இயேசுவின் சீடர்கள் அவுஸ்திரேலியாவில் (12 Apostles) 

 

———————————————————————-

அவுஸ்திரேலியாவிற்கு இடம்பெயர்ந்த காலத்தில்  மூன்று  வருடங்கள் வேலை –  படிப்பு என  மெல்பன்,  சிட்னி நகரங்கள்  எங்கும்  அலைந்து திரிந்தபோது,  ஒரு நாள் எனது மனைவிக்கு வார்ணம்பூல்  மருத்துவமனையிலிருந்து வேலைக்கு வரும்படி தகவல் வந்தது.

 

 வார்ணம்பூல் என்ற இடத்தை அவுஸ்திரேலியா வரைபடத்தில் அதுவரையும் கேள்விப்பட்டதே இல்லை . அக்காலத்தில் நான் வேலையின்றி,  எனது  மிருக வைத்திய செய்முறைப்  பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்தேன்.

மனைவியை வேலைக்கு அழைத்ததும், பரபரப்பாக சிட்னியிருந்து மெல்பன் வந்து,   அதன்பின்பு  முந்நூறு கிலோமீட்டர்கள்  தூரம் மேற்குத்திசையில்  எமது  வாகனத்தில் வார்ணம்பூலை நோக்கிச்  சென்றபோது  அந்த ஊர்  அழகான நகரம் மட்டுமல்ல,  நீளமான  வெண் மணல் கடற்கரையையும்  கொண்டுள்ளது என்பதை அறியமுடிந்தது.  முக்கியமாக அந்நகரம்  உல்லாசப்பிரயாணிகள் வரும் இடம்  என்பதையும்  தெரிந்து கொண்டோம் .

அப்போது எமக்கு  ஏழு மற்றும் ஐந்து  வயதில்  இரண்டு குழந்தைகள்.  மனைவி சியாமளா,  புதிதாக  அவுஸ்திரேலியாவில் வேலை  வேலை செய்யச் சென்ற அந்த  மருத்துவமைனை    கிட்டத்தட்ட ஐம்பதினாயிரம் மக்களுக்கானது. 

 

அங்கு   அவசர சிகிச்சை,  அறுவை சிகிச்சை,  வெளிநோயாளர் பிரிவு எனப் பலவற்றையும் சுழற்சி முறையில்  பார்த்து  முடித்து சியாமளா வீடு திரும்பினாலும் அகத்தில் வைத்தியசாலை பின்  தொடரும்.  நோயாளிகளான பீட்டரின் இதயவலியும்,  மார்கிரட்டின் கான்சரும்,  மற்றும் ஜாக்கின் கால் முறிவும் நினைவுகளில்  ஊர்ந்தபடி,  புறத்தில்   ஆற்றின் மேல் உள்ள உறைபனியிலிருந்து வெளிவந்த   மீன் போன்ற குளிர்மையாக வீடு வந்து சேர்வார்.

 

நான், பிள்ளைகளைப்  பாடசாலையில் விட்டுவிட்டு,  அங்குள்ள மிருக வைத்தியசாலைக்குச்  சென்று அங்கிருக்கும்  மிருக வைத்தியர்களுடன் பண்ணைகளுக்குச் செல்வேன் அவர்களே  அவுஸ்திரேலியா அனுபவங்களை எனக்குத் தந்து ,  பரீட்சைக்கு உதவிய குருவானவர்கள்.  மிகுதி நேரத்தை வீட்டுச் சமையலிலும்   கடைகளுக்குச் செல்வதிலும்  செலவிடுவேன்.  மனிதர்களின் மன அழுத்தங்களை அளக்கும் கருவிகள் இல்லை என்பதால் சொற்கள் மட்டுமே இங்கு தராசாக உபயோகமாகிறது

 

அக்காலத்தில் பிள்ளைகளைக் கடற்கரைக்குக் கொண்டு சென்றாலும் அந்த மணற்பரப்பல் கால் புதைய நடக்கவோ தண்ணீரில் இறங்கிக்  கால் நனைக்கவோ எனது  மனதில் விருப்பம் அதிகம் தோன்றுவதில்லை.  பிள்ளைகளை விளையாடவிட்டுவிட்டு, அவர்களைப் பார்த்தபடி மணலில் குந்தியிருப்பேன்.

 

“ இந்த நாட்டின் நல்ல விடயங்களைப் புரிந்து கொண்டாலும் அதை அனுபவிப்பதற்குக் காலம் நேரம் வேண்டும். குடியேறி வந்தார்களுக்குச் செய்வதற்கு வேலை ,  குடும்பத்துடன் வசிப்பதற்கு வீடு என்று அமையும்வரை இந்த நாட்டின் சிறப்புகளைச் சந்தித்தாலும் அனுபவிக்க மனம் வராது.

 

மெல்பன் அழகான நந்தவனங்கள் கடற்கரைகள் நிறைந்த நகரம். இங்கு செல்வதற்கு எவரும் பணம் வசூலிப்பது கிடையாது. ஆனால்,  இவற்றை  அனுபவிப்பதற்கு அழகியல் உணர்வு கொண்ட அமைதியான மனநிலை வேண்டும்.”

 

அசோகனின் வைத்தியசாலை நாவலில்

 

மெல்பனில் இருந்து மேற்கேயுள்ள ஜீலோங் என்ற நகரத்திலிருந்து  வார்ணம்பூல் செல்லும் மார்க்கத்தில்  அவுஸ்திரேலியா  தெற்கு  கரையோரத்தில்,  கடலை அணைத்தவாறு செல்லும் பாதை,  மலைகள் குன்றுகள் மீது  பாம்பாகச்  செல்லும்போது  கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது.

 

ஒரு பக்கத்தில் தென்துருவக் குளிர் காற்றை முதுகில் சுமந்தபடி தரையை அணைத்து  நுரை ததும்ப முத்தமிடும்  நீலக்கடலின் அலையோசையுடன் ,  மறுபக்கத்தில் எந்த பருவத்திலும் இலை உதிர்ந்து  நிறம் மாறாத நித்திய கன்னியான யூகலிகப்டஸ் மரங்கள் கொண்ட  பாதுகாக்கப்பட்ட    தேசிய வனங்கள் உள்ளன . இந்தப்பாதையில் கார் செலுத்துவது வித்தியாசமான அனுபவமாக  இருக்கும்

 

இந்தக் கடற்கரைப் பகுதியில்தான் ஆதிகாலத்து கோரல் உயிரினங்கள் வாழ்ந்து  படிந்த சுண்ணாம்பினால் உருவாகிய பாறைகள் கடலுக்குள் உள்ளன.  இவையே இயேசுவின் சீடர்கள் (12 Apostles) எனப்படும்

ஆஸ்திரேலியாவில் உல்லாசப்  பிரயாணிகளாகப் பெரும்பாலானவர்கள்   வந்து செல்லும் பகுதியாகும் . கடந்த வருடங்களில் சீன பிரயாணிகள் இங்கு சாரி சாரியாக பஸ்களில் வந்து செல்வார்கள். தற்போது உள்ளுர்வாசிகளுக்கு மட்டுமே.

 

வழி நெடுக கடற்கரையிருந்தாலும் அப்பல்லோ பே(Apollo Bay ) என்ற சிறிய நகரம்,  மிக நீண்ட வெண் மணல் கொண்ட கடற்கரை பிரதேசம்.  அதுபோன்று  போட் கம்பல் (Port Campbell)  என்ற நகரத்தில் கடல்  அலையற்ற வளை குடாவாக உள்ளது.  அதிக நீச்சல் பயிற்சியற்றவர்கள் நீந்துவதற்கு  வசதியான இடமாகும்.

 

வார்ணம்பூலிலிருந்து மெல்பனுக்குக் குடிவந்த பின்னர்  நண்பர்களை  அங்கு அழைத்து செல்வதுண்டு. இறுதியாக பத்து வருடங்களுக்கு  முன்பு,   தற்போதைய இந்திய  மக்களவை அங்கத்தவர் தமிழச்சி  சுமதி தங்கபாண்டியனுடன் நானும் சியாமளாவும் போனோம்.

 

சமீபத்தில் கொரோனாவால் மெல்பன் ஒரு வருடமாக மூடப்பட்டபோது,  தென் துருவக்காற்றைச் சுவாசிக்கும் ஆவலில் மூன்று நாட்கள் இந்த வழித்தடத்தில் காரில் சென்றோம்.

அவசரமான பயணமாக  இல்லாது,  மூன்று இரவுகள்  தங்கிவரும் பிரயாணமாக அமைய வேண்டுமென நினைத்தேன்.   அத்துடன் புகைப்படக்  கலையில் சிறிது பயிற்சி எடுப்பதற்கும் இந்தப் பயணத்தை பிரயோசனப்படுத்த நினைத்தேன்.

முதல் நாள் மெல்பனில் இருந்து 200 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அப்பல்லே பே என்ற கடற்கரை நகரத்தில் தங்கினோம். கடந்த பத்து வருடங்களாக இப்பகுதியில் சீனர்களே முக்கியமான உல்லாசப் பிரயாணிகள் என்பதால் நாங்கள் தங்கிய மோட்டல் உட்பட பல தங்குமிடங்கள் அவர்களுக்கே சொந்தமானது .

 

வெளிநாட்டிலிருந்து  1.5 மில்லியன் அவுஸ்திரேலியா டொலர்களை  இங்கு முதலிடத்  தயாரானால்  நீங்கள் இங்கே  தொழில் புரிவதற்கான விசா எடுக்க  முடியும். அதை வைத்து மோட்டல் ,  மில்க் பார்  முதலான சிறிய வியாபார நிறுவனங்களை   வாங்கி,  பின்பு நிரந்தரவதிவிட  அனுமதி பெறமுடியும் . இந்தப் பணத்தை  கொங்கொங்கில் ஒரு மத்தியத்தர குடும்பத்தினரால் இலகுவாக ஏற்பாடு செய்யமுடியும். சிலர் அந்தப் பணத்தை மீண்டும் அங்கே அனுப்பி மேலும் ஒருவரை இங்கு அழைப்பார்கள் .

 

தற்பொழுது சீனர்கள் மட்டுமல்ல வெளிநாட்டவர்கள் எவருமற்ற கொரோனாக்காலம் . வாடிக்கையாளர்கள் வரவு குறைந்தமையால் நாங்கள்  அன்று  தங்கிய விடுதியின் உரிமையாளர்களது  முகங்களில்   சந்தோசமில்லை.  அவர்களுக்கு ஆங்கிலம் புரியாது .  உடல்மொழியால் விடயங்களைப் பரிமாறினோம்.

 

மாலையில் கமரா சகிதம் கடற்கரைக்குச் சென்றேன்.  அதிகமானவர்கள் நாய்களுடன் வந்த அஸ்திரேலியர்கள் . அத்துடன் பல இளம் இந்தியக் குடும்பங்களையும் அங்கே  காணமுடிந்தது. இந்தியர்களில்  பெரும்பாலானவர்கள் மாணவர்களாக வந்து தங்கியவர்கள்.

 

அதிகாலை ஐந்தரை மணிக்குச் சூரிய உதயத்தைப் படமெடுக்கச் சென்றேன்.  ஆழமான தென்கடல்.  அதன் கரையின் மேற்குத்திசையிலிருந்து படமெடுக்க எனது கமராவை வைத்துக்கொண்டேன்.

இதுவரை அதிகாலையில் விழிக்கும்  வழமையற்ற நான்   படம்  எடுப்பதற்காக சென்றேன் என்பதால் சியாமளாவிற்குச் சந்தோசம்.   கடற்கரை எங்களுக்கே சொந்தமாகி இருந்தது. ஏழு மணிவரையும் எவருமில்லை .

மதியத்தில் மீண்டும் ஆரம்பித்த  பிரயாணம் நூறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள போட் கம்பல் நோக்கி  இருந்தது. 

 

 

 

அங்கிருந்து  12 கிலோமீட்டர் தொலைவில் 12  இயேசுவின் சீடர்கள் பாறைகள்  உள்ளது . அதிகாலையில் மட்டுமல்ல அன்று முழுநாளும்  சூரியன் தலைமறைவானதால் நான் எதிர்பார்த்தவாறு  படங்கள் வரவில்லை .  நாங்கள் வார்ணம்பூலில் முன்னர்  இருந்தபோது  12  ஆக இருந்த இயேசுவின் சீடர்கள் பாறைகள்  தற்பொழுது கடலரிப்பால் ஒன்றை   இழந்துவிட்டது . இந்தப் பாறைகளை விட அந்தப் பகுதியில் சுண்ணாம்பு கற்பாறை  லண்டன் பிரிஜ் வடிவத்தில் அமைந்துள்ளது .  கடல் அலைகளால் காலம் காலமாக மிகப் பொறுமையாகச் செதுக்கப்பட்ட கற்பாறைகள்,  குகைகள் எனப் பல வடிவங்களிருந்தன. அமைதியான அழகான பகுதி.  ஆனால்,  முன்னைய காலத்தில் இந்த கடற்பகுதி கப்பல்களுக்கு ஆபத்தானது .

 

மீண்டும் போட் கம்பல் வந்தபோது,  மழையுடன் குளிரும் இணைந்து வந்துவிட்டது   ஆனாலும் இலங்கையில் பாசிக்குடாவை நினைவு படுத்தும் போட் கம்பலில் குளிக்காது திரும்ப  மனமில்லை. மழையுடன்  கடலில்  இறங்கியபோது உடல் விறைத்தாலும்  சிறிது நேரத்தில்  பழகிவிட்டது. அரைமணி நேரக் கடலாடுதல் எங்கள் ஊர் கடலின் பொச்சத்தைத் தீர்த்தது.

தொடர்ந்து எங்கள் பயணம் வார்ணம்பூலை நோக்கிச்  சென்று அங்கு நாங்கள் வாழ்ந்த காலத்தில்  அறிமுகமானவர்களைச் சந்தித்து,  அவர்கள் வீட்டில் இரவு  தங்கினோம்.   அடுத்தநாள் வார்ணம்பூலுக்கு  அருகிலிருந்த எரிந்தணைந்த டவர் கில்(Tower Hill))  எனப்படும் எரிமலையை பர்த்துவிட்டு,   கடற்கரையற்ற மற்றைய பாதையால் மெல்பன் வந்தோம்.  வாகனத்தின் மீட்டர்காட்டி   ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தை 80 மணிநேரத்தில் கடந்ததாகக் காட்டியது.

 

வீட்டுக்காவல் என்பார்களே!  அதை மீறிய உணர்வு விழித்திரையிலும் மனத்திரையிலும் உருவாகியிருந்தது.

Series Navigationவடக்கிருந்த காதல் – மூன்றாம் பாகம்எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் – “ அந்நியர்கள் “ என்ற  நாவலுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசு