இரயில் நின்ற இடம்

Spread the love

 

இரயில் எதற்கோ நிற்க

’இரயில் நின்ற இடமாகும்’

பெயர் தெரியாத ஒரு பொட்டல்வெளி.

 

இரயில் விரித்த புத்தகம் போல்

வெளியின்

இரு பக்கங்களிலும்

விரிந்து காணும் காட்சிகள்.

 

பாதி பிரபஞ்ச ஆரஞ்சுப் பழமாய்

ஆகாயம்

கவிழ்ந்து கிடக்கும்.

 

சடுதியில்

’மூடு வெயில்’ இறங்கி வந்து

கருவேல முள்ளில் கிழிபட்ட காயத்தில்

மறு கணத்தில் ’சுள்ளென்று’

உக்கிரம் கொள்ளும்.

 

கண்ணுக்கெட்டிய தொலைவில்

சின்னப் புள்ளிகள்

உயிர் கொண்டு நகர்வது போல்

சில ஆடுகள் மேயும்.

 

ஆட்டிடையன்

சூடிய தலைப்பாகைக்குள்

சூரியனைச்

சுருட்டி வைத்திருப்பான்.

 

வெளியின் காதைத் திருகிய

வெற்றிக் களிப்பில் சுற்றுவதாய்ப்

பறவைகள் திரியும் மேல்வானில்.

 

’பராக்கு’ பார்த்துக் கொண்டு

’சும்மா’

நீட்டிக் கிடக்கும் இரயில்

இன்னும்.

 

கிடந்து தவிக்கும் என் மனம்

எப்போது மீண்டும்

இரயில் புறப்படுமென்று.

கு.அழகர்சாமி

Series Navigation“செங்கடல்”என்ன ஆச்சு சுவாதிக்கு?