இளமுருகு கவிதைகள் — ஒரு பார்வை ‘ கோமுகி நதிக்கரைக் கூழாங்கல் ‘ தொகுப்பை முன் வைத்து…

 

இளமுருகு யார் ? எங்கே இருக்கிறார் என்ற குறிப்பு எதுவும் இப்புத்தகத்தில் இல்லை. சில கவிதைகளுக்குத்

தலைப்பு இல்லை ; சில தலைப்புடன்… காதல் ஒருவனிடம் என்னென்ன மாறுதல்களைத் தரும் எனப்

பேசுகிறது முதல் கவிதை ‘ மாறுதல் ‘ !

உன் சுட்டு விரல் தொழுதலே

மாறுதலின் தொடக்கம்

என் துயரப் படிவுகளிடையே

நகை அதிர்வுகள் எழும்பின

—- என்னும் கவிதையின் தொடக்கத்திலேயே கவிமொழி அமைந்து கவனத்தை ஈர்க்கிறது.

அவிந்த சினத்தீ நுனியில்

அன்பு நாவுகள் அசைந்தன

எரி நாற்றக் கரியின் உள்ளிருந்து

மென் சிறகுகள் விரிந்தன

—- துயரம் வாட்ட வாட்ட உட்புகைச்சல் எரி நாற்றத்தை உருவாக்கியது என்பது புதுமையான வெளிப்பாடு.

சொல்லடங்கிய மொழி

உன் இதழ் ஏறிப் புதைந்தது

பின்னெழும் நிலவொளி துலக்கிக் காட்டும்

கோபுர அழகென உருவு தோன்றிற்று

—- ‘ மனத்தில் காதல் அரும்பியது ‘ எனச் சாதாரணமாகச் சொல்வதை இளமுருகு அழகாகக் கவிமனப்

பாங்கில் முன் வைக்கிறார். ‘ கோபுர அழகு ‘ என்பது மனச்சிலிர்ப்புக்குக் குறியீடாக அமைந்துள்ளது.

நீ மூட்டிய கனலில்

அனைத்தையும் வார்த்துவிட்ட

ஒளி சூழ்ந்த அக்கணமே

—– என்ற வரிகள் ஆண் , தன்னை அவளிடம் முழுமையாக ஒப்படைத்துவிட்ட காதலின் இனிய

பிராந்தியத்தை நமக்கு உணர்த்துகிறது.

உண்மையிலும் உண்மை

பின்

எனதென்று எதுவுமில்லை என்னிடம்

—- முத்தாய்ப்பு ஆழ்ந்த காதலை வெளிக்காட்டுகிறது. இக்கவிதையில் சொற்செட்டு நன்றாகக்

கையளப்பட்டுள்ளது. கவிதையின் கட்டமைப்பு நன்றாக உள்ளது. இவர் நடையில் முதிர்ச்சி தெரிகிறது.

‘ மௌனம் ‘ என்றொரு கவிதை. ஒருவனுக்கு உறவினர்களால் மனத்துயரம் ஏற்பட்டுள்ளது என்பதுதான்

கவிதைக் கரு. இதை விளக்க இவர் வீசிய சொற்களில் ஒரு நல்ல கவிதை வலைப்பட்டிருக்கிறது.

இரைச்சல்களின் நடுவே

தலை குனிந்து மௌனமாய் நான்

உறவுச் சொற்கள் அமுக்கிப் பிசாசுகளாகின்றன

கோர்த்து நடந்த சொற்கள் குரல்வளை

தடவுகின்றன

செத்தொழிந்த எல்லா மனிதர்களுக்குமான அழுகை

என் தலையில் கொட்டுகிறது

—- நான்கு வரிகளில் மூன்று படிமங்கள் அமைந்துள்ளன. தொடர் படிமம் சிறப்புக் கூறுதான். கடைசிப்

படிமம் புதியது ; அழகானது.

கெக்கலிச் சிரிப்புகள் அந்தரத்தில் விசிறியடிக்கின்றன

பார்வை அனல்கள் இதயக் குருதியைத் தீய்க்கின்றன

—– இதற்கு அஞ்சாமல் மண்ணைத் தட்டி எறிந்துவிட்டு நடப்பேன் என்கிறார்.

‘ சருகு மூடிய மனம் ‘ என்ற கவிதை காதல் சோகத்தை அழகாகப் பதிவு செய்கிறது.

மங்கலாய் தோன்றுகிறாய் இன்று

கண்ணுக்குள் கனவாய் விளைந்த பொழுது

ஒளிர்ந்த வண்ணக் கலவைகளை வாரி இறைத்து

அழிந்துவிட்ட ஓரக்கோடுகளை எடுத்தெழுதிச்

சித்திரமாக்கிவிடப் பார்க்கிறேன்

—- முதல் வரியிலேயே ‘ இது கடந்த கால ஏக்கம் ‘ என்ற பொருள் தெளிவாகிறது. மேற்கண்ட பத்தி

முழுவதுமே நேர்த்தியான சொல்லாட்சியுடன் பளிச்சிடுகிறது. ‘ ஓரக்கோடுகள் ‘ என்பது புதிய சிந்தனை !

‘ வியர்வை ஊற்றுகின்றன தூரிகை நார்கள் ‘ — இந்த வெளிப்பாடு அசாதாரணமானது.

மகிழ்வின் நீர்ப்பரப்பில் மிதந்த

இரவின் ஏதோ ஒரு கணத்தில் உதித்து

உதிர்ந்துவிட்ட கவிதை வரிகளை

நாளெல்லாம் எண்ணிக்

கோர்த்திவிட முயற்சிக்கிறேன்

—- மகிழ்ச்சியை நீர்ப்பரப்பில் பார்ப்பது புதிய சிந்தனை !

அகப்படாது நழுவுகின்றன புகைபடிந்த சொற்கள்

காய்ந்த மரக்கோல்களினூடே பரப்பிக் கிடக்கும்

சருகு மூடிய வெற்று நிலமாயிற்று மனம்

—- முதல் வரி சோகம் படிந்த வெளிப்பாடு. அடுத்த வரிகளில் உவமை நன்றாக அமைந்துள்ளது.

வற்றிய உடல் கொண்டோடும் முயலின் கண்

உயிர்ப்பாய்

உன்னைப்பற்றிச் சொல்ல ஒன்று

எப்போதும் நினைத்திருப்பதையும்

எப்போதும் பார்க்கத் துடிப்பதையும் தவிர

வேறொன்றையும் வேண்டாது உன் அன்பு

—- என்பதில் முதல் வரியில் இயலாமை தெளிவாகத் தெரிகிறது.

‘ கடவுளின் பீடம் ‘ என்ற கவிதை நாத்திகக் கொள்கையை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது.

‘ நாட்கள் ‘ — காதல் பிரிவைக் கைப்புடன் சொல்கிறது.

வெட்டப்பட்ட கால்களை

இழுத்து நகர்கிறது காலை

—– என்று கவிதை விரக்தியுடன் தொடங்குகிறது.

வெறுமை மாரடித்துக்

கதறிப் பற்றுகிறது மாலை

—- என ஒப்பாரித் தொனி கேட்கிறது. ஏனென்றால் மனம் சிதறுகிறது. எப்படி ? ‘ மணலாய்ச் சிதறிய

மனசோடு ‘ என்கிறார் இளமுருகு !

அழைப்பு மணிக்காய் எழுந்தோடிக்

கண்ணெரியக் கழிகிறது இரவு

—- என்றவர் கவிதையை இப்படி முடிக்கிறார்.

நீயற்ற நாட்கள்

ஏதோ போகிறது பொருளற்று

காதல் பிரிவை , அதன் சலிப்பை , உச்சம் தொடுகிற மதிரிப் பதிவு செய்துள்ளார் இளமுருகு.

‘ மயானச் சாலை ‘ என்னும் கவிதையும் மேற்கண்ட கவிதையின் தொடர்ச்சிபோல் அமைந்துள்ளது.

” பேசிக் கொண்டிருந்த போது ‘ என்று நாம் சாதாரணமாகச் சொல்வதை வித்தியாசமாகச் சொல்கிறார்

கவிஞர்.

சொல்லிறைத்து நடந்த பொழுதுகளில்

—- என்பது புதுமையும் நயமும் கொண்ட வரி ! துயரத்தை , ‘ வெந்து போயிற்றென் கண்ணீர் ‘ என்கிறார்.

டீ குடிப்பதையும் நயமாகச் சொல்ல முடிகிறது இவரால். ‘ கை வேரோடிய தேநீர்க் கோப்பையில் ‘ என்பது

நல்ல வெளிப்பாடு. இக்கவிதையில் மொழிலாவகம் இறைந்து கிடக்கிறது. எனவே கவித்துவம் எளிதில்

வசப்படுகிறது.

‘ மின்சாரமற்ற இரவு ‘ கவிதையும் ரசிக்கத் தக்கதே !

பல்நிற நாக்குகளால் தடவித்தடவி

விடிவிளக்குகள் தின்றுவிட்ட

கனவுகளின் எச்சத்தையும் இனிப் பெறுவேன்

— கவிமன ஊற்றின் சுரப்பு நயம் காட்டுகிறது. ‘ மின்மினித் தோழமைச் சிறகுகளில் பயணம் ‘என்பதும் அசாதாரண வெளிப்பாடு. இளமுருகு கவிதைகள் படித்து ரசிக்கத் தக்கவை. இவர் பிரபலமாகாமல் போன தெப்படி ?

 

Series Navigation‘நறுக்’ கவிதைகள்கதை சொல்லி .. நிகழ்ச்சி