உயரம்

Spread the love

ரிஷி
(
லதா ராமகிருஷ்ணன்)

uyaram 

 

எது உன் உயரம்?

குட்டையாய் இருப்பதாய் மற்றவர்களை மட்டம்தட்டிக்கொண்டேயிருப்பதா?

எது உன் உயரம்?

அன்றொருநாள் அன்பின் மிகுதியால் கட்டிப்பிடித்து முத்தமிட்டவளை
ஆசைதீரத் தொட்டுத்தீண்டிவிட்ட பின்
தட்டுக்கெட்டவள் என்று நட்பினரிடமெல்லாம் சொல்லித் திரிவதா?

எது உன் உயரம்?

விட்டுவிடுதலையாகி நிற்கும் சிட்டுக்குருவியின் சிறகு முறித்து
சிறுகூண்டிலடைத்துவிட்டு
தட்டுச்சோறு தந்து அதன் ரட்சகன் என்று மார்தட்டிக்கொள்வதா?

எது உன் உயரம்?

மொட்டைத்தலையைப் பார்த்து எள்ளிநகையாடிவிட்டு
உன் வழுக்கை அழுக்கை மட்டும் எண்ணிப்பார்க்க மறுப்பதா?

எது உன் உயரம்?

களர்நிலமாய்ப் பலரைச் சுட்டி உளறுவாயர்களாய் பட்டம் கட்டி
வளர்பிறையாய் உன்னை மட்டும் விரிவானில் கட்டங்கட்டிக் காட்டுவதா?

உன் அளவுகோல் அறிந்ததெல்லாம் உன் உயரம் மட்டுமே.
அதன் ஒற்றைப்பரிமாணம் மட்டுமே.

தூல உயரமே தெரியாத நிலை;
சூக்கும உயரமோ காற்றணுவலை.

தலை-கால் உயரமும், கால்-தலை உயரமும் சரிசமமானதா?

வலைமீனின் கடலுயரம் கணநேரக் கனவா?

இலைப்பச்சயத்தின் உயரம் ஏறிப்பார்க்க முடியுமா?

பள்ளத்தாக்கின் உயரம் புரிய
உள்ளிறங்கிப் பார்க்கப் பழகவேண்டும்.

உள்ளபடியே,
மலையறியாது அதன் உயரம்.

 

Series Navigationதொடுவானம் 191. சீனியர் ஹவுஸ் சர்ஜன்2020 ஆண்டில் ஈரோப்பிய விண்சுற்றி, தளவுளவி செவ்வாய்க் கோளுக்குத் தூக்கிச் செல்லப் போகும் ரஷ்ய ராக்கெட்.