இறுதிப் படியிலிருந்து – துரியோதனன்

Spread the love

 

                                        ப.ஜீவகாருண்யன்                         

ஹிரண்யவதி நதிக்கரையில் குருக்ஷேத்திரக் களத்தில் பதினெட்டு நாட்கள் நீடித்த பெரும் போர் முடிவுக்கு வந்து விட்டது. பிதாமகர் பீஷ்மரை, துரோணரை, கர்ணனை எல்லாம் சேனாதிபதிகளாக நியமித்துப் பதினோரு அக்ரோணிய சேனை கொண்டு போரிட்டும் பலனில்லாமல் போய் விட்டது. நடந்து முடிந்த பெரும் போரில் பத்து நாட்கள் தளபதியாக நீடித்த தாத்தா பீஷ்மர், ‘எதிரிலிருப்பவர்களும் பேரர்கள்தான்!’ என்றான பிறகும்     தன்னாலியன்ற அளவில் சளைக்காதவராகத்தான் கடும் போர் புரிந்தார். பீஷ்மரையடுத்து களத்திலிறங்கிய துரோணரை, கர்ணனை கொஞ்சமும் குறை சொல்ல முடியாது. துரோணர், கர்ணன் மட்டுமல்ல போர்க்களத்தில் கெளரவ அணிக்காகக் களமிறங்கி ஆயுதத்தைக் கையிலெடுத்த அனைவரும் தமது கடமையைத் தவறாமல் தான் செய்தனர். ஏழு அக்ரோணிய சேனை, பதினோரு அக்ரோணிய சேனை இருதரப்பிலும் மனிதர்கள் மட்டுமென்றில்லாது மனிதக் கட்டளைக்கு மண்டியிட்டவைகளாய்க் களத்திலிறங்கிய பல ஆயிரக்கணக்கான யானைகளும் குதிரைகளும் பலியாகிவிட்டன. கூடவே, எண்ணற்றவை என்றில்லாவிட்டாலும் மனிதர்களைப் போலவே நிறைய மிருகங்கள் கூன், குருடு, செவிடாகி விட்டன; முடமாகி விட்டன. அதி ரதர்களாக, மகா ரதர்களாக களத்தில் நின்றவர்களெல்லாம் களப்பலியான பிறகும் துணிவு மிகுந்த சிங்கத்தைப் போன்ற துச்சாதனன் உட்பட தம்பிமார்கள் அனைவரும் பலியான பிறகும், ‘இன்னும் இணையில்லா வில்லாளி கர்ணனிருக்கிறான். வெற்றித் தேவதை நம் வசமாவதற்கு வாய்ப்பிருக்கிறது!’ என்றுதான் எண்ணினேன்.

ஆனால், கர்ணனின் அநியாய இறப்புக்குப் பிறகு வெள்ளம் தலை மீறிப் போய்விட்ட நிலைக்கு ஆளானேன்.

பீஷ்மர் வீழ்ந்ததையடுத்து  நேர்ந்த பதினைந்தாம் நாள் போரில் ஆச்சாரியர் துரோணரை எதிர் கொள்ள இயலாமல் அவதியுற்ற யுதிஷ்டிரன், போரில் அசுவத்தாமன் என்னும் யானை இறந்ததைக் காரணமாக வைத்து கிருஷ்ணனின் ஆலோசனையின் பேரில், ‘அசுவத்தாமன் இறந்தான்!’, ‘அசுவத்தாமன் என்னும் யானை இறந்தது!’ என்று இரு வகையாக பொய்யும் மெய்யும் கூறி, ‘அசுவத்தாமன் இறந்தான்!’ என்பதை உரக்கக் கூறி  துரோணரை நிலை குலைய வைத்து அவரைக் கொடூரமாகக் கொன்று முடித்தான்; தீயவன் திருஷ்டத்துய்மன் ஆச்சாரியரை வாளினால் சிரச்சேதம் செய்வதற்கு வழி வகுத்துக் கொடுத்தான். துரோணரையடுத்துத் தளபதியான கர்ணன் அப்போது என்னிடம், “கர்ணன் நானிருக்க ஏன் கவலைப் படுகிறாய், துரியோதனா?’ என்று வெற்றிக்கனியை எனக்கு உரித்தாக்குபவனாக வெகுவாக நம்பிக்கையூட்டினான். ஆனால், இணையற்ற வீரனும் எனதுயிர் நண்பனுமான கர்ணன், போரில் கிருஷ்ணனின் கீழ்த் தரமான நடவடிக்கையால் இறந்து முடிந்த பிறகு, பொன், பொருள், உடல், உள்ளம் எனப் பலவகைக் காரணங்களுக்காட்பட்டுப் படுக்கையில் எளிதாக ஆண்களை மாற்றிக் கொள்ளும் அழகிய இளம் தாசியைப் போன்ற வெற்றித் தேவதை என்னை அணைக்க விருப்பமின்றி விலகி விட்டதை என்னால் உணர முடிந்தது.

வெற்றித் தேவதை என்னை விட்டு விலகிய பிறகு வேறு வழியில்லாதவனாக சல்லியனை சேனாதிபதியாக்கினேன். தங்கை மாத்ரியின் மைந்தர்களாக நகுலன், சகாதேவன் எதிரணியிலிருக்க, படை திரட்டி வந்த நேரத்தில்-வழியில் பாண்டவர்கள் அளிப்பது போல் ஏமாற்றி எனது ஏவலர் அளித்த உணவைப் புசித்த நன்றிக் கடனுக்காக என் அணியில் நின்று விட்ட – உப்பிட்டவனுக்காக உயிர் விடத் துணிந்து விட்ட -நல்ல மனிதர் சல்லியன், மாமன் சகுனியுடன் சேர்ந்து எதிர் நின்ற சேனையுடன் மிகக் கடுமையாகத்தான் போரிட்டார். போர்க்களத்தில் நானும் என்னாலியன்ற அளவில் அவருக்குத் தோள் கொடுத்துப் பார்த்தேன். ஆனாலும் பலன் பூஜ்யமாகிவிட்டது. யுதிஷ்டிரன் கையால் சல்லியனும் சகாதேவன் கையால் மாமன் சகுனியும் கொலையுண்டு எதிரணியின் பக்கம் வெற்றித் தேவதையை வழியனுப்பி வைத்தார்கள்.

இறுதி இறுதியாக துரியோதனன் என்னைத் தவிர்த்து விட்டால் கெளரவ சேனையின் கடைசிக் கண்ணீர்த் துளிகளாக துரோணரின் மகன் அசுவத்தாமனும் கிருபரும் மட்டுமே மிச்சமாகி நிற்கிறார்கள். ‘சல்லியனும் மாமன் சகுனியும் களத்தில் தங்கள் இன்னுயிரை இழந்து வீழ்ந்த பிறகு, ‘இன்னும் எதற்காகக் களத்தில் நிற்பது?’ என்னும் எண்ணத்துடன் யாரும் அறியாத வகையில் குருக்ஷேத்திரக் களத்திலிருந்து சிறிது தூரம் தள்ளியிருக்கும் இந்த சமந்த பஞ்சக மடுக்கரையில் ஒளிந்து கொண்டிருக்கிறேன். மரங்கள் அடர்ந்துச் சூழ்ந்த மடுக்கரையின் நீர்மடி குளிர்ச்சியாயிருக்கிறது. மடுக்கரை நீர்மடி குளிர்ச்சியாயிருக்கிறது. மனம் கொதித்துக் கொண்டிருக்கிறது. களத்தில் நின்றவன் காணாமல் போய் விட்ட சூழலில் அரசன் என்னை எங்கெங்கோ தேடியலைந்த கிருபர், கிருதவர்மா, அசுவத்தாமன் மூவரும் இதோ நான் ஒளிந்திருக்கும் இடத்திற்கு நேர் எதிரிலிருக்கும் ஆலமரத்தடியில் வந்து நின்று குரலோயக் கூப்பிட்டனர். அசுவத்தாமன்,  ‘பாண்டவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன். வெளியே வா!’ என்றான். இருக்குமிடத்திலிருந்து இம்மியும் நகராமல், ‘இப்போது எங்கேயும் வர விருப்பமில்லை. அசுவத்தாமா, முடியுமானால் நீ தலைமை தாங்கி பாண்டவர்களோடு மோது!’ என்றேன். தேடி வந்தவர்கள்  சலிப்புடன் திரும்பி விட்டனர் அசுவத்தாமன், கிருபர், கிருதவர்மாவைத் தான் என்னால் ஏமாற்ற முடிந்தது. யுதிஷ்டிரனும் அவன் தம்பிமார்களும் கீழ்மகன் கிருஷ்ணனும் நிச்சயமாக எப்படியும் என்னைக் கண்டு பிடிக்க வருவார்கள்; மூக்கில் வியர்க்கும் கழுகுகளாய்க் கண்டு பிடித்து விடுவார்கள். பயப்பட வேண்டியதில்லை. கெளரவ அணியின் வெற்றியைத் தீர்மானிப்பதற்கு இன்னும் ஒரு வழியிருக்கிறது. கடைசிக் கடைசியாகக் கெளரவ அணிக்கு வெற்றியைத் தேடிக் கொடுப்பவனாக–ஒற்றை மனிதன்-துரியோதனன் நானிருக்கிறேன். உடல் வலுவாயிருக்கிறது. மனம் திடமாயிருக்கிறது. கருணையின்றி நெருங்கப் பார்க்கும் காலனையும் தூர விரட்டக் கூடியதாகக் கையில் கதாயுதம் இருக்கிறது. தேடி என்னைக் கண்டடைய இருக்கும் சகோதரர்கள் அய்வரில் யாரேனும் ஒருவர், தவறாமல் என்னுடன் துவந்த யுத்தத்தில் இறங்க வேண்டும். பீமன் ஒருவனைத் தவிர மற்ற சகோதரர்கள் நால்வரும் என்னெதிரில் நிற்க முடியாது. கிருஷ்ணனாலும் என்னை எதிர் கொள்ள முடியாது. கொல்லன் உலைத் துருத்தியாய்த் தகிக்கும் எனது மூச்சுக்காற்று ஒரு சிறு நொடியில் எதிரில் நிற்பவர்களைப் பஞ்சுத் துகள்களாக எரித்து விடும். மற்றபடி என்னுடன் நேர் நின்று மோதும் தகுதி கொண்டவனாகப் பெருந்தீனிக்காரன்–ஓநாய் வயிற்றுக்காரன்- விருகோதரன் பீமன் ஒருவன் இருக்கிறான். உண்மையைச் சொல்வதென்றால் ஊசித்தாடி பீமன், உடல் ஆகிருதியில்–பலத்தில் வேண்டுமானால் என்னிலும் சற்றே மேம்பட்டவனாக இருக்கலாம். கதாயுதப் போரில் ஈடு இணையற்ற என்னுடன் பீமன் போராடத் தகுதி கொண்டவன் தான். ஆமாம், போராடத் தகுதி கொண்டவன் தான். ஆனால், பீமன் என்னை வெற்றி கொள்ளத் தகுதி கொண்டவனில்லை. பஞ்சவர் வருகையை எதிர் நோக்கித்தான் பசி கொண்ட மிருகமாகக் காத்திருக்கிறேன். என்னைப் போலவே எனது கைக் கதாயுதமும் பீமனின் கதாயுதத்தைக் கபளீகரம் செய்ய ஆவலுடன் காத்திருக்கிறது.

மனிதர்கள் ஒவ்வொருவரும் எத்தனையோ முறை இறந்துதான் வாழ்கிறார்கள். நானும் எத்தனை முறைதான் இறந்திறந்து வாழ்ந்து கொண்டிருப்பது? வாழ்க்கையில் நான் பல முறை இறந்து விட்டேன்.

‘துரியோதனனின் பாழும் மண்ணாசையால்தான் பல ஆயிரம் உயிர்கள் பலியான இந்தப் பெரும் போர் நிகழ்ந்தது!’ என்று இன்று என் மீது பலர் குற்றம் சுமத்துகிறார்கள். பைத்தியக்காரர்கள். ‘குருக்ஷேத்திரப் போருக்கு துரியோதனனின் மண்ணாசைதான் காரணம்!’ என்று என் மீது குற்றம் சுமத்துகிறவர்களில் –அது ஆணாக இருக்கட்டும் அல்லது பெண்ணாக இருக்கட்டும் – யாரேனும் ஒருவர்,  ‘எனக்கு மண்ணாசையில்லை!’ என்று என் எதிர் நின்று கூற முடியுமா? பூமியில் மனிதர்களாகப் பிறந்து விட்டவர்களில்,  ‘மண், பொன், ஆண், பெண் ஆசையற்றவர்’ என்று யாரேனும் ஒருவரை, ஒரேயொருவரைச் சுட்டிக் காட்ட முடியுமா?

மண், பொன், ஆண், பெண் ஆசையை மையங் கொண்டு சுழல்கின்ற இந்த மாபெரும் உலகத்தில் துரியோதனன் நான் ஒருவன்தான் மண்ணாசை கொண்டவனா? துரியோதனன் நான் மண்ணாசை கொண்டவன் என்பதை மறுக்கவில்லை. ஆனால், துரியோதனன் எனது மண்ணாசை ஒன்று மட்டுமே இந்தப் போருக்குக் காரணமில்லை. அப்படியானால் நடந்து முடிந்து விட்ட இந்த மாபெரும் போருக்குக் காரணம்? ‘அன்றாடம் உலகில் நடக்கும் நல்லதும் கெட்டதுமான நானாவிதக் காரியங்களில் ஏதேனும் ஒரு காரியத்திற்கு இதுதான் காரணமென்று ஒன்றை மட்டுமே அறுதியிட்டுக் கூறிவிட முடியாது’ என்னும் உண்மையில் நிகழ்ந்து முடிந்து விட்ட இந்த நீசப் பெரும் போருக்கும் துரியோதனன் எனது மண்ணாசை ஒன்றை மட்டுமே காரணமாக்கிவிட முடியாது.

நிகழ்ந்து விட்ட போருக்குக் காரணங்கள் அனேகம்.

‘பாண்டவர்களுக்குப் பாதி ராஜ்ஜியம் கொடு!’ எனக் கேட்டுத் தூது வந்த துவாரகை கிருஷ்ணனிடம் அன்று நான் தனியே ரகசியம் போலக் கேட்டேன். ‘கிருஷ்ணா, நான் காந்தாரி வயிற்றில் திருதராஷ்டிரனின் வித்தாகப் பிறந்தவன். சகோதரி துச்சலை உட்பட மற்ற பன்னிரண்டு சகோதரர்களும் காந்தாரி வயிற்றில் திருதராஷ்டிரனின் வித்தாகப் பிறந்தவர்கள் தான். எனது மற்ற சகோதரர்களும் எனது தாயின் சகோதரிகளுக்கு, மற்றும் சில பெண்களுக்கு சந்தேகத்திற்கிடமில்லாமல் திருதராஷ்டிரன் மூலம் பிறந்தவர்கள். ஆகவே, நான் உட்பட எனது சகோதரர்கள் அனைவரும் குரு வம்ச வழியில் நாடாளத் தகுதியானவர்கள். ஆனால்,  ‘பாண்டவர்கள்’ என்று நீ குறிப்பிடும் அந்தப் பஞ்சவர்கள் – உனது அத்தை குந்திக்கும் மாத்ரிக்கும் பிறந்த அந்த அய்ந்து சகோதரர்கள் – ‘பாண்டுவின் வித்தாகப் பிறந்தவர்கள்’ என்று உன்னால் உறுதிபடக் கூற முடியுமா?‘

எனது கேள்வியின் கூர்மையில் திகைத்து, திருதிருவென விழித்து பதில் சொல்ல முடியாதவனாக அன்று கிருஷ்ணன் வாயடைத்து நின்றதை இப்போது இந்தச் சமந்த பஞ்சக மடுக்கரையில் நின்று யோசிக்கும் நிலையிலும் எனக்குள் சிரிப்புப் பொங்குகிறது.

ஒரு வழியில்-வகையில் குரு வம்சத்துக்குரியதான பரந்து பட்ட ராஜ்ஜியத்தை அந்த வம்சத்து வித்துக்கள் ஆள்வது என்பது சரியானது: முறையானது. திருதராஷ்டிரனும் பாண்டுவும் முனிவனுக்குப் பிறந்தவரே ஆயினும் பாட்டி சத்தியவதியின் தலை மகன் கிருஷ்ண துவைபாயன வியாசரின் பிள்ளைகள் என்னும் முறையின் தொடர்ச்சியில் பிசகில்லாமல் நானும் எனது இளவல்களும் நாடாளத் தகுதியானவர்கள். வம்ச முறையில் வழுவாமல் நாங்கள் நாடாள தகுதியானவர்கள் என்னும் உண்மையின் ஊடே பாண்டுவுக்குப் பிறக்காமல் இமயமலையின் கந்தமாதனத்து ஓய்வில் குந்திக்கும் மாத்ரிக்கும் மலை மனிதர்கள் மூலம் பிறந்த அய்வர் எந்த வகையில் நாடாளத் தகுதியானவர்கள்?

நடந்து முடிந்த இந்தப் பெரும் போரில் கெளரவர்கள் நாங்கள் பெருந் தோல்வியுற்றதற்கு, ‘அத்தையின் புதல்வர்களுக்கு ஆதரவு!’ என நின்ற கிருஷ்ணன் ஒரு வகையில் முக்கியக் காரணமாகின்றான். அண்ணன் பலராமரை அடுத்திருந்த நிலையிலும் அண்ணனையும் மீறியவனாக கிருஷ்ணன் எந்நாளும் எனக்கு எதிரியாகவே செயல் பட்டிருக்கிறான்.  தங்கை சுபத்திரையை எனக்கு திருமணம் செய்து வைக்க பலராமன் எண்ணம் கொண்டிருந்த நிலையில் தந்திரமாக சுபத்திரையை அர்ச்சுனனுக்கு மணம் முடித்து வைத்ததும், பலராமர் வழியில் கிருதவர்மா போன்றவர்களை முதன்மையாகக் கொண்ட யாதவ நாராயணீ சேனை எனக்குக் கிடைத்த பிறகும் சாத்யகி போன்றவர்களின் துணையுடன் என்னை எதிர்த்துக் களமாடியதும் கிருஷ்ணன் எனக்கெதிராக நடத்திய அநியாய அடுக்குகளின் ஒரு சில உதாரணங்கள்தான். எந்நாளும் எனக்கெதிராக இருந்த-இருக்கின்ற கிருஷ்ணனைப் போலவே பெருந்தீனிக்காரன் பீமனும் எனக்குற்ற பெரும் எதிரியாகத்தான் நேற்றும் இன்றுமாக நிலை கொண்டிருக்கிறான்.

என்னிலும் ஒரு மாத காலமே மூத்தவன் என்னும் அளவில், என்னிலும் சற்று ஆகிருதி கொண்டவனாக இருந்த காரணத்தில் என்னுடைய இளவயதில் குந்தி – மாத்ரியின் புதல்வர்கள் அய்வரில் உடல் வன்மையில் எனக்கும் என் சகோதரர்களுக்கும் நேர் எதிரியாய் அச்சுறுத்தலாய் இருந்த பீமன் தனது உடல் பலத்தை முன் வைத்துக் கடைசி வரையிலும் எனக்குக் கோபமூட்டுபவனாகவே இருந்த உண்மை நான் மட்டுமே அறிந்த ஒன்று.

‘அண்ணா, மதங் கொண்ட யானையைப் போன்ற தனது உடல் பலத்தால் எப்போதும் நம்மைப் பயமுறுத்திக் கொண்டிருக்கின்ற, நீச்சல் விளையாட்டில் என்னையும் சகோதரர்களையும் தனது அக்குளில் இறுக்கி அடக்கி மூச்சு திணறச் செய்கின்ற, தரை விளையாட்டில் பஞ்சுப் பொதிகளைப் போல் நமது சகோதரர்களைத் தூக்கிப் பந்தாடுகின்ற – தர தரவெனத் தரையில் தேய்த்திழுக்கின்ற, மரக்கிளைகளில் விளையாடுகின்ற சகோதரர்களை மரத்தையும் கிளைகளையும் மது குடித்த குரங்காக உலுக்கி கனிகளைப் போலக் கீழே வீழ்த்துகின்ற மூர்க்கன் பீமன் இப்போது யானைக் கொட்டகையில் தனியே இருக்கின்றான். இதுதான் அவனை எதிர் கொள்வதற்குச் சரியான நேரம். வா! நாமிருவரும் சேர்ந்து அவனை-அந்த அரக்கனை ஒரு கை பார்ப்போம்! முடியுமெனில் எமலோகம் சேர்ப்போம்!’

வலிந்திழுத்த துச்சாதனனின் அழைப்புக்கு உடன்பட்டு யானைக் கொட்டகையில் பீமனை எதிர்கொள்ளச் சென்று அவன் தாக்குதலில் சகோதரர்கள் இருவரும் நிலை குலைந்த போது ஆபத்பாந்தவனாக அங்கே வந்து,  ‘அய்யோ! காப்பாற்றுங்கள்! துரியோதனன், துச்சாதனனை துஷ்டன் பீமனிடமிருந்து காப்பாற்றுங்கள்!’ என்றலறிய நண்பன் கர்ணனின் குரல் கேட்டு எங்கிருந்தோ ஓடோடி வந்த கிருபர்,  பீமனின் கொடும் பிடியிலிருந்து எங்களைக் காப்பாற்றியது நேற்று நிகழ்ந்தது போல இருக்கிறது.

‘என்றோ-எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னான நிகழ்வின் வழியில் பீமனுக்கெதிராக எனக்குள் கிளர்ந்த குரோத விதை முளை விட்டு, மெல்ல வளர்ந்து, பல நூறு கிளை விட்டு பெரியதோர் விருட்சமாக குருக்ஷேத்திரப் போராகி விட்டது! என்று இன்று நான் சொன்னால், ‘பெரும் போரில் தோல்வியுற்றுத் தனியனாக இறுதிப் படியிலிருந்து துரியோதனனன் ஏதேதோ பிதற்றுகிறான்!’ என்று எத்தனையோ பேர் என்னை எளிதாக ஏளனம் செய்வர்.

ஏளனம் என்று சொல்லுகின்ற போதுதான் நடந்து முடிந்து விட்ட இந்தப் போரின் பின்னணியில் பெண்ணொருத்தியின் ஏளனமும் காரணமாக இருப்பது இப்போது என் நினைவுக்கு வருகிறது.

ஆமாம், கறுப்புக் கட்டழகி! காந்தக் கண்ணழகி திரெளபதியின் ஏளனம்.

இன்றோ, நேற்றோ அல்ல. என்றோ நிகழ்ந்த சம்பவம். அரக்கு மாளிகையில் தப்பி, திரெளபதியை கைப்பிடித்து, காண்டவ வனம் எரித்து, இந்திரப் பிரஸ்த நகரமைத்து அடுத்தடுத்துப் பல அரிய காரியங்கள் செய்து பாதி ராஜ்ஜியத்திற்கு உரிமையாளனாகப் பட்டாபிஷேகம் செய்து கொண்ட யுதிஷ்டிரன், ராஜசூய யாகக் கொண்டாட்டம் நிகழ்த்திய போது நிகழ்ந்த சம்பவம். விருந்தாடி முடித்துப் பளிங்கு மண்டபத்திலிருந்து வெளியே வந்தவன் தரையைத் தண்ணீர்ப் பரப்பு என நினைத்து ஆடையை மேலுயர்த்தி நடந்த போது, எதிரிருப்பது பளிங்குக்கல் என நினைத்து தடுமாறி தண்ணீரில் விழுந்த போது என்னைப் பார்த்து திரெளபதி சிரித்த ஏளனச் சிரிப்பு! எளிதாக மறந்து விடக்கூடியதா பீமன், நகுலன் போன்றவர்களின் சேர்க்கை விரவிய  அந்த ஏளனச் சிரிப்பு? ‘தந்தைதான் கண்ணற்றவராக இருக்கிறார் என்றால் தனயரும் கண்ணற்றவராகத்தான் தடுமாறுகிறார்!’ என்று அருகிலிருந்த தோழியிடம் அவள்-அந்த திரெளபதி மொழிந்த ஏளன உரை!

‘என்னை வெல்வதற்கான சுயம்வரத்தில் வில்லில் நாணேற்ற முடியாமல்  நாணமுற்று அஸ்தினாபுரம் திரும்பிய அரை மனிதர்தானே இந்த துரியோதனன்!’ என்னும் எண்ணச் செருக்கல்லாமல் வேறு எங்கிருந்து வந்திருக்கும் ஒரு இருபது வயதுப் பெண்ணுக்கு எதிர் நிற்கும் ஆணை எள்ளி நகையாடும் ஏளனச் சிரிப்பு – ஏளனப் பேச்சு?

‘சூது விளையாட்டில் அனைத்தையும் இழந்து விட்ட யுதிஷ்டிரனுக்கு  ‘போனால் போகட்டும்’ என்று மீண்டும் நாடு கொடுத்து விட ஓரஞ்சாரமாய் எனக்குள் எழுந்த எண்ணம் திரெளபதியால்தான் அன்று தடைபட்டது’ என்று இன்று சொன்னால் யார் நம்புவார்கள்? கர்ணனின் தூண்டுதல் ஒரு பக்கம் இருந்தது உண்மையே ஆனாலும், ராஜசூய யாகம் நடந்த நாளில் திரெளபதி மீது நான் கொண்ட வன்மம் தான் ஆண்கள் நிறைந்த சபையில் அனைவரும் அறிய அவளின் துகிலுரியும் சங்கதியாக வடிவம் பெற்றது’ என்னும் என் மன உண்மையையும் யாரும் நம்பப் போவதில்லை. அன்று அந்த மாபெரும் சபையில் துகிலுரியும் சங்கதி, துச்சாதனன் மூலம் வெற்றிகரமாக நிறைவேறியிருந்தால் நேற்று நிகழ்ந்து முடிந்த தாயாதிகளுக்கிடையிலான பெரும் போர் ஒரு வேளை நிகழாமலே கூடப் போயிருக்கலாம். ஆனால், அன்று அந்தச் சபையில் நிர்வாணப்படுவதிலிருந்து எப்படியோ தப்பித்த திரெளபதி, நிகழ்ந்து முடிந்த இந்தப் பெரும் போருக்குத் தானும் ஒரு காரணமாக–கருப் பொருளாக மாறிவிட்டாள்.

எப்போதும் பாண்டவர்களுக்கு இணக்கமாக இருக்கும் சூதன் விதுரன், சூது -துகிலுக்குப் பிறகு என்னை, எனது தந்தையின் எதிரில் வெகுவாக இழித்துப் பேசினான்.

‘ ‘நட்சத்திரங்களும் மறைந்து உலகை அந்தகாரம் ஆட்சி செய்யும் வேளையில் ஒநாய், நரி போன்ற மிருகங்களின் ஊளை போன்ற வித்தியாசமான ஓலத்துடன் இவன் பிறந்திருக்கிறான். உலகமே இருளும் அஞ்சி ஒளியும் இருட்டாகிக் கிடக்கிறது. காட்டு விலங்குகள் மகிழ்ந்தும் பயந்தும் கூக்குரலிடுகின்றன. ரத்த மழை பெய்கிறது. பேய்க்காற்று சுற்றிச் சுழன்றடிக்கிறது. பூமி நடுங்குகிறது. மயானங்களில் பேய்கள் நாட்டியமாடுகின்றன. துர் நிமித்தங்கள் கூடிய பிறவி இவனால் பூமியில் எண்ணவியலா விபரீதம் நிச்சயம் நாளை ஏற்படும்!’ என்கிறார்கள் அனுபவம் நிறைந்தவர்கள்.

ஒரு குடும்பம் வாழ ஒருவனைத் தியாகம் செய்யலாம். ஒரு கிராமம் வாழ ஒரு குடும்பத்தைத் தியாகம் செய்யலாம். ஒரு தேசம் வாழ ஓர் ஊரையே தியாகம் செய்யலாம். உறவுகளையும் உற்ற தேசத்தையும் காக்க குல நாசம் செய்யப் பிறந்திருக்கும் இந்தக் குழந்தையைத் தியாகம் செய்! இந்தக் குழந்தையை எங்கேனும் கண்காணாத இடத்தில் கொண்டு போய் விடு!’ என்று அன்று என்னாலியன்றவரை எடுத்துச் சொன்னேன்.  கேளாக் காதினனாய் இருந்து விட்டாய். இன்று பாண்டவர்கள், பாஞ்சாலிக்கு இவனால் பாதகம் விளைந்திருக்கிறது! எதிர் வரும் நாளில் இவனால் ஏதோ விபரீதம்-பெரும் விபரீதம் விளையப் போகிறது! இப்போது என்ன செய்யப் போகிறாய்?’

எப்போதுமே எனக்கும் என் சகோதரர்களுக்கும் எதிரியாகவே இருந்து விட்ட விதுரன் துவாரகைக் கிருஷ்ணன் பாண்டவர்கள் சார்பாக தூது வந்த நாளில் நான் அவனை சபையில் இழித்துப் பேசிய காரணத்துக்காக தனது வில்லை வெட்டியெறிந்து, ‘நடக்க இருக்கும் போரில் நான் பங்கேற்க மாட்டேன்!’ எனக் கூறி வெளியேறியவன்; போர் நடந்த இந்தக் காலத்தில் எனது கதாயுதப் பயிற்சிக் குரு பலராமருடன் சேர்ந்து தேசாந்திரியாகத் திரிகின்றவன்.

விதுரன் என்னைக் குறித்து எத்தனையோ தருணங்களில் எத்தனையோ மனிதர்கள் அறிய குற்றங்கள்-குறைகள் கூறியதற்கு எந்த நாளிலும் நான் எள்ளளவும் கவலை கொண்டவனில்லை.     

ஆனாலும், ‘காரணங்களில்லாமல் காரியங்களில்லை!’ என்னும் உண்மையின்படி பாண்டவர்களுக்கு ஆதரவாக விதுரன் என்னை இழித்துப் பேசியதற்கு நிச்சயமாக ஏதேனும் காரணம் இருக்கும் என்றே எண்ணுகிறேன். இது மட்டுமில்லாமல் குருக்ஷேத்திரப் போருக்கான காரணங்களாக இதுவரை கூறியவற்றுடன் இன்னும் பல காரணங்களை என்னால் வரிசையிட்டுச் சொல்ல முடியும்.

ஆனால், இது குறித்து மேலும் சொல்வதற்கு நேரமுமில்லை; விருப்பமுமில்லை.

தூரத்தில் ரதச் சக்கரங்கள் கரகரத்து வருகின்ற சத்தம் கேட்கிறது. எதிருற இருப்பது வாழ்வு, சாவு இரண்டில் ஏதேனும் ஒன்றுக்கான போராட்டம். துரியோதனன் நான் தெளிவாகத்தான் இருக்கிறேன். திடமாகத்தான் இருக்கிறேன். எனது கைக் கதாயுதமும் என்னைப் போலவே திடமாகத்தான் இருக்கிறது. நிகழ இருப்பது நிச்சயமாக வாழ்வு. சாவு இரண்டில் ஒன்று மட்டுமே! எதிருற இருக்கும் இரண்டில் எனக்குரியதாகப் போவது எது என்பது குறித்து எள்ளளவும் எனக்குக் கவலையில்லை! நான் எதிரியை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!          

                ***

 

 

                                                 .     

Series Navigationஇறுதிப் படியிலிருந்து – காந்தாரிநீங்க ரொம்ப நல்லவர்