இதோ ஒரு கொடி

ருத்ரா இ.பரமசிவன்
ஒரு கொடியில்
முப்பட்டையாய் மூணு வர்ணம்.
ஒரு கொடியில்
நெடுக்கில் பட்டைகள்.
வேறெரு கொடியில்
நடுவில் வட்டம்.
இன்னொன்றில்
நீளப்பட்டைகள்
நட்சத்திரங்களுடன்.
ஒன்றில்
சூரியன்.
மீண்டும் ஒன்றில்
அரிவாள்.
சில‌
முக்கோணத்தொகுப்புகளுடன்.
அடுத்ததாய்
பிறைநிலாவுடன்.
ஒன்றில்
காலில் கட்டிய வாளுடன்
சிங்கம்.
பல்லெல்லாம் மனித ரத்தம்.
எத்தனை எத்தனை கொடிகள்..
கொடியை
உயர்த்தினால்
விடுதலை என்று அர்த்தம்.
எல்லை கொண்டு வேலியிட்டு
வேற்றுமையின் வர்ணங்கள் தீட்டி…
மரணங்களை மொத்தமாய் உமிழ‌
பீரங்கி குண்டுகள்
எப்போதுமே
வாயில் அடக்கி…
கொத்து கொத்தாய்
லட்சக்கணக்கில்
உயிர்த்தீனிகள் தின்னும்
ஒரு விஞ்ஞான மிருகத்தை
அணுகுண்டு எனும்
செல்ல புசு புசு பொம்ரேனியன்களாய்
மடியில் வைத்துக்கொண்டுமிரட்டி…
ஆலமரம் சமுக்காளம் சொம்புகள் இல்லாமல்
ஒரு அட்டை நாட்டாமையை
ஐ.நா. என்று
பொம்மையாய் முண்டைக்கண் துருத்த‌
அய்யனார் சிலை போல் நிறுத்தி
“தமாஷ்”பண்ணிக்கொண்டு…
ஒரு மொழியின் அடையாளத்தை
லட்சக்கணக்கான பிணங்களாக்கி
புதைப்பதை கூட‌
ஏதோ “போதி மரங்களுக்கு”
உரமாய் இடுவதாய்
படம் காட்டுவதையும் ஜீரணித்துக்கொண்டு
கண்ணை மூடிக்கொண்டிருக்கும்
கொடிகள் என்ற பெயரில்
காற்றில் அசையும் சில துணிப்பிஞ்சுகள்
ஒரு பக்கம்…
இந்த கொடிகள் வரிசையாய்
நூற்றுக்கும் மேல்
படபடத்தும்
ஒரு முழு மனிதன் பிறக்கவில்லை.
இதோ ஒரு தேசம்
வேற்றுமைகள் நிறைந்த கொடியை
இங்கு உயர்த்துவதில்லை.
கொடியை அறுத்தால் மட்டுமே
இங்கு விடுதலை.
ஒரு ஒளி நிறைந்த
அர்த்தத்தின் அர்த்தம் இங்கே கிடைக்கிறது.
மானிட சுவாசத்தை
சமாதானப் பிரம்மாண்டமாய்
விண்ணோக்கிப்பாய்ச்சும்
அன்பின் மானுடக்கொடி.
உலகம் கை கோர்த்து நடக்க‌
ஒரு அகல வழிப்பாதை.
டாக்டர் “ரிப்பன் வெட்டி” திறக்கிறார்.
தாயின் மணிக்கொடி தந்த‌
தொப்பூள் கொடி அது!
Series Navigation