வைரமுத்து எழுதிய “தமிழை ஆண்டாள் கட்டுரை தினமணி [08-01-18] இல் படித்தேன்.
நம்பிக்கையில்தான் ஒவ்வொருவரும் வாழ்வை நடத்தி வருகிறோம். அதன் அடிப்படையில் ஆண்டாள் கூறும் செய்தியாக நம்பிக்கை மீது நம்பிக்கை வைப்போம் என அவர் கட்டுரையைச் சிறப்பாகவே முடித்துள்ளார். ஆனால் இறைவனையும் இயற்கை இறந்த நிகழ்வுகளையும் கழித்துப் பார்க்க வேண்டும் என்கிறார். ஒரு நூலை அது எழுந்த காலத்தின் சூழலை வைத்துத்தான் ஆராய்ந்து பார்க்க வேண்டும் இப்போதைய கண்ணாடியை அணிந்து பார்த்தல் தகாது. நாலாயிரத் திவ்யபிரபந்த்த்தின் ஒருகூறான திருப்பாவையை இறைவனைக் கழித்து எப்படிப் பார்க்க முடியும். அஃது இறைவனைப் பற்றிப் போற்றுவது எனத் தெரிந்துதானே பேசத் துணிந்தார்.
அதுபோல ”கல்லான கடவுளே கண்ணனாகினான்” என்ற சொற்றொடரே பிழையானது. கல் என்று கடவுளைக் கருதும் போக்குடையவர் பக்தி நூல் பக்கமே வந்திருக்கக்கூடாது. அருமையான தமிழ் நூல் என்று பேச வந்தவர் கடவுள் பற்றிய கருத்தைச் சொல்லி அதை ஏற்க முடியாது எனப் புண்படுத்துகிறார். ஆண்டாள் எழுதி உள்ள தமிழ் இயற்கை வருணனைகள், அழகு தமிழ்ச்சொற்கள் நல்ல யாப்பமைதி போன்றவற்றைப் புலப்படுத்துவதோடு நிறுத்திக் கொண்டிருக்க வேண்டும்.
உயிரியல், வாழ்வியல், சமூகவியல் ஆகியவற்றைப் பாவை நோன்பு முன் நிறுத்துவதாக அவர் கூறுவது பாராட்டத்தக்கது. ஆனால் அக்கூற்றை நிலைநிறுத்த எந்தச் சான்றுகளையும் காட்டாதது பெருங்குறையாகும்.
”இறைவன் முன் எல்லாரும் சமம்” என்பது குறுகிய பரவசம் என்று ஓரிடத்தில் அவர் குறிப்பிடுகிறார். ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்களில் பல்வேறு வர்க்க சாதிவகைப்படவர்களைப் பார்க்கமுடிகிறதே! இறைப்பற்று என்னும் ஒரே நேர்க்கோடு அவர்களைக் கட்டிப்போட்டிருக்கிறதே. அவன் சன்னதியில் ஒன்றாகச் சமமாகத்தானே எல்லாரும் நிற்கிறார்கள். இக்காலத்தில் வேண்டுமானால் இன்னும் சேரிக்குள் தேர் வராமல் இருக்கலாம். ஆனால் திருப்பாணாழ்வாரைத் தன் அர்ச்சாவதாரத்திலேயே ஏற்றுக்கொண்டானே கடவுள். அதைக் கண்டு அந்தணரான உலோமசாரங்க முனிவர் பரவசம் அடைந்தாரே; அது குறுகிய பரவசமா?
கடவுள், தெய்வம் என்னும் இரு சொற்களுக்கும் பொருள் சொல்வதிலும் குழப்புகிறார். இரண்டுமே ஒரு பொருள் குறித்த சொற்கள்தாம்.க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி தெய்வம் என்பதற்குக்”கடவுள், இறைவன்” என்றுதான் பொறுள் கூறுகிறது [பக்:576].
”நம்மாழ்வாருடைய உணர்ச்சியின் பிரவாகம் யாப்புக்குள் தடுக்கி விழுகிறது” என்கிறார். இதை விட நம்மாழ்வாருக்கு இழுக்கு தரும் சொற்கள் இருக்க முடியாது. நம்மாழ்வார் தடுக்கிவிழும் எந்த இடம் என்று கூறி இருக்கலாமே? நம்மாழ்வாரையும் அவர் முழுதும் வாசிக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது. திருவாய்மொழியில் முதல் பாசுரத்தில் உள்ள ”துயரறு சுடரடி” என்பதில் உள்ள ஆழ்ந்த உணர்ச்சியை அனுபவிக்க அதனுடன் ஒன்றினால்தான் முடியும். திருவாய்மொழி முழுதுமே அந்தாதியாக எழுதி உள்ள மாமேதை அவர். வைரமுத்து இந்த இடத்தில், “திடீரென்று வைணவத்துக்கு மாறியவர் திருநீறு குழைத்துத் திருமண் இட்டுக்கொண்டதுபோல் என ஓர் உதாரணம் வேறு சொல்கிறார். அவருக்கு பக்தி நூல் பற்றி எழுதும்போது வேறு உதாரணமே கிடைக்கவில்லையா? இதன் மூலம் அவர் சைவம் வைணவம் இரண்டையுமே அவமதிக்கிறார்.
மேலும் ”ஆழ்வார் பாசுரமோ பெரும்பாலும் ஆற்றுப்படுத்துவது; ஆண்டாளுடையதோ ஐக்கியப்படுத்துவது” என்கிறார். ஆழ்வார் மற்றும் ஆண்டாள் பாசுரங்களுக்கு அவர் சொல்வதுபோல் வேற்றுமைகள் இல்லை. ஆற்றுப்படுத்தல் அதாவது வழிகாட்டுதல் மற்றும் ஐக்கியப்படுத்தல் அதாவது இறைவனிடம் சேர்தல் என்பவற்றை எல்லாப் பாசுரங்களிலும் காணலாம். ஆண்டாள் திருப்பாவை திருமாலிடம் ஐக்கியப்படுவதற்காகவே ஒவ்வொரு பெண்பிளையாக எழுப்பி ஆற்றுப்படுத்துவதேயாகும்.
”உரைகாரர்கள் இதற்கு வேறுபொருள் கூட்டித் தம் தீராப்புலமையின் திமிர் காட்டுவார்கள்” என் வைரமுத்து எழுதுவது பண்டைய நம் உரையாசிரியர்கள் அனைவரையுமே அவமானப்படுத்துவதாகும். சேனாவரையர், இளம்பூரணர், மணக்குடவர், காளிந்தியார் போன்ற உரையாசிரியர்களால்தாம் தமிழின் இலக்கண இலக்கிய வளங்கள் வெளித்தெரிந்தன் என்றால் அது மிகையாகாது. மேலும் வைணவத்தின் சிறப்பே அதற்கு வியாக்கியானம் எழுதிய உரையாசிரியர்கள்தாம். பெரியவாச்சான் பிள்ளை அவர்களை வியாக்கியான சக்கரவர்த்தி என்று தமிழ் கூறும் நல்லுலகம் புகழும். அவர் தொடங்கி அண்மையில் மறைந்த தி. வே. கோபாலையர் வரை வைணவம் மிக நீண்ட உரையாசிரியர்களைக் கொண்ட பாரம்பரியம் உடையது. ஈராயிரப்படி, ஆறாயிரப்படி, பன்னீராயிரப்படி, போன்ற உரைகள் புகழ் பெற்றவை.
வைரமுத்து, “கருப்பூரம் நாறுமோ” பாசுரத்திற்கு அதில் இல்லாதவற்றை உரையாக எழுதுவது எந்தத் திமிர் என்று கேட்கத் தோன்றுகிறதன்றோ? தான் மட்டும் இவ்வாறு எழுதலாம். கற்றுத்துறை போகிய உரையாசிரியர்கள் வேறு பொருள் கூறினால் அது அவர்தம் திமிரா?
ஆண்டாள் நாச்சியாருக்குக் கட்டுரையின் ஆகச் சிறந்த அவமதிப்பு என நான் எண்ணுவது அமெரிக்காவின் இண்டியானா பலகலைக்கழகம் வெளியிட்ட நூலில், “Andal was herself a devadasi who lived and died in the srirangam temple” என்று எழுதியிருப்பதைக் காட்டி இருப்பதாகும். ”பக்தர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்; ஆனாணாதிக்க எதிர்ப்பாளர்களும் சமய சமூக மறுப்பாளர்களும் இதை எண்ணிப்பார்ப்பார்கள்” என்கிறார். இவர்களில் தான் எந்த வகையைச் சேர்ந்தவர் என்பதை வெளிப்படையாகச் சொல்ல அவரை எது தடுத்ததோ யாம் அறியோம் பராபரமே!
ஆக மொத்தத்தில் ”தமிழை ஆண்டாள்” என்னும் கட்டு உரை ஆண்டாளின் தமிழ் நயத்தையும் முழுதாய்ச் சொல்லாமல் நாச்சியாரின் மதிப்பைக் குறைப்பதாகவே இருக்கிறது என்று துணிந்து சொல்லலாம்.
வளவ. துரையன்
கடலூர்
=====================================================================
- எனக்குரியவள் நீ !
- பி.கே. சிவகுமாரின் ”உள்ளுருகும் பனிச்சாலை” கவிதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வு
- தொண்டிப் பத்து
- ஆண்டாள், அறிவீனம் வேண்டாள்…!
- மாட்டுப்பால் மூலம் எலும்புக்கு தேவையான சுண்ணாம்பு சத்து (கால்சியம்) கிடைக்கிறதா?
- மதுவும் கல்லீரல் செயலிழப்பும்
- ஆண்டாள்
- மனித நேயம்
- ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்
- அவர்
- கதிரியக்கம் இல்லாத எதிர்கால அணுப் பிணைவு மின்சக்தி உற்பத்திக்குப் போரான் – ஹைடிரஜன் புதிய எரிக்கரு பயன்படும்
- தொடுவானம் 204. மகிழ்வான மருத்துவப் பணி
- கண்காட்சி
- கோதையும் குறிசொல்லிகளும்
- தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் – ஜனவரி மாதக்கூட்டம்
திருநீறு குழைத்துத் திருமண் இட்டுக்கொண்டதுபோல் என ஓர் உதாரணம் வேறு சொல்கிறார். அவருக்கு பக்தி நூல் பற்றி எழுதும்போது வேறு உதாரணமே கிடைக்கவில்லையா? இதன் மூலம் அவர் சைவம் வைணவம் இரண்டையுமே அவமதிக்கிறார். அவர் எழுதியது எனக்கு ஓர் ஐயப்பாட்டை எழுப்பி உள்ளது. திருநீறு என்பது சைவத்திற்குரியது, திருமண் என்பது வைணவத்திற்குரிநது. இரண்டும் குழப்பப்பட்டு உள்ளதே அடிப்படையே தெரியாத நிலையில் ஆய்வுக்கட்டுரை வேறு
//திருநீறு குழைத்துத் திருமண் இட்டுக்கொண்டதுபோல் என ஓர் உதாரணம் வேறு சொல்கிறார். அவருக்கு பக்தி நூல் பற்றி எழுதும்போது வேறு உதாரணமே கிடைக்கவில்லையா? இதன் மூலம் அவர் சைவம் வைணவம் இரண்டையுமே அவமதிக்கிறார். //
அவரின் கட்டுரையை தினமணி நீக்கிவிட்டதால், வேறெங்கும் தென்படாததால், நீங்கள் அவர் எழுதியதை ”திருநீறு குழைத்துத் திருமண் இட்டுக்கொண்டது போல” என்ற உவமை உள்ள சொற்றொடரை முழுவதும் எழதுங்கள். ஓருவமையை மட்டும் உருவிப்போடும்போது அது வாசிப்பவர்களைத் தவறான புரிதலுக்கு இட்டுச்செல்லும். நீங்கள் கன்டணம் செய்வது சரியா என்று எப்படி பார்ப்பது? இங்கே வளவ.துரையன் முழுக்கட்டுரைக்கும் இணைப்பு கொடுத்திருந்தால், நீங்கள் எப்படியும் எழதலாம். அவர் அப்படிச்செய்யாமல் அவர் போக்கில் அவர் நினைத்ததையெல்லாம் எழுதிச் செல்கிறார்.
Lets be fair here. Lets give a chance to the readers to know about the other side which is under attack. Otherwise, you’re creating a Kangaroo court here.
//தினமணி [08-01-18] இல் படித்தேன்.// தினமணி அதை நீக்கிவிட்டது. இப்போது படிக்க எவருக்கும் கிடைக்காது. //
மற்றவர்கள் படிக்க முடியாத போது வைரமுத்து அதைச்சொன்னார்; இதைச்சொன்னார் எனபதை எப்படி நம்புவது? கட்டுரையில் இன்னொரு க்ட்டுரையைப்பற்றி பேசினால், அங்கே படித்தேன் என்று சொல்வதோடு நிற்காமல், இணைப்பும் கொடுப்பது குறைந்த பட்ச தேவை.
கடவுள்; தெய்வம் என்ற இருசொற்களும் ஒரே பொருட்களைத் தருகின்றன என்கிறார். வைரமுத்து இல்லை என்றாராம். க்ரியா ஆமென்றதாம். க்ரியா இப்போது வந்தது. எப்போதே வந்த கழகத்தமிழ் அகராதி என்ன சொல்லியது? தேம்பாமுனிவரின் சதுர் அகராதி என்ன சொல்லியது? (இவ்விருநூல்களும் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் நூலகள் காட்சி மற்றும் விற்பனை விழாவில் கிடைக்கிறது)
இவ்விரு சொற்களைப் புரிந்து கொள்ள ஏன் அகராதிகளுக்கு ஓட வேண்டும்? அப்படியே போனாலும் அகராதி ஒரு சொல்லுக்கு என்ன்னென்ன சொற்களெல்லாம் கிட்டத்தட்ட அதே பொருள்களைத் தருகின்றனவே அதை ஈடான சொல்லாகக் காட்டுவார்கள். ஆங்கிலத்தில் சினன்யம் என்றால் அதே பொருளை அப்படியே தரும் சொல் இல்லை. கிட்டத்தட்ட அப்பொருள் அல்லது அப்பொருளைச்சேர்ந்த குடும்பச்சொல் என்றுதான் பொருள். ”கிட்டத்தட்ட” என்பது ஈடானது என்று பொருளாகாது. சினன்யம் என்பது ஈடான சொல் என்றால், ஒரே பொருளுக்கு பல சொற்களை வைக்க மொழி என்ன முட்டாள்களில் களமா? இதே தமிழுக்கும். தமிழ் முட்டாள்களில் களமன்று. இரண்டும் ஒன்றென்றால் வெட்டி வேலையல்லவா? தமிழில் ஓலை என்றாலும் இலை என்றாலும் உறவுச்சொற்கள். அதாவது, சினன்யம். ஆனால் ஈடான சொற்களல்ல. பனை ஓலை; வாழை இலை. இரண்டுமே மரத்தின் இலைகள்தான். ஆனால் வெவ்வேறு சொற்களை ஏன் தந்தார்கள் தமிழர்கள் வளவதுரையன்?
கடவுள் என்றால் கடந்த உள் என்றே பொருள். அனைத்தையும் கடந்து உள் உறைவது; அல்லது அனைத்திலும் உறையும் உள். அப்படிப்பட்ட உள் ஒன்றே ஒன்றாகத்தான் இருக்கும். கடவுள் எனப்து ஓர் உள்ளைத்தான் சுட்டுகிறது. இதை இசுலாமியர் ஏக இறைவன் அல்லது அல்லா என்ப. கிருத்துவர் யஹோவா என்ப. மற்றவர்கள் இறைவன் அல்லது ஈஸ்வர் என்ப. இந்துமதத்தில் பல பிரிவுகள் அவரவர் விரும்பியதை கடவுள் ஆக வைப்பர். ஆழ்வார்களுக்கு ”திருமால்”; நாயன்மார்களுக்கு ”சிவன்” ஓர் உள்.
அதேவேளை இந்துமதத்தில் ஆயிரக்கணக்கான பிற் உள. அவை தேவதைகள் எனவும் தெய்வங்கள் எனவும் குறிக்கபடும். தெய்வங்க்ள் எண்ணிறந்தன; கடவுள் ஒருவரே என்பதும் இந்துமதமாகும். ஆழ்வார்கள் வணங்கிய திருமால் அவர்களின் கடவுள். வேதங்கள் அக்கடவுளை உலகத்தோருக்கு காட்டவே எழுந்தன என்பது அவர்தம் நம்பிக்கை. அக்கடவுளுக்கு அணுக்கலில் இருப்போரும் உளர். அவர்களைத்தெயவங்கள் என்ப. அவர்களுள் சிலரை நித்ய சூரிகள் என்ப.
ஆக, கடவுள், தெய்வம் என்ற இருசொற்களுக்கும் வைரமுத்து சொன்னதே சரி. வளவதுரையன் நினைப்பது தமிழன்று. தமிழை தான் விரும்பியபடி வளைக்க முயலும் கற்பனை.
//”இறைவன் முன் எல்லாரும் சமம்” என்பது குறுகிய பரவசம் என்று ஓரிடத்தில் அவர் குறிப்பிடுகிறார். ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்களில் பல்வேறு வர்க்க சாதிவகைப்படவர்களைப் பார்க்கமுடிகிறதே! இறைப்பற்று என்னும் ஒரே நேர்க்கோடு அவர்களைக் கட்டிப்போட்டிருக்கிறதே. அவன் சன்னதியில் ஒன்றாகச் சமமாகத்தானே எல்லாரும் நிற்கிறார்கள். இக்காலத்தில் வேண்டுமானால் இன்னும் சேரிக்குள் தேர் வராமல் இருக்கலாம். ஆனால் திருப்பாணாழ்வாரைத் தன் அர்ச்சாவதாரத்திலேயே ஏற்றுக்கொண்டானே கடவுள். அதைக் கண்டு அந்தணரான உலோமசாரங்க முனிவர் பரவசம் அடைந்தாரே; அது குறுகிய பரவசமா?//
உலோம சாரங்க முனிவரா? உலோகசாரங்க முனிவரா?
ஆம் அஃதொரு குறுகிய பரவசமே!
முதலாழ்வர் மூவர்; தங்கள் ஜாதிகளை வெளிக்காட்டவில்லை. சமகாலத்தவரான திருமழிசையாழ்வர் தன் ஜாதியை (தலித்து) அப்பட்டமாக வெளிக்காட்டி மனவேதனையடைந்தவர். திருப்பாணாற்றாழ்வாரின் பாடல்கள் பத்தே. அதில் அவர் ஜாதி வெளித்தெரியவில்லை. அவரைப்பற்றி எழதப்பட்ட நூலே (குருபரம்பரா பிரபாவம்) அவர் ஒரு தலித்து எனறு சொல்கிறது. திருமங்கையாழ்வார் வழிப்பறி கொள்ளையே குலத்தொழிலாகக் கொண்ட கள்ளர். குலசேகராழ்வார் சத்திரியர். அரசன். பெரியாழ்வார் பிராமணாள்; அவரின் வளர்ப்பு மகளுக்கு என்ன குலம்? என்று குருபரம்பரை சொல்லாமல் அவர் அனாதைக் குழந்தையாக பெரியாழ்வாரின் தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டார் எனச் சொல்லிவிட்டு பூமிப்பிராட்டியின் அவதாரம் எனவும் சொல்லிவிடுகிறது. அந்த அனாதைக்குழந்தையின் குலமெது என்று கேட்டால் அய்யோ முறையோ என்று அடித்துக்கொள்கிறார்கள். மன்னிப்புக்கேள் என மிரட்டல் விடுகிறார்கள். நம்மாழ்வார் தென்பாண்டி நாடு. இல்லத்துப்பிள்ளை – இது தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்துச் சாதி. அவரோட சிஷய்ர் மதுரகவியாழ்வார். அதே ஊரில் கோயில் வேலை பார்க்கும் பிராமணாள். தொண்டரடிப்பொடியாழ்வார் சோழிய குல (சோழநாட்டைச்சேர்ந்தவர்கள்) முன்குடுமி பிராமணாள். திருமங்கையாழ்வாரின் சமகாலத்தவர்.
இவர்களுள் திருப்பாணரின் கதையை மட்டுமே எடுத்து தான் நினைத்ததை சாதிக்க ஆசைப்படுகிறார் வளவதுரையன். மற்றவர்கள் என்ன ஆனார்கள்? எங்கள் கடவுளைப் பாட ஓர் சூத்திரனுக்கு தகுதி கிடையாது என்று நம்மாழவாரின் பாடல்கள் நிராகரித்தார்கள் பிராமணர்கள். திருமங்கையாழ்வார் காலத்தில்தான் ஏற்கப்பட்டு இராமானுஜரால் வைணவ மதத்தில் முக்கிய அங்கமாக வைக்கப்பட்டன. திருமழிசையாழ்வார் செவிகளில் வேதவொலி கேட்கக்கூடாதென்று (தலித்தின் காதில் ஒலி கூட செல்லக்கூடாது என்பது மனுவிதி) இடையில் நிறுத்தினார்கள் பார்ப்பனர்கள். அவர் கோபக்க்காரர். அவரின் சாபத்துக்காளாகி தன் பேச்சுத்திறனை இழந்தார்கள் அப்பார்ப்பனர்கள். வேள்வியில் இவர் வரக்கூடாதென்று சொல்லி பார்ப்ப்னர்கள் இவரை வெளியே தள்ள, இவர் பாடிய பாடலில் அவ்வூர் பெருமாள் இவரின் மார்பில் தோன்ற பார்ப்ப்னர்கள் பயந்து போனார்கள். கும்பகோணத்துக்கோயிலுக்குள் நீ நுழையக்கூடாதென அர்ச்சகர்கள் தடுக்க, அவர் தான் எழுதிய பாடல்கள் ஓலைச்சுவடிகளை காவிரியில் வீசிவிட்டு அங்கேயே உடகார்ந்து பெருமாளின் சன்னதியை பார்க்க பெருமாளின் முகமே தெரியவில்லை. பின் என்ன? பெருமாள் தன் முகத்தைத் திருப்பிக் காட்ட தன் இறுதிக்காலத்தை அங்கேயே கழித்து விண்ணுலகம் ஏகினார், எப்படி திருப்பினார் முகத்தை பெருமாள் எனப்தை இப்போது நீங்களே அக்கோயிலில் போய் நேராக பார்த்துக்கொள்ளலாம்.
சமத்துவமாவது மண்ணங்கட்டியாவது? இராமானுஜரின் சீடர் ஒருவர் தலித்து. அவருக்கு ஈமக்கிரியையைச் செய்ய எவருமே முன்வரவில்லை. முன்வந்த பெரிய நம்பி (பிராமணாள்) குலவிலக்கு செய்யப்பட்டார்.
இவை ஒரு சிலவே. இன்னும் பக்கம்பக்கமாக எழுதலாம். சமத்துவம் என்பது வைணவத்தில் ஒரு தியரி மட்டுமே. செயல்பாட்டில் வரமுடியாதபடி பார்த்துக்கொண்டார்கள்; இராமானுஜர் காலத்துக்கப்புறம் அழிச்சாட்டியம் ஆடினார்கள்.
கட்டுரையில் நிறைய கருத்துப்பிழைகள். அவையெல்லாம் குறிப்பிட இன்னொரு கட்டுரையே எழுதவேண்டும்.
இன்னொரு கட்டுரை எழுதுவதை நான் வரவேற்கிறேன்
வரவேற்பது இருக்கட்டும். இக்கட்டுரையில் நீங்கள் எழுதிய ”இறைப்பற்று என்னும் ஒரே நேர்க்கோடு அவர்களைக் கட்டிப்போட்டிருக்கிறதே. அவன் சன்னதியில் ஒன்றாகச் சமமாகத்தானே எல்லாரும் நிற்கிறார்கள். ” என்ற கருத்துக்களுக்கு நான் ஆதாரங்களைக் காட்டி மறுத்திருக்கிறேன். அதை முதலில் எதிர்நோக்கி உங்கள் பதிலைத்தாருங்கள். பின்னர் என் தனிக்கட்டுரையை எதிர்பார்க்கலாம்.