உதிரும் சிறகு

நீலவானம்
இலக்கு இருக்கிறதா
செல்லும் மேகத்திற்கு
பழுத்த இலை உதிர்கிறது
இனி அவை எங்கெங்கு
பயணப்பட வேண்டியிருக்குமோ
அலை மெல்ல
கிசுகிசுத்தது
கரையோ மறுதலித்தது
காற்று வேகமெடுத்தது
பூக்கள்
ராஜபாட்டை விரித்தது
பறவைகள் கூட்டம்
மேற்கு நோக்கி பறந்தது
வானம் சூரியனுக்கு
விடை கொடுத்தது
விருட்சத்தின் நிழலில்
விழுந்த விதை
முளைவிடுமா
மணி காட்டும் கடிகாரத்தில்
நொடி முள்ளுக்கு
ஓய்வு இல்லை
மனிதன் மனிதனாக இருந்தால்
கடவுளின் இருப்பு
கேள்விக்குறியாகாதா
மரணப் புதிருக்கு
விடை சொல்லுபவர்கள் யார்?

Series Navigationநிகழ்வுசூல் கொண்டேன்!