உணர்வுடன் இயைந்ததா பயணம்?

சியாமளா கோபு 

 

அத்தியாயம் 1 

பொதுவாக நாம் வீட்டை விட்டு வெளியே போவது என்பது, முதல் காரணம் அக்கம்பக்கம் கடைகளில் வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை விலைக்கு வாங்கி வருவதற்காக தான். 

இரண்டாவது, நம் சொந்த பந்தகளின் வட்டத்தில் கல்யாணம், காது குத்து மொட்டை சடங்கு  போன்ற சுபகாரியங்களுக்கும் இறப்பு போன்ற துக்க நிகழ்வுகளுக்குமானதாக இருக்கும். 

அடுத்த கட்டமாக நம் ஊரில் நடக்கும் தேர் திருவிழாவிற்கானதாக இருக்கும். குறைந்தது பத்து நாட்களுக்கு வெளியே தெருவிலே ஏகக் கொண்டாட்டமாக இருக்கும்.

வேண்டுதல்கள், காணிக்கை செலுத்துதல், பரிகார பூஜை என்று ஆன்மீகம் சார்ந்ததாகவும் சில நேரங்களில் நாம் பிரயாணிப்பது உண்டு. 

குடும்பத்துடன் விடுமுறையை ஓய்வாக கழிப்பதற்கு சுற்றுலா செல்வதும் உண்டு. 

நாலு இடங்களுக்கு போக வேண்டும். நான்கு விஷயங்களைப் பார்க்க வேண்டும். நான்கு விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணி பயணம் மேற்கொள்வது ஒன்று உண்டு. 

இத்தகைய பயணம் என்பது வீட்டுக் கவலையற்ற, நல்ல பொருளாதார நிலை, நல்ல உடல்நலம்  என்பதை பொறுத்தே மேற்கொள்ளக் கூடிய ஒன்று. எல்லோருக்குமே பிடித்தமான ஒன்று. ஆனால் எல்லோருக்கும் அதுப் போல போவதற்கு இயல்வதில்லை. மனதிற்குள் அதற்கான சிறு ஏக்கம் இருந்து கொண்டேதானிருக்கும். ஆனால் அதிர்ஷ்டவசமாக சிலருக்கு சில நேரங்களில் இத்தகைய சந்தர்ப்பங்கள் வாய்ப்பதுண்டு. அதைப் போல எனக்கும் ஒரு வாய்ப்புக் கிடைத்தது.

எங்கேயோ போவதற்கு கிளம்பி, எங்கே போவது என தெரியாமல், எதையோ பார்த்து, எதையெதையோ செய்து என்று ஒரு அதிரி புதிரியான ஒரு பயணமாக இருந்து விடக் கூடாது. மனசிற்கு நிறைவைக் கொடுக்கக் கூடியதாக. வாழ்நாள் காலமெல்லாம் நினைவில் வைத்துக் கொள்ளத் தகுதியான, அடுத்தவருக்கு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி கொள்ளக் கூடிய வகையில்  இருக்கக் கூடிய ஒரு பயணத்தை திட்டமிடுதல் வேண்டும்.

அதனால், நம் பயணத்தை எங்கே தொடங்குவது என்பதை விட எதன் அடிப்படையில் தொடங்குவது என்று தீர்மானித்துக் கொள்ளுதல் நலம். நானும் அதைப் போல தீர்மானித்தேன். பண்டைய தமிழகத்தின் வளமை மிக்க சரித்திரத்தைப் பின்புலமாக கொண்ட அமர காவியமான கல்கியின் பொன்னியின் செல்வனே அன்றி எது நம்மை மனம் நிறைய வைக்கும்? வந்தியத்தேவனின் பாதையில் மட்டுமன்றி சோழனின் சரித்திரம் சொல்லும் இடங்களையும் பயணித்தேன்.

வந்தியத்தேவனின் பாதையில் கதை ஆரம்பிக்கும். அவன் பயணித்ததாக வர்ணிக்கப்பட்ட இடங்களில் என் பயணம் தொடங்கும். தொடரும். சரி. அன்றைய சம்பவங்கள் நடந்ததாக சொல்லப்பட்ட இடங்கள் இன்று சிறு சிறு கிராமங்களாக பழைய சரித்திரத்தின் எச்சங்களாக நின்று போய் விட்டிருக்கிறதே. அதன் சாட்சியாக அங்கே கோயில்கள் மட்டும் நம் சரித்திரத்தை இன்னும் நமக்கு விளக்கிக் கொண்டு காலம் கடந்தாலும் கரையாத கற்றளிகளாக நின்று கொண்டிருக்கிறதே. அதை நோக்கியே என் பயணத்தை ஆரம்பித்தேன். 

ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் ஆயிரம் வருடங்களுக்கும் மேற்பட்ட கோயில்களின் ஆன்மீக நம்பிக்கை சார்ந்த விவரங்கள் கூகுள் விக்கிப்பீடியாவில் படிக்க கிடக்கும். எனவே அதைப் பற்றி எழுதாமல் நம் பண்டைய சரித்திரத்தின் எச்சங்களாக, கலாச்சாரத்தின் நீட்சியாக, இன்றைக்கும் நின்று கொண்டிருக்கும் கோவில்களின் நம் உணர்வுபூர்வமான பிணைப்பை மட்டுமே எழுத தொடங்குகிறேன்.

இது உங்களுக்கு ஒரு நிறைவை கொடுக்குமானால் அதுவே என் நோக்கம் நிறைவேறியதாக கொள்வேன். சோழ சரித்திரத்தில் ஆர்வமும், பொன்னியின் செல்வனின் கதை போன பாங்கில் விருப்பமும், படிப்பதில் ஆர்வமும் கொண்ட வாசகர்களுக்கு இந்த பயணக்கட்டுரை சுவையூட்டும் என்றே நம்பி எழுத தொடங்குகிறேன். 

 

அத்தியாயம் 2 

அதற்கு முன்பு என் வார்த்தையாக பொன்னியின் செல்வனை சுருக்கமாக சொல்லி விடுகிறேன். அப்போது தான் சம்பவங்கள் நடந்த இடங்களுக்குப் போகும் போது உங்களுக்கு கதையின் பின்புலம் புரியும். 

கிறிஸ்து பிறப்பிற்கு சில நூறாண்டுகளுக்கு முன்பே, பூம்புகாரை தலைநகராகக் கொண்டு  பெருமையுற்று விளங்கிய முற்கால சோழர்கள் தாழ்ந்து போனதற்குப் பிறகு, கி.பி. ஒன்பதாம் நூறாண்டின் நடுப்பகுதியில் மீண்டும் உதேவகத்துடன் கிளர்ந்து எழும்பினார்கள் சோழர்கள். 

இடைகால சோழர்களின் முதலாவது விஜயலாய சோழன். இவன் மகன் முதலாம் ஆதித்தன், அவன் மகன் முதலாம் பராந்தகன், இவனுடைய முதல் மகன் ராஜாதித்தன் இறந்து போக ரெண்டாவது மகன் கண்டராதித்தன், இவன் மனைவி செம்பியன் மாதேவி பட்டத்துக்கு வருகிறார்கள். இவர்களுக்குப் பிள்ளை இல்லாமல் போனதால் தம்பி அரிஞ்சயனும் பின்பு அவன் மகன் சுந்தர சோழனும் அரசாள்கிறார்கள். காலம் போன காலத்தில் இவர்களுக்கு பிறக்கும் மகன் தான்  மதுராந்தக சோழன்.

சுந்தர சோழனின் பிள்ளைகள் ஆதித்த கரிகாலன், மகள் குந்தவை பிராட்டியார், மகன் அருண்மொழித் தேவன் என்னும் ராஜராஜன். பொன்னியின் செல்வன் இவன் தான். கதையில் இவன் அருண்மொழித் தேவன் என்றே குறிப்பிடப்படுகிறான்.

சுந்தர சோழர் வியாதியுறவே அவரையும் அரண்மனையும் நிர்வகிப்பதற்கு சோழ தனாதிகாரி பெரிய பழுவேட்டரையர் அவர் தம்பி சேனாபதி சின்ன பழுவேட்டரையரும் பொறுப்பெடுத்துக் கொண்டிருந்தனர்.

பொதுவாக இன்றைய காலத்தின் சட்டப்படி, ஒரு மனிதனுக்கு இருக்கும் சொத்துக்களை அவனுக்குப் பிறக்கும் அத்தனை பிள்ளைகளுக்கும் சமமாக பங்கு வைப்பார்கள். ஆனால் அன்றைய சாம்ராஜ்யங்களை ராஜாவின் பிள்ளைகள் அனைவருக்கும் பங்கிட மாட்டார்கள். 

மாறாக,  ஒரு நாட்டை ஆளும் ராஜாவிற்குப் பிறகு ராஜாவின் முதல் மகன், அவனுக்குப் பின் அவனுடைய மூத்த மகன் என்று தான் அரசர்களின் அட்டவணை போகும்.    

இந்த வம்சாவளி அட்டவணைப்படி சுந்தர சோழர் மரணப்பட்டால் அவருக்குப் பின்பு பட்டத்திற்கு உரியவர் கண்டராதித்தனின் மகன் மதுராந்தகர் தான். இதிலும் ஆசிரியர் கல்கி ஒரு முடிச்சிட்டிருப்பார். சேந்தன் அமுதன் என்னும் கதாப்பாத்திரம் தஞ்சை தளிக்குளத்தார் கோவிலுக்கு பூ கொடுக்கும் சிவத்தொண்டு செய்யும் சிவபக்தன். இவனே செம்பியன் மாதேவியின் சொந்த மகன் என்றும் இப்போது மதுராந்தகர் என்னும் பெயரில் செம்பியன் மாதேவியின் மகனாக இருப்பவன் போலி என்றும் கதையை கொண்டு வந்திருப்பார் கல்கி. 

இந்த கதை நடக்கும் காலக்கட்டத்தில்  தஞ்சையை ஆண்டுக் கொண்டிருக்கும் சுந்தர சோழனுக்கு பின்பு அவன் மகன் ஆதித்த கரிகாலன் பட்டத்திற்கு வருவான் என்று நாட்டில் பேச்சு ஓடிக் கொண்டிருந்தது.

ஒருபுறம் பழுவேட்டரையர்கள் ஆதரவுடன் மதுராந்தகன் பட்டத்திற்கு வர மற்றைய குறுநில மன்னர்கள் சம்மதிக்கிறார்கள். மறுபுறம் ஆதித்த கரிகாலன் தன்னுடைய பதவியை விட்டுக் கொடுக்க சம்மதிக்கிறான்.

கிழப் பருவமெய்திய பெரிய பழுவேட்டரையரின் இளம் வயது மனைவி நந்தினி. ஆதித்த கரிகாலன் பாண்டிய மன்னன் வீரபாண்டியன் தலையை கொய்து விடுகிறான். அந்த வீரபாண்டியனுக்கும் நந்தினிக்கும் உள்ள உறவு என்ன என்பதை புதிராகவே கொண்டு செல்கிறார் ஆசிரியர் கல்கி.

வீரபாண்டியனின் மரணத்திற்கு ஆதித்தனை பழிக்குப் பழி வாங்க முனைப்புடன் இருக்கிறாள் நந்தினி. வீரபாண்டியனின் விசுவாசிகளான கேரளத்து முன்குடுமி அந்தணர்களான சோமன் ரவிதாசன் அவன் தம்பி பரமேஸ்வரன் இவர்கள் நந்தினியுடன் சேர்ந்து கொள்கிறார்கள்.

சம்புவரையரின் கடம்பூர் மாளிகையில் இதற்கான சதியாலோசனை நடக்கிறது. அங்கே தான் ஆதித்த கரிகாலன் கொல்லப்படுகிறான். இவனைக் கொன்றது யார்? 

ஆதித்த கரிகாலன் நண்பன் வந்தியத்தேவன். இவன் தான் இந்த கதையின் கதாநாயகன். பல சாகசங்கள் செய்தும் வீரம் காட்டியும் இவன் முடிக்கும் காரியங்கள் அநேகம். கதையின் போக்கை அவ்வப்போது மாறுகிறவன் இவனே. பிற்காலத்தில் குந்தவை பிராட்டியாரை மணப்பவனும் இவனே.  

வந்தியத்தேவன் காஞ்சியில் இருக்கும் ஆதித்த கரிகாலனிடமிருந்து தஞ்சையில் இருக்கும் சுந்தர சோழருக்கு ஓலைக் கொண்டு செல்வதில் இருந்து தான் கதை தொடங்குகிறது.     

மகாபலிபுரத்தில் ஆதித்தனும், தாயின் தகப்பன் மலையனூராரும் நண்பன் பார்த்திபேந்திரனும் பேசிக் கொண்டிருப்பதாக ஒரு காட்சி உண்டு.   

வந்தியத்தேவனுக்கு இணையான மற்றொரு சுவையான கதாபாத்திரம் ஆழ்வார்க்கடியான். முன் குடுமியும் பருத்த சரீரமும் கொண்டவனாக கையில் தடியுடன் திரிபவன். ஆழ்ந்த வைஷ்ணவ பக்தன். எப்போதும் சைவர்களைக் கண்டால் தொந்த யுத்தத்திற்கு கிளம்பி விடுவான். இவன் நந்தினியை எடுத்து வளர்த்த அண்ணன் முறையாக வேண்டும். இவன் ஒற்றன். யாருக்கு என்பதை கடைசி வரை புதிராகவே கொண்டு சென்றிருப்பார் ஆசிரியர் கல்கி. 

ஓரளவிற்கு முன்கதையை சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்லி விட்டேன் என்ற நம்பிக்கையில் என் பயணத்தை தொடங்குகிறேன்.

வாழ்க சோழ வளநாடு! 

Series Navigationக்ரியா ராமகிருஷ்ணனின் பின்கட்டு என்ற கதைத் தொகுப்புஅணுவியல் துறை வெப்ப சக்தி உற்பத்தியால் குளிர் & வெப்ப நாடுகள் பெறும் உறுதிப் பயன்பாடுகள்