இலைகள்

ஆதி மனிதனின் ஆடை

மழையின் விதை

வேரின் விழி

பூமியின் விசிறி

புன்னகையின் பொருள்

வடிவங்களின்

வண்ணங்களின்

வாசனைகளின்

களஞ்சியம்

கோடிக்கோடி உயிர்களின்

குடை

உடை

வீடு

கூடு

மருந்து

விருந்து

இலைகள்

இல்லாதிருந்தால்

செவ்வாயாகி யிருக்கும்

பூமிப் பிரதேசம்

மொத்த உயிர்களும்

செத்துப் போயிருக்கும்

காற்றுவெளியை

கழிவாக்கும் உயிர்கள்

கழுவிப் போடும் இலைகள்

இயற்கையின்

குளிப்பிடம் இலைகள்

‘இலைகள்

உதிக்கும்

உழைக்கும்

உதிரும்’

ஓர் இலைபோல் வாழ்

ஈருலகம் உனக்கு

‘துக்கம்

ஏக்கம்

பயம்

சோகம்

அத்தனையும்

அர்த்தமற்றுப் போக’

ஓர் இலையை உற்றுப் பார்

அங்கே

கொட்டிக் கிடக்கும்

ரேகைகள் எல்லாம்

கொடை ரேகைகள்

‘மரங்கள்

பூக்கள்

கனிகள்

எல்லாமும் போற்றப்படும்

ஆனால் இலைகள்…….’

இலைகள் தியாகிகள்

இறந்த பின்னும்

வாழத் தெரியும்

இலைகளுக்கு

நம் இலக்கிய வரலாறு

இலைகள் தந்த பேறு

வள்ளுவனின்

சிலேட்டுப் பலகை

இலைகள்

அமீதாம்மாள்

Series Navigationமற்றொரு தாயின் மகன்மொழிபெயர்ப்பு கவிதை – சாரா டீஸ்டேல்