உபதேசம்

எஸ். சிவகுமார்

 

காலமெனும் கலயத்தில் கண்டெடுத்த வயிரங்கள்

வாலிபப் பருவத்தில் வசப்பட்ட நேரங்கள் !

நிலையில்லா காயம் நிலையென்றே எண்ணாது

அலைபாயும் உன்மனதை அடக்கி ஆள் என்றிட்டார்.

 

கலைக்கென்றும் கண்ணுண்டு காதலுக்குத்தான் இல்லை

அழகை ரசித்திட்டால் அழிவேதும் இலையென்றேன்.

 

அறியாமல் பேசுகிறாய்ச் சிறுபிள்ளை நீயென்றார்

அழகுக்கு மறுபெயர் ஆபத்து என்றிட்டார்.

 

கலைப்பார்வையோடு ஒரு தொலைப்பார்வையும் இருந்தால்

காபந்து தேவையில்லை ஆபத்தும் இலையென்றேன்.

 

பெரியோர்சொல் கேளாத பிள்ளை உனக்கிங்கே

தொலைப்பார்வை எங்கே? உனைத் தொலைத்திடாதே என்றார்.

 

தன்னுயிரை நேசிப்பவன் தற்கொலைதான் துணிவானோ

கண்ணகி வழிவந்த கற்பரசன் நானென்றேன்.

 

நம்பிக்கை வைத்தென்னை

நடுவழியில் விட்டுவிட்டார்

நடந்துவந்த பாதையைத்தான்

நான் உனக்கு இன்றுரைத்தேன்-

 

பாட்டன் உரைத்தமொழி

பேரன் உனக்கின்று

மீட்டும் நான் உரைக்க

நேரம் இது நேரம் !

Series Navigationஎலும்புத் திசு ( bone marrow ) – பேராசிரியர் நளினியின் தேவை..நள்ளிரவின்பாடல்