உயிர்த் தீண்டல்

 

மலையுச்சியில் அந்த

மங்கைக் குரங்கு

மலையடியில் அந்த

மன்மதக் குரங்கு

 

ஒரு நாள் மன்மதன்

மலைக்குச் சென்றான்

கண்களிலெல்லாம்

காதல் பொறியாய்

மங்கையிடம் வீழ்ந்தான்

மன்மதன்

 

மலையடியின்

சுளைகளையும்

கனிகளையும்

மங்கையிடம்

கொட்டினான்

தழைகளால்

பந்தல் செய்தான்

கொடிகளால்

ஊஞ்சல் செய்தான்

ராணியானாள்  மங்கை

சேவகனானான் மன்மதன்

 

கருவுற்றாள் மங்கை

ஒன்று இரண்டு மூன்று

 

அடிக்கடி

மலையடி செல்லும் மன்மதன்

அப்பா முதுகு சொறிவான்

அம்மாவுக்குப் பேன் பார்ப்பான்

பாட்டி தாத்தாவின்

வால்கள் நீவுவான்

சகோதரங்களிடம்

பாசம் சுகிப்பான்

மீண்டும்

மலையேறும் போது

சில குட்டிக் குரங்குகள்

முதுகில் ஆடின

கன்னிக் குரங்குகள்

பல்லி ளித்தன

 

மங்கையிடம் வரும்போது

சில சமயம் பின்னிரவும் ஆகும்

 

மங்கைக்குள்

மலை வெடித்தது

பந்தலைக் கிழித்தாள்

ஊஞ்சலை அறுத்தாள்

பிள்ளைகளைப்

பிறாண்டினாள்

 

‘என்னையே

தந்தேன் உன்னிடம்

ஆனால் நீ

உதிரிகளை யெல்லாம்

உச்சத்தில் வைத்து

எச்சமாக்கினாய் என்னை

இனியும் வாழேன் உன்னோடு

தற்கொலை செய்வேன்

தள்ளிப் போ’

கத்தினாள் மங்கை

 

மன்மதன் சொன்னான்

 

‘பொழுதுகள்

கழியலாம் எப்படியும்

ஆனால் இரவில்தான்

நாம் அருகருகே

அந்த இடத்தில்

வைத்துப் பார்க்க

எனக்கென்றும் நீதான்

உனக்கென்றும் நான்தான்

நம் உயிர்த் தீண்டலில்தான்

விதைக்குள் வேர் முளைக்கிறது

நான் சூரியனே ஆனாலும்

உன் காலடிதான் வானம்

நீ மட்டும்தான்

நீ மட்டுமேதான்

என் உலகம் மங்கை

இதயம் கிழிக்கிறேன்

பார்த்துக் கொள்’

 

சீறித் தெறித்த அலை

சமாதானமாகி

கடலுக்குத் திரும்பியது

 

மங்கை சொன்னாள்

 

‘சூரியனுக்குப்

பாதை சொல்ல

இந்த வானத்துக்குத்

தகுதி யில்லை

இரத்த ஓட்டங்கள்

இதயத்தையா

இடம் மாற்றும்?

அலை களாலா

மாசுபடும் குளம்?

 

முகம் புதைத்தாள் மங்கை

மங்கை முதுகில்

முகம் பார்த்தான் மன்மதன்

 

அந்த உயிர்த் தீண்டலில்

உருகி ஓடியது மலை

 

அமீதாம்மாள்

Series Navigationகலித்தொகையில் தொல்காப்பிய மெய்ப்பாடுகள்கடல் என் குழந்தை