இன்று புதிதாய்ப் பிறந்தோம்!

………………………………………………………………………………………………………………………..

_ லதா ராமகிருஷ்ணன்

……………………………………..

வயதானவர்களையெல்லாம் ஒரு மொந்தையாக பாவிக்கும் வழக்கம் நம்மிடையே பரவலாக இருந்துவருகிறது.

மருத்துவ வசதிகள், வயதானவர்களுக்கு நிதியாதாரம், ஓய்வூதியம், தங்குமிட வசதி, தலைச்சாயம் முதலிய வசதிகள் அதிகரித்துள்ள இந்நாளில் (இந்த வசதிகள் வயதா னவர்கள் அனைவருக்கும் ஒரேபோல் கிடைக்கிறதென்று சொல்லமுடியாது என்பதும் உண்மையே) முன்பு அறுபது வயதே முதுமையாகக் கருதப்பட்ட நிலை மாறி இன்றைய 60 வயது 40 வயதின் அளவேயாகி யிருப்பதாகச் சொல்ல வழியுண்டு.

ஆனாலும் 60 – 90 வரையான அனைத்து வயதினரையும் முதியவர்கள் (மூத்த குடிமக் கள் அழகான விவரிப்பு!) என்ற ஒரே அடைமொழியில் அடையாளப் படுத்தும் போக்கே இன்றளவும் பரவலாக இருக்கிறது.

வயதானவர்கள் என்றால் ஏக்கத்தோடு தன் இளமைக் காலத்தைத் திரும்பிப் பார்த்துக்கொண்டேயிருப்பார்கள். தன்னால் இப்போது இதைச் செய்ய முடிய வில்லையே, அதைச் செய்ய முடியவில்லையே, தன்னை யாரும் கவனிக்க வில்லையே, தன்னோடு யாரும் பேசுவதில் லையே, தன்னை யாரும் பொருட் படுத்தவில்லையே, தன்னிடம் யாரும் அறிவுரை கேட்கவில்லையே – இப்படி ஏங்குபவர்களாகவே, அங்கலாய்ப்பவர் களாகவே வயதானவர்களைச் சித்தரிப் பதில் நிறைய பேருக்கு ஒரு சந்தோஷம்.

இப்படியிருக்கும் வயதானவர்களும் உண்டு என்பது உண்மைதான். ஆனால் இந்த அங்கலாய்ப்புகளும், ஆற்றாமைகளும் இளைய வயதினருக்கு இல்லையா என்ன?

சில நாட்களுக்கு முன்பு ஒருவர் முதுமை என்றால் பொய்ப்பல், ஹியரிங் எய்ட், மருந்து மாத்திரை, கைத்தடி என்று நிறைய வெளியாதரவுகளின் துணை யோடு வாழும்படியாகிறது என்று வருத்தப்பட்டிருந்தார். ஒருவகையில் அது உண்மைதான் என்றாலும் அப்படிப் பார்த்தால் இளம் வயதில் பவுடர், குறிப்பிட்ட உடைகள், சிகையலங் காரம், பர்ஃப்யூம், என்று பல தேவைப் படுகின்றனவே?

பிடிக்காத படிப்பு, அந்நியவுணர்வூட்டும் இடத்தில் வாழ்வாதாரத்திற்காக வாசம், என்று நிறைய சொல்லலாம்.

இந்த கையறு நிலையுணர்வுகளையெல்லாம் கடந்து தானே மாற்றுத் திறனாளிகள் தினசரி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்?

பத்மினி மேடமுக்கு இப்போது 90 வயதுக்கு மேலேயிருக்கும். ஆனால் வாழ்வை ஏக்கத்தோடு பின்னோக்கிப் பார்ப்பதோ, அங்கலாய்ப்பதோ அவரிடம் கிடையவே கிடை யாது. அவருக்குக் காலாறக் கடற்கரையில் நடப்பதும், கடலைப் பார்த்துக் கொண்டிருப் பதும் மிகவும் பிடிக்கும். பத்து வருடங்கள் முன்புவரை கூட தினசரி தன் நட்பினர் சிலரோடு போய்க் கொண்டிருந்தார். இப்போது முடியவில்லை. அது குறித்து மனதில் அவ்வப்போது தோன்றக்கூடிய ஒரு சிறு இழப்புணர்வு அங்கலாய்ப்பாக உருவெடுக்க அவர் அனுமதித்ததேயில்லை!

ஒவ்வொரு வயதுக்கும், பருவத்துக்கும் அதற்கான அனு கூலங்கள் உண்டு என்று பத்மினி கோபாலன் கூறியது எவ்வளவு உண்மை என்பதை 40 வயது களில் தனியாக இயல்பாக ஹோட்டலுக்குச் சென்று, யாரும் பார்ப்பார் களோ என்று self-conscious ஆக படபடப்பாக உணராமல் ஆற அமர ருசித்துச் சாப்பி டும் போது உணர்ந்திருக்கிறேன்!

70 வயதுகளில் இளையதலைமுறையினர் பயிலும் கணினிப் பயிற்சி மையத் திற்குச் சென்று கணிப்பொறி யைக் கையாளும் பயிற்சி பெற்றார் பத்மினி கோபாலன்!

சில வருடங்களுக்கு முன்பு வீதியோரம் வசிக்கும் ஏழைப் பெண்மணியொரு வரின் மகள் விபத்தாக கருவுற்ற போது அவளுக்கு உதவ எங்கோ தொலை தூரத்திலிருந்த அமைப்பு ஒன்றுக்கு தோழர் மோகன் தாஸின் உதவி யோடு அந்தப் பெண்ணையும் அழைத்துக் கொண்டு போய் அங்கே மணிக்கணக்காகக் காத்திருந்து அந்தப் பெண் ணுக்கு உதவ முடிந்த வழிவகைகளை அணுகி வேண்டினார் பத்மினி மேடம்.

இப்போது மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தும் தமிழ் படிக்கவே வராமலி ருக்கும் (தமிழ் வழியில் கல்வி பயின்ற) ஒரு இளம்பெண்ணுக்கு தமிழ் கற்றுத் தரும் வேலையில் இறங்கியிருக்கிறார்! எளிய தமிழிலான கதைப்புத்தகங்கள் இருக்கின்றனவா என்று என்னிடம் கேட்டிருக்கிறார்!

சமூகத்தின் அடித்தட்டு மக்களின் பிள்ளைகளுக்காக இயங்கும் அரசுப் பள்ளி களின் தர மேம்பாடு பற்றிப் பேசினால் ’உடனே தனியார் பள்ளிகள் மட்டும் ஒழுங்கா என்று கேட்க நிறைய பேர் கிளம்புகிறார்கள். இது ஏன் என்றே தெரிய வில்லை’ என்று ஆதங்கப்படுவார்.

(அவருடைய ஆதங்கமெல்லாம் சமூகம் சார்ந்ததாகத் தான் இருக்குமே தவிர அவருடைய வயது காரணமாக எழுவதாக இருக்காது என்பது குறிப்பிடத் தக்கது).

இன்றைய இளந்தலைமுறையினர் பலருக்கு (தனியார் பள்ளிகளில் பயிலும் பிள்ளைக ளுக்குக்கூட) தாய்மொழி யில் தங்குதடையின்றி வாசிக்கவும் எழுத வும் தெரியாத நிலை பரவலாக இருக்கிறது. இந்நிலை மாறவேண்டியது மிக அவசியம்.

மாண்டிசோரி கல்விமுறையில் ஒன்றரை அல்லது இரண்டு மாதங்களில் தமிழ் எழுதவும் வாசிக்கவும் பள்ளிமாணாக்கர்களுக்குக் கற்றுத்தர முடியும் என்று பத்மினி கோபாலனின் முன்முயற்சியில் உருவான அமைப்பின் வழி மாண்டிசோரி ஆசிரியைகளாக உருவாகியுள்ளவர்கள் சமூகத்தின் அடித்தட்டி லிருந்து வரும் பள்ளிப்பிள்ளைகளிடையே நிரூபித்திருக்கி றார்கள். இந்த வழி முறையிலான மொழிப்பயிற்சி பரவலாக்கப்பட்டால் நிறைய மாணாக்கர்கள் பயனடைவார்கள்.

பத்மினி மேடமைப் பார்க்கும்போது என்னால் புரிந்துகொள்ள முடிவது –

நம்மைப்  பற்றி  மட்டுமே  எண்ணாமல் நமக்கு வெளியே பார்க்கும்போது நம்மை அங்கலாய்ப்புகளும் தன்னிரக்க மும் அதிகம் பாதிக்காது.

எந்த வயதிலும் மற்றவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய முடியும்.

இன்னொருவரோடு போட்டிபோடுவதாய், மூன்றாம வரை பிரமிக்கவைப்ப தற்காக வாழ்வது என்ற மன நிலையை வளர்த்துக்கொள்ளக்கூடாது.

நம் வீட்டுக் குழந்தைகளையும் நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளிலான குழந்தைகளுக்கும் ஒரு நல்ல வீட்டுச் சூழல், பள்ளிச்சூழலை உருவாக்கித்தர நம்மால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

எதற்காகவும் மனதில் வெறுப்பும், ஆணவமும், கழிவிரக்கமும் மண்ட அனுமதிக்கலாகாது.

தன்மதிப்பை வளர்த்துக்கொள்ளவேண்டும்.

  •  
Series Navigationஉண்மையான உண்மையும் உண்மைபோலும் உண்மையும்…….தெளிவு! 3 குறுநாவல்கள். ஜனநேசன்.