இந்த வார்த்தைகளின் மீது

Spread the love

 – நித்ய சைதன்யா

 

இந்த வார்த்தைகளின் மீது

கொஞ்சம் ஏற்றிவைக்கிறேன்

அறிய இயலா துயரத்தினை

 

உடம்பெல்லாம் ரணம்வழிய

எனை அஞ்சி மேலும் சுருண்டு

பலகீனக்குரல் எழுப்பிய அத்தெருநாயை

நின்று கவனிக்கத்தான் செய்தேன்

 

பசி மயக்கம்போலும்

மார்த்தொட்டிலில் துயின்ற

சிசுவைக்காட்டி யாசித்த தாயை

கடந்த அந்நாளினை

நிறைவுடனே பகிர்ந்து கொள்கிறேன்

 

குடி தந்த தைரியத்தில்

வயோதிகம் சிதைத்த பெரியவரை

காலால் எட்டி உதைத்தது

இன்றுவரை கனவென்று நம்புகிறேன்

 

காதலை ஏந்திய அவளுக்கு

வெறும் சொற்களையும் சில உள்ளாடைகளையும்

பரிசாக அளித்து அந்தரங்கம் சுகித்து

சலிப்பின் இரவொன்றில் சந்தேகச்சண்டையிட்டேன்

அன்றடைந்தது தளையொன்றிலிருந்து மீட்பு

 

எதிரிகளிடம் காட்டவேண்டிய கடுமையை

நண்பர்களிடம் காட்டி இயலாமை என

சோம்பல் பேணியதால் பெரும் நட்புகளை இழந்தேன்

அவை மனிதர்களின் தீமை அன்றி வேறென்ன

 

சொற்களை கலைத்தடுக்கி

மீண்டும் கலைத்து மீண்டும் அடுக்கி

இரவினை கவிதைகளின் போலிகளாக்கினேன்

அவற்றை சிசுக்களென அமுதளித்து வளர்க்கிறேன்

 

சொற்களின் மீது மலர்கிறது

இருளில் சுடர்ந்தலையும் கண்களின் கவர்ச்சி

Series Navigationஉலகிலே பிரமிக்கத் தக்க ஜப்பானின் மிகப்பெரும் ஊஞ்சல் பாலம்கணிதன்