்கிற்கு வாய்த்திருக்கிறது. நம் ஆயுளுக்குள் அடங்காத அதன் இலக்கியப் புதையல்களை இதுவரை பார்த்திரா விடினும் இன்று முதல் தொடவேனும் எத்தனிப்போம். அப்போது தான் நுனிப்புல் மேய்வோரையும் அப்புல்லையும் பார்த்திராமல் மேய்பவரை எதிர்ப்போரையும் அடையாளம் கண்டு இருவரையுமே ஒதுக்கி வைக்க இயலும். வடிவேலு மொழியில் சுருங்கச் சொன்னால், “படிக்க வைங்கப்பா சும்மா கப்பித் தனமா பேசிகிட்டு…”

Series Navigationதொண்டிப் பத்துமாட்டுப்பால் மூலம் எலும்புக்கு தேவையான சுண்ணாம்பு சத்து (கால்சியம்) கிடைக்கிறதா?