ஆதி

எதேச்சையாக எதிர்ப்பட்டவரை
எங்கேயோ பார்த்திருக்கிறேன்
எங்கெனத் தெரியவில்லை
அவரும்
கடந்து சென்றுவிட்டார்
இனி ஞாபகம் வந்தும்
பயனில்லை
காற்று அதன் போக்கில்
போகிறது
மனதை அதைப் போல்
கட்டவிழ்த்து விடமுடியுமா
இந்த மழை வேறு
நேரங்கெட்ட நேரத்திற்கு
வந்து தொலைக்கிறது
குடையை எங்கே
வைத்தேனென்று தெரியவில்லை
புத்தகங்களைப் படித்து
கண்களை களைப்படையச்
செய்தாலும்
தூக்கம் வந்தபாடில்லை
தினமும் சூரிய நமஸ்காரம்
செய்கிறேன்
என் உடலை எரிக்கப்போகும்
நெருப்பு
அவனிடமிருந்து தானே
தோன்றியது என்பதாலா.

Series Navigationசிறு கவிதைகள்பாசாவின் உறுபங்கம்