இது பறவைகளின் காலம்

சிவகுமாரி அரவிந்தன்
siva

மரத்தில் அமர்ந்திருக்கும்
பறவைக்குத் தெரியாது
தன் மூதாதையரின்
எச்சத்தில் வளர்ந்த
விருட்சம் தான் இதுவென்று..

மீன் கொத்தியின்
மூக்கு அழகென்று
சொல்லித் திரிகின்றன மீன்கள்
கொத்தப் படுமுன்
பலதும் அழகாகத்தான்
தெரிகின்றன பலருக்கும்…

அலகின் கூர்மையை
பரிசோதிப்பதற்காக
கொத்திக் கிழிப்பதில்லை
எவ்வுயிரையும் கழுகுகள்…

செல்பேசிகளின் கதிரலையில்
கருகிப் போய்விட்டது
சிட்டுக் குருவிகளின் சிறகுகள் …..

குயில்களுக்கு மட்டும்
தெரிவதே இல்லை
எவை தம் குஞ்சுகளென்று ..

தவளைகள் கிடைக்காமல்
தவித்தபடி அலறுகின்றன
இரவுகளில் ஆந்தைகள் …

எடுத்துப் போக ஆளில்லாமல்
மண்ணொட்டிக் கிடக்கின்றன
உதிர்ந்து விழுந்த
மயிலிறகுகள் …

நன்றியுடன்

சிவகுமாரி அரவிந்தன்

Series Navigationபார்வதி தேவி வாங்கிக் கொடுத்த நஷ்ட ஈடுதொடுவானம் 143. முறுக்கு மீசை