இயலாமை !

காலை நடைப்பயிற்சியில்

அமைதியான சூழலை

கிழித்துப் போடுகிறது

அந்தக் கிளியின் அலறல்

வானத்தின் பொது அமைதி

பாழ்பட

அந்தக் கிளியைத்

துரத்துகிறது ஒரு காகம்

காகத்தைத் தடுக்கவோ

சுய இன நேயம் உணர்த்தவோ

கரைந்து கொண்டே

பின் செல்கின்றன

சில கிளிகள்

அபயக்குரல் நின்றபாடில்லை

கிளியின் தவிப்பு

என் மனத்தில் சிறகடிக்கிறது

தொலைக்காட்சியில் பார்த்த

புலி வாயில் சிக்கிய மான்

சிங்கம் பிய்த்தெடுக்கும் எருமையோடு

அந்தக் கிளியையும்

சேர்ந்து கொண்டுவிடுமோ ?

             ———-

Series Navigationநண்பனின் அம்மாவின் முகம்தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]