ஆமென்

 

 

விலகுங்கள்

எல்லோராலும் ஏமாற்றப்பட்டவன்

வந்து கொண்டிருக்கிறான்

அவனுக்கு

எது பொய் எது மெய்யென்று

தெரியாது

ரகசியங்களை

சுமந்து கொண்டு திரிபவர்கள்

அவன் பக்கம்

திரும்பிப் பார்ப்பதில்லை

அர்த்தமிழந்த வாழ்க்கையின்

பக்கங்களை நிரப்பிக் கொண்டிருக்கிறான்

மின்மினி வெளிச்சமாவது தேவை

அவன் உறங்குவதற்கு

விடியாத இரவுகள்

அவன் வரப்பிரசாதம்

வாழ்க்கைப் பந்தயத்தில்

கடைசியாகக் கூட

அவன் வருவதில்லை

மேகங்களற்ற

வானத்தின் அழகை

அவன் பருகுவதில்லை

வேலை நிமித்தமாக

வெளியே செல்லும் போது

நடுவழியில்

அவன் பெயரைக் கூட

மறந்து நிற்பான்

அவனைப் போல் யாருமில்லை

அப்படி இருக்க

யாரும் விரும்புவதில்லை

மீண்டும் குழந்தையாகிவிடுங்கள்

அப்போது தான்

சுவர்க்கத்தில்

உங்களுக்கு இடம்

என்று பைபிள் சொன்னது

இவனுக்காகத்தான்

இருக்க வேண்டும்.

Series Navigationஞாநீதுகில்