உறக்கம் துரத்தும் கவிதை

Spread the love

 

‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)

 

 

விழுங்கக் காத்திருக்கும் கடலாய்

நெருங்கிக்கொண்டிருக்கிறது உறக்கம்.

யாரேனும் துரத்தினால் ஓடுவதுதானே இயல்பு _

அது மரத்தைச் சுற்றியோடிப்பாடிக்கொண்டே

காதலியைத் துரத்தும்

சினிமாக் காதலனாக இருந்தாலும்கூட…

ஓடும் வேகத்தில் கால்தடுக்கி விழுந்துவிடலாகாது.

உறக்கத்தில் மரத்துப்போய்விடும் சிறகுகளைக்கொண்டு

எப்படிப் பறப்பது..?

உறங்கும்போதெல்லாம் சொப்பனம் வரும் என்று

உறுதியாகச் சொல்லமுடியாது….

எப்பொழுதும் வராது பீதிக்கனவு என்றும்.

தனக்குள்ளேயே என்னை வைத்திருக்கும் தூக்கத்திலிருந்து

வெளியேறும் வழியறியா ஏக்கம்

தாக்கித்தாக்கிச் சிதைவுறும் மனம்

தன்னைக் கவ்வப் பார்க்கும் தூக்கத்தையும்

துண்டுதுண்டாகச் சிதறடிக்கிறது.

அரைமணிநேரம் நீடிக்கும் போரின் இறுதியில்

உறக்கம் கொன்றதுபோக எஞ்சியிருக்கும்

அரைகுறைக் கவிதை யொன்று.

 

Series Navigationஈழத்து மூத்த படைப்பாளி செ. கணேசலிங்கனுக்கு  இன்று  93  ஆவது பிறந்த தினம்