இடைவெளிகள் (11) – மாறும் சூழல்களும் சபலங்களும்

இராம. வயிரவன்

rvairamr@gmail.com

            பங்குச்சந்தை நிலவரத்தைப் போல, வாழ்க்கையும் மேலும் கீழுமாக மாறிக்கொண்டே இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளின் கடன் பிரச்சினையானாலும் சரி, வங்கியின் வட்டிவிகிதம் மாறினாலும் சரி, மழைவந்தாலும் சரி, வெயில் அடித்தாலும் சரி ஏதோ ஒரு காரணத்துக்காகப் பங்குகள் கிடிகிடுவென ஏறும்! அடுத்தநாளே மளமளவெனச்சரியும்! எல்லாவற்றுக்கும் காரணம் ‘செண்டிமெண்ட்’ என்பார்கள் அந்தத்துறையில் இருப்பவர்கள். அதைப்போலத்தான் வாழ்க்கையும் ரோலர் கோஸ்ட்டர் விளையாட்டைப் போல ஏறுவதும், இறங்குவதும், விழுவதும் எழுவதுமாகத்தான் ஓடிக்கொண்டிருக்கிறது!

எல்லா உறவுகளிலும் கணவன் மனைவி உறவு மிக முக்கியமானது. அது வாழ்க்கை ஓட்டத்தில் ஏற்படுகிற மாறும் சூழல்களால் தொடர் தாக்குதல்களுக்கு உள்ளாகிறது. அதனால் ஏற்படுகிற விரிசல்கள் எப்போதும் ஒன்றுபோல இருப்பதில்லை. சிலநேரங்களில் பெரிதாகி பெரிய இடைவெளிகளை உண்டாக்குவதும், இன்னும் சிலநேரங்களில் இடைவெளி குறைந்து அன்பு பெருக்கெடுப்பதுமாக தொடர்ந்து மாறிக்கொண்டே சென்று கொண்டிருக்கிறது.

சமீபத்தில் ஒரு வங்காளச் சிறுகதை படித்தேன். சத்யஜித் தத்தா எழுதியது. ‘மனிதன் மனிதன் மற்றும் ஒரு ஞாயிற்றுக்கிழமையும்’ என்பது கதைத் தலைப்பு. மொழிபெயர்ப்புக்காகப் பல விருதுகளும், பரிசுகளும் பெற்ற சு. கிருஷ்ணமூர்த்தி தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

மாறிவரும் வாழ்க்கைச் சூழல் எப்படி ஒரு குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே ஒரு இடைவெளியை உருவாக்குகிறது? அதுவே எப்படி நெருக்கத்தை உண்டாக்கி இடைவெளி குறைக்கிறது? என்பதை மிக இயல்பாகச் சொல்லியிருக்கிறார் கதையாசிரியர். பிரச்சார நெடி இல்லாமல் ஒரு நடுத்தரக் குடும்பத்தின் ஞாயிற்றுக்கிழமை நிகழ்வுகள்தான் கதை. இனி கதையைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

‘வீட்டின் விஸ்தரிப்பு வேலை நடந்து கொண்டிருக்கிறது. படுக்கையறையையொட்டி ஒரு வரவேற்பறை, ஒரு சிறிய வராந்தா, ஒரு மாடியறை, இதெல்லாம் முடிந்தால் வீடு பக்கா வீடாகிவிடும். … …’ இப்படித்தான் அந்தக் கதை ஆரம்பிக்கிறது.

‘கமல்தான் கணவன். அனிதா அவன் மனைவி. கமலுக்கு அவ்வளவு பொருளாதார அறிவு போதாது. அனிதாவின் ஆர்வத்தால்தான் வீடு கட்டப்படுகிறது. அன்று ஞாயிற்றுக்கிழமை. பிள்ளைகள் ஓவிய வகுப்புக்குப் போயிருக்கிறார்கள். மரநிழலில் சிகரெட் பிடித்துக் கொண்டே வீட்டுவேலை நடப்பதை பார்த்துக்கொண்டிருக்கிறான் கமல். ஒரு ஆணும் பெண்ணும் பேசிக்கொண்டே செங்கல் உடைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தப்பெண்ணுக்குப் புஷ்ட்டியான உடம்பு. அடிக்கடி அவளைப்பார்க்கத் தூண்டுகிறது அவனுக்கு. அவள் பீடி குடிக்கிறாள். அவளைப் பற்றிய நினப்பு கமலின் பாலுணர்வைத் தாக்குகிறது.

இனி அனிதாவைப் பற்றிப்பார்ப்போம், அனிதா இப்பொழுது ரொம்ப பிஸி. ஒரு கம்பெனி உற்பத்தி செய்யும் விலை உயர்ந்த பொருட்களை விற்பனை செய்யும் வேலை அவளுக்கு. பற்பசை, சோப்புத்தூள் முதல் செண்ட் வரை. விலை அதிகமானாலும் தரம் உயர்ந்தவை. உறுப்பினராகி ஒரு வருடமாக இந்தத் தொழிலை செய்து வருகிறாள் அனிதா. அவளுக்குக் கீழே 20, 25 ஆண் -பெண் விற்பனையாளர்களின் சங்கிலி.

ஆரம்பத்தில் கணவன், மனைவி இருவரும் வேலைக்குப் போனால் குடும்பம் குடும்பமாக இருக்காது என்கிற எண்ணம் கமலுக்கு இருந்தது. ஆனால் அதிகரித்து வரும் குடும்பச்செலவு, ஃபிர்ட்ஜ், டிவி, டெலிபோன், பிள்ளைகளின் படிப்பு என்று பணம் எவ்வளவு இருந்தாலும் போதவில்லை. அனிதாவுக்கும் எவ்வளவோ பட்டங்கள் வாங்கி இருந்தாலும் குடும்பப் பெண்ணாக இருக்கும் வேதனை தாக்குகிறது. கமலுக்கு அனிதா இந்தத் தொழிலில் சேர்வது பிடிக்கா விட்டாலும் அவனால் விருப்பமின்மையைச் சொல்லமுடியவில்லை. அனிதாவின் தொழில் நாளுக்கு நாள் பெருகிவருகிறது. அவளின் வருமானம்தான் வீடு விஸ்தரிப்புக்கு உதவியாக இருக்கிறது.

கமல் தற்போது வேலையில்லாமல் இருக்கிறான்.

அன்றும் அனிதா விற்பனைக்காக வெளியே சென்றுவிட்டாள். சுதீப்தாஸ் அவளின் வாடிக்கையாளன். அவன் அவளிடம் நிறைய ஒப்பனைப் பொருட்கள் வாங்குகிறான். அவன் விற்பனை வரி அலுவலகத்தில் பெரிய ஆபீசர். வெகுகாலம் முன்பே மனைவி அவனை விட்டுப் போய்விட்டாள். அதைப்பற்றியெல்லாம் அனிதாவுக்குக் கவலையில்லை. அவளுக்கு பொருட்கள் விற்பனையானால் சரிதான். அன்று அவள் கடைசியாக சுதீப்பை சந்திக்கச் செல்கிறாள். அவன் லுங்கியுடன் வாய் நிறையச் சிரிப்போடு வரவேற்கிறான்.

அவன் பார்வை சரியில்லை. அவன் நல்லவனில்லை என்பதைப் புரிந்து கொள்கிறாள் அனிதா. அதெல்லாம் பற்றி அவள் கவலைப் படவில்லை. பொருட்களை விற்றுவிடவேண்டும் அவ்வளவுதான். இப்படியெல்லாம் அசிங்கமாகக் கமல் பார்க்க மாட்டான் என்று தொன்றுகிறது அனிதாவுக்கு. சுதீப்பின் கண்கள் அனிதாவின் உடம்பையே மேய்கின்றன. அவளுக்குப் பிள்ளைகள் நினைவு வருகிறது. இப்பொழுதெல்லாம் ஆயாதான் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்கிறாள். உடனே கிளம்புகிறாள் அனிதா.

வீட்டுக்கு வருகிறாள் பலவற்றையும் நினைத்துக் கொண்டே. இப்படி விற்பனை செய்ய அலைந்து அலைந்து தன்னையும் விற்பனை செய்ய முனைந்து விடுவாளோ? பயம் அவளை ஆட்கொள்கிறது. கமல் எந்தக் கவலையும் இல்லாமல் நிம்மதியாக இருக்கிறான், அவனுக்கு வாழ்க்கையில் முன்னேற ஆர்வமில்லை, அதனால்தான் இப்படி மகிழ்ச்சியாக இருக்கமுடிகிறதோ என்று எண்ணுகிறாள். குளித்து விட்டு வருகிறாள். பிள்ளைகள் தூங்கி விட்டார்கள். கமல் சிகரெட் பிடித்துக்கொண்டே டிவி பார்த்துக் கொண்டிருக்கிறான். அவளுக்கு அந்த நெடி பிடிக்கவே பிடிக்காது. ஆனால் அது அன்று அவ்வளவு பொறுக்கமுடியாததாகத் தோன்றவில்லை. பெரிது பெரிதாகக் கொட்டாவி வருகிறது. நாள்முழுவதும் உழைத்த களைப்பு. அவள் கமலின் கால் பக்கத்தில் நெருங்கிப் படுக்கிறாள். அனிதா வெகு நாட்களாக அவனிடம் இவ்வளவு நெருங்கிப் படுத்துக் கொண்டதில்லை. கமலுக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவன் பரிவோடு அனிதாவின் நெற்றியில் படர்ந்திருந்த குழல் கற்றைகளை அகற்றிவிட்டான்’ என்று கதை முடிகிறது.

பெருகும் வாழ்க்கை வசதிகள், அதிகரித்துவிடும் குடும்பச் செலவு, அனிதாவும் வேலைசெய்ய வேண்டிய சூழல், அதனால் குடும்பத்தில் ஏற்படும் மாற்றங்கள், அதனால் கமலுக்கும் அனிதாவுக்கும் இடையே குறைகிற நெருக்கம், கமலுக்கு சித்தாளைப் பார்க்கும் போது ஏற்படுகிற சபலம், சுதீப்புக்கு அனிதாவின் மேல் ஏற்படும் சபலம், அதைப் புரிந்து கொள்கிற அனிதா, அவ்வப்போது எல்லா மாற்றங்களைப் பற்றியும் யோசித்துப் பார்க்கிற அனிதா, பின் தன்னை மாற்றிக்கொண்டு கமலை நெருங்கிப் படுத்துக்கொள்வதன் மூலம் இடைவெளியைக் குறைத்துக் கொள்வது என்று கதை எங்கேயும் மிகையின்றி, இயல்பாக ஒரு சராசரிக் குடும்பத்தை கண்முன்னே நிறுத்துகிறது.

வாழ்க்கையில் ஏற்பட்டுவிடுகிற இடைவெளிகளைக் குறைத்துக்கொள்ள நாம் பெரிதாய் ஒன்றும் செய்யத்தேவையில்லை. ‘இடைவெளிகள் இருக்கின்றன’ என்கிற ‘பிரக்ஞை’ இருந்தாலே போதுமானது. அதற்கு ஒவ்வொருவரும் உடம்பிலிருந்து சற்று வெளியே வந்து அனிதா யோசித்துப்பார்ப்பதைப் போல யோசித்துப் பார்க்க வேண்டும், அவ்வளவுதான்!

 

 

Series Navigationகேள்விகளின் வாழ்க்கைமலைப்பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -42