உற்றுக்கேள்

==============================================ருத்ரா

என் நிழலை உமிழ்ந்தது
யார் அல்லது எது?
சன்னல் கதவுகளை
விரீர் என்று திறந்தேன்.
சூரியன் கன்னத்தில் அடித்தான்.
வெகு கோடி மடங்கு
வெப்பத்தைக் கருதரித்துக்கொடுத்தவனே!
உன் கருவுக்குள்
விதை தூவியது யார்?
நாங்கள்
ஆதித்யஹ்ருதயம் சொல்லி சொல்லி
உன்னில்
ஜனித்ததாய்
கூச்சல்கள் இட்டுக்கொண்டு தான்
இருக்கிறோம்.
உன் அப்பன் யார் அற்பனே?
பிக் பேங்க் என்று
ஆயிரம் அயிரம் கோடி
ஆற்றல் பிசாசு
ஆவி கொடுத்து
உருட்டித்திரட்டி
உரு பிசைந்த அண்டத்தில்
உன் பிண்டம் பிடித்த‌
கை எது?
கேள்வியின் திரி
நீண்டு கொண்டே இருக்கிறது.
மனித மூளையின்
முடிச்சு மண்டலங்களில் கூட‌
விடை வெடிக்கலாம்.
பிக் பேங் திரைக்கும் பின்னே
ஒரு தூரிகை அசைகிறது.
அந்த சவ்வு ஓவியங்களில்
“டி ப்ரேன்” பிரபஞ்சங்கள்
தெருக்கூத்து நடத்துகிறது.
அந்த விஞ்ஞான அரிதாரங்களை பூசிக்கொள்
அறிவுப்பிழம்பே!
அவதாரங்களின் மூட்டைகளை
அவிழ்த்துப்பார்த்து
அஞ்ஞானித்தது போதும்.
போ!
இறைவன் தேடும் இரைச்சல்களை நிறுத்து!
இந்த நிழலின்
ஒளியைத்தேடி ஒளிக்குள் ஒளிந்து போ!
ஒளி உன்னை உறிஞ்சக்கொடு.
இந்த நிழல்களின்
இதயத்துடிப்புகள் அதோ
கேட்கிறது பார்.
ஆயிரமாயிரம் பிரபஞ்சங்களையும்
அள்ளிப்பூசிக்கொண்டு
செரிபரம் செரிபல்லம் எனும்
மண்டைக்கருவூலத்து
உன் நியூரான்களுக்குள்
கேட்கிறது பார்
உற்றுக்கேள்.

=============================

Series Navigationஎல்லாம் நுகர்வுமயம்எனக்குப் பிடித்த சிறுகதைகள்