இடைத் தேர்தல்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 6 of 25 in the series 17 மே 2015

சங்கர் கணேஷ் கருப்பையா

 

என்னடா மோகன், தக்காளிய உள்ளூர் கடைகள்லயே விக்கிறயா?

ஆமா சித்தப்பா.

எவ்வளவுக்குப் போடுற.

கிலோ எட்ரூவா சித்தப்பா.

ஏன்டா சிவகாசி மார்க்கெட்ல பன்னன்ட்ருவா போகுது. அங்க கொண்டு போக வேண்டியதுதான.

 

நீயென்ன சித்தப்பா கத்தரிக்கா கொண்டு போற பிரச்சினையில்ல ரோடு இருக்க இருப்புல தக்காளிய சிவகாசி கொண்டு போறதுக்குள்ள நெறையா அடிபட்டுப்புப் போகுது. கூட்டிக் கழிச்சப் பார்த்தா எல்லாக் கணக்கும் சரியாத்தான் வருது. அலைச்சலாவது மிச்சமாகும்னு பேசாம உள்ளூர்லயே போட்டாச்சு.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த பாண்டிக்கு நிலபுலம் எதுவும் கிடையாது. பம்செட்டு வச்சிருக்கவங்க பகுமானத்தப் பார்த்தாயான்னு மனசுல நெனைச்சுக்கிட்டார். அப்புறம் அவங்களும் சிரமப்படத்தான் செய்றாங்கனு நெனைச்சார்.

ஆமாம் கொத்தனேரியில் இருந்து சிவகாசி மார்க்கெட்டுக்குக் காய்கறி கொண்டு போறதுனா மிகப்பெரும் சிரமம். கொத்தனேரி, சிவகாசி பிரதானச் சாலையில இருந்து ஒன்னரைக் கிலோமீட்டர் தள்ளியிருக்கு. மெயின் ரோட்டு வரைக்கும் பேருந்து வசதி கிடையாது.

காய்கறிய சைக்கிள்லதான் எடுத்துட்டு வரணும். சைக்கிளில் கொண்டு வந்து பேருந்தில் ஏற்றிச் செல்வதும் அவ்வளவு சுலபமானது இல்லை. காலையில போற ஏழரை மணி வண்டியில கூட்டம் அதிகமாக இருக்கும், பிதுங்கி வழியும் தட்டுத் தடுமாறி பேருந்தில காய்கறி மூட்டைய ஏத்தியாச்சுனா, குண்டும் குழியுமான ரோட்ல பேருந்து ஆமை போலப் போகும். கிராமப்புற அரசுப் பேருந்து என்பதால்., பேருந்து கிடுகிடுனு ஆடிக்கிட்டே போகும். இருண்டு பக்கமும் சாய்ந்து சாய்ந்து போகும். இது பேருந்துப் பராமரிப்பின் இலட்சணம். அது மட்டுமில்லாம மேடு பள்ளத்துக்கு ஈடுகொடுக்க முடியாம, மேலும் கீழுமாகக் குறித்துச் செல்லும். ஆக பஸ் எட்டுத்திக்கும் ஆடி அசைந்து சிவகாசியைப் போய்ச் சேரும்.

சிவகாசியில காரனேஷன் பேருந்து நிறுத்தத்தில் மூட்டைய இறக்கி, காய்கறி மார்க்கெட்டுக்கு வாடகைச் சைக்கிளில் கொண்டு போகனும். படிக்கும்போதே விவசாயிகளோட சிரமம் புரியுதுங்களா?

ஏழரை மணிப் பேருந்தைப் பிடிச்சிட்டாலவது சிரமம் குறைவுங்க. ஏனா ஏழரை மணிப் பேருந்த விட்டாச்சுனா எட்டரைக்கத்தான் அடுத்த பேருந்து அதுல போயி மார்க்கெட்டுக்குப் போகனும்னா, மணி பத்தாயிடும். பத்துமணிக்குள்ள மார்க்கெட்ல வியாபாரம் எல்லாம், முடிந்து போய்விடும். அப்புறம் கொண்டு போன காய்கறிய அடிமாட்டு விலைக்கு விற்க வேண்டியதுதான். கிடைக்கிற காசு சைக்கிள் வாடகை, பேருந்துக் கட்டணம் டீச் செலவு என்று காலியாகிவிடும்.

அப்படியொரு சுபயோக சுபதினம், ஜூன் மாதமா இல்லாம இருந்தால் பரவாயில்லை. ஏன்னா, ஜூன் மாதம்தான் பள்ளிக்கூடம் துவங்குகிற நேரம். அந்த நேரத்தில, பள்ளிக் கூடம் போகும் குழந்தைச் செல்வங்கள், கோடு போட்ட நோட்டு, கோடு போடாத நோட்டு, இரண்டு கோடு நோட்டுனு ஒரு நீண்ட பட்டியலை தகப்பன்மார்களிடமோ, அண்ணன்மார்களிடமோ கொடுத்து அனுப்புவார்கள்.

இப்படித்தான் போன வருஷம் ஜூன் மாதம், ஒருநாள் மோகனோட சித்தப்பா ராமசுப்புக்கு சுபயோக சுபதினமாய் ஆகிவிட்டது. அன்றைய தினம், அவரது, இளையமகன், நோட்டுப்புத்தகம் வாங்கப் பட்டியல் கொடுத்திருந்தான். வரும்போது, ராமசுப்பு கொண்டு போன சாக்குப்பையை மட்டும்தான் கொண்டு வர முடிந்தது. நோட்டுப்புத்தகம் வாங்கமுடியவில்லை.

இளைய பிள்ளை பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும், வீட்டில் நோட்டுப்புத்தகம் இருக்கிறதா என்றுதான் பார்த்தான். வகுப்பு ஆசிரியர் மீதுள்ள பயமும் புதுப் பொருட்களின் மேல் உள்ள பிரியமும்தான் இப்படி வெளிப்பட்டது. நோட்டுப்புத்தகம் எதுவும் இல்லை. பையனுக்குப் புரிந்துவிட்டது. நாளை காலையில் வகுப்பாசிரியர் வசைபாடுவதைக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தான்.

மனதை அறைகுறையாகத் தேற்றிக் கொண்டு, சமையல் செய்து கொண்டிருந்த அம்மாவிடம் சென்று “ஏம்மா அப்பா நோட்டு வாங்கிட்டு வரல?” என்றான்.

இன்னிக்கி காய் சரியா விக்லப்பா.

ஆமா எனக்கு ஏதாவது வாங்கனும்னா மட்டும்தான் உங்களக்கு இப்படியெல்லாம் ஆகும். அண்ணனுக்கு மட்டும் கேட்டா கரெக்டா வாங்கித் தாரீங்க.

ஏம்பா உனக்கு நாங்கன்னா வேணும்னா செய்றோம்.

இந்த விவரமெல்லாம் சிறுவனைச் சமாதானப்படுத்துமா என்ன? அதுக்காக சிறுவன் விவரம் இல்லாதவன்ன நினைச்சிடாதீங்க. அம்மாவுக்குப் படீரென்று பதில் சொன்னான்.

ஆமா, ‘மூத்தபிள்ளை செல்லப்பிள்ளை இளையபிள்ளை எடுத்துவைப்பார் கைப்பிள்ளைனு’ சும்மாவா சொன்னாங்க என்றான்.

இதெல்லாம் பையனுக்கு எப்படித் தெரியும்னு பார்க்குறீங்களா? எல்லாம், தமிழ்ப்படங்களைப் பார்த்துத்தான்.

அம்மாவுக்கு, சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. இருந்தாலும் அடக்கிக்கொண்டு அவனைச் சமாதானப்படுத்த முயன்றாள்.

அரசாங்கத்தோட செயலற்றதன்மை, வீட்டுக்குள்ள எப்படியொரு பாதிப்பினை ஏற்படுத்துகிற பார்த்தீங்களா. கிராமத்தப் பொறுத்தவரை அரசாங்கம் மட்டுமில்லை, தனியாரும் அப்படித்தான் இருக்கு. கிராமம்னா எல்லாருக்குமே கிள்ளுக்கீரைதாங்க.

ஏன் இப்படிச் சொல்றேன்னா, சிவகாசித் தடத்தில், ராமானுஜா பஸ் சர்வீஸ் என்று ஒரு பேருந்து நிறுவனம் உண்டு. அந்நிறுவனத்தார், நகர்ப்புறங்களில், ஓடி, அடிபட்டு, வயதான, பேருந்தைத்தான் இந்தத் தடத்தில ஓட்டுவாங்க. அது அடிக்கடிப் பழுதடைந்து இடையில் எங்கயாவது படுத்துக்கொள்ளும். படுத்துக் கொண்டாலாவது பாதகமில்லை. ஓடுற பேருந்தில உயிரோடு போய்ச் சேருவோமா என்பது சந்தேகமே. ஆயுள் காப்பீடு இருந்தாலாவது ஓரளவுக்கப் பரவாயில்லை. கிராம மக்களுக்கு வயித்தக் காப்பாற்றவே வழியில்லை. ஆயுளை எங்கு காப்பது.

அரசாங்கம் சார்ந்த பிரச்சினைக்குத்தான் தீர்வுகாண முடியவில்லை. இந்தத் தனியார் பிரச்சினைக்காவது தீர்வு காண வேண்டும் என்பது கொத்தனேரி வக்கீல் துரைசாமிக்கு ஒரு எண்ணம். அதனால ஊர்மக்கள் பலலரைக் கூட்டிக்கொண்டு திருத்தங்கல்லில் சாலை மறியலிலில் ஈடுபட்டார். திருத்தங்கல் என்பது சிலப்பதிகாரத்தில் வருமே திருத்தாங்கல் அதுதான். மறியலால் சாலை ஸ்தம்பித்தது. சாலை ஸ்தம்பித்தால் பிரச்சினை தீர்ந்திடுமா என்ன? இதென்ன சின்னப்புள்ள தனமா இருக்கு, இந்த ரோட்டுக்கு இந்த மாதிரிப் பேருந்துதான் விட முடியும்னு பேருந்து நிறுவன முதலாளி கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்.

ஊர்ப்பெரியவங்களுக்குத்தான் பிரச்சினையென்றால் சிறுவர்களுக்கும் அவ்வாறே. ஐந்தாவது வரை உள்ளூர்ப் பள்ளி. அதுக்கு மேல, மூனு கிலோமீட்டர் தாண்டிப் போய்தான் படிக்கணும். மூனு கிலோ மீட்டர் எப்படித் தாண்டுவது? என்று கேட்கிறீர்களா. சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னேங்க. பேருந்தில் போகலாம். நடந்து போகலாம், அல்லது சைக்கிளில் போகலாம். பேருந்தும், சைக்கிளும் இருக்கும்போது ஏன் நடந்து போகனும்னு கேட்கிறீர்களா?

எல்லாரிடமும் சைக்கிள் கிடையாது. ஆனால் எல்லோரும் பேருந்தில் போகலாம். அரசாங்கம் பஸ் பாஸ் வேற கொடுத்திருக்கு. பாஸ் இருக்கு பஸ் இல்லையே. பஸ் இல்லையென்றால் சரியான நேரத்துக்கு கிடையாது. காலை ஒன்பது மணிக்கெல்லாம், பள்ளி வளாகத்தில் இருக்க வேண்டும். ஆனால் பேருந்து கொத்தனேரிப் பக்கம் ஒன்பது முப்பதுக்குத்தான் வரும். அதில் போனால் ஒன்பது நாற்பத்தி ஐந்துக்குத்தான் பள்ளிக்குப் போக முடியும். அரசுப் பள்ளி என்பதால் அப்படிப் போய்க்கொள்ளலாம்தான். ஆனால் அது, பழைய தலைமை ஆசிரியர், முத்துச்சாமி இருக்கும் வரைக்கும்தான். இப்பொழுது ஒருத்தர் புதிதாய் வந்திருக்கிறாரே, பால்ச்சாமி, மிகக் கண்டிப்பானவர். ஒழுக்கமா இருந்தால், படிப்புத்தானாக வரும் என்பதில்ல அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளவர். அவர் தாமதமாகப் போகிறவர்கள் நூறு பேராயினும் பள்ளி மைதானத்தில் வெயிலில் நிப்பாட்டி வைத்துவிடுவார்.

பசங்களும் பத்துமணி வெயில் நிற்பதை விட எட்டு மணி வெயிலில் நடந்து விடலாம் என்று பொடி நடையாக் கிளம்பி, எட்டே முக்காலுக்கெல்லாம் பள்ளிக்குப் போய்விடுவார்கள்.

காலையிலாவது, தாமதமா வருவதற்கு ஒரு பேருந்து உண்டு. மாலை வேளையில் அதுவும் கிடையாது. மாலை 4 மணிக்குப் பள்ளிக்கூட நேரம் முடிந்ததும், மாணவர்கள் அவரவரது கூட்டாளிகளுடன் வீட்டை நோக்கிப் பயணத்தைத் துவங்கிவிடுவர்.

இந்த மாதிரி நடந்து போய் வருவதில், 12ம் வகுப்பு குமாரும் ஒருவன். அவனால இந்தப் பால்லச்சாமி வாத்தியாரிடம் அடியும் வாங்க முடியவில்லை. காலையில காடு கழனி போகாம சீக்கிரமா பள்ளிக்குப் போகவும் முடியலை. இதுக்கு ஒரு தீர்வு வேண்டுமே என எண்ணியவன், அவனுக்கத் தெரிந்த அளவில் ஒரு கையெழுத்து இயக்கம் நடத்தினான். ரோடு போடுவது மற்றம் தக்க நேரத்தில் பேருந்து விடுவது இரண்டும்தான் கோரிக்கை. மாவட்ட ஆட்சியர், போக்குவரத்துப் பணிமனை மேலாளர், போக்குவரத்துத் துறை அமைச்சர், முதலமைச்சர் என அனைவருக்கும், கோரிக்கையை அனுப்பினான்.

யாருக்குக் கோரிக்கை வைத்து என்ன பயன். யாராலும் சரிசெய்ய முடியாத தப்பு நடந்து இரண்டு வருடம் ஆகிவிட்டது. தவறு செய்கிறோம் என்று தெரியாமலேயே அந்தத் தொகுதி மக்கள் தவறு செய்து விட்டார்கள். அந்தத் தவறு வேற ஒன்னும் இல்லீங்க. இரண்டு வருடத்துக்கு முன்னாடி நடந்த பாராளுமன்றத் தேர்தலில் இந்த ஊர்க்காரர்கள், எதிர்க்கட்சி வேட்பாளரை ஜெயிக்க வச்சுட்டாங்க.

 

Series Navigationஆனந்த்—தேவதச்சன் கவிதைகள் அவரவர் கைமணல்–தொகுப்பை முன் வைத்து…சாவு விருந்து
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *